Published : 13 Sep 2016 04:17 PM
Last Updated : 13 Sep 2016 04:17 PM

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்; சட்ட மீறல்களை ஒடுக்குவோம் - கர்நாடக முதல்வர் உறுதி

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார் சித்தராமையா.

இன்று காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சித்தராமையா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்கும். காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளதால் அதனை நடைமுறைப் படுத்தித்தா ஆக வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான். தீர்ப்பின் சாதக பாதகங்களை மேல்முறையீட்டில் எடுத்துரைப்போம். நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

தமிழகத்துக்கு கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் வழங்கியே வருகிறது. இந்த கூட்டத்தில் பெங்களூரில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் இது குறித்து அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலத்திலிருந்து வருவோருக்கும், இங்கேயே இருப்போருக்கும் பாதுகாப்பு அளிப்போம். கர்நாடகாவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காவல்துறையும், அரசும் மக்களுக்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருக்கும். பிறமொழி பேசும் மக்களின் உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்.

பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்தல் கூடாது. தமிழகத்தில் உள்ள கன்னட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அம்மாநில அரசை வலியுறுத்துகிறோம். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜெயலலிதாவும் எனக்கு பதில் எழுதியுள்ளார். இரு மாநிலங்களுக்கிடையேயும் நல்லுறவு நிலவ வேண்டும்.

தமிழகத்துக்கு நீர் அளித்தாலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். கர்நாடக தரப்பு வாதங்களை காவிரி மேற்பார்வைக் கூட்டத்தில் எடுத்துரைப்போம்.

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். காவிரிப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமரை வலியுறுத்துவோம். இந்தப் பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் பிரதமரிடம் பேசுவோம்” என்றார் சித்தராமையா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x