Published : 09 Jul 2014 09:37 AM
Last Updated : 09 Jul 2014 09:37 AM

இந்திய ரயில்வே துறை... சில தகவல்கள்

* இந்தியாவில் ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் முறை பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கியது. 1924-ல் நாட்டின் பெரும் தொழிலமைப்பாக இந்திய ரயில்வே மாறியதை அடுத்து முதல்முறையாக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, பொது பட்ஜெட்டுக்கு முன்பாக, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

* ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்படுகிறது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் ரயில்வே சிறிய பங்களிப்பையே செலுத்துகிறது.

* உரிய காலத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, முதலீடு செய்யாதது ஆகியவற்றால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இந்திய ரயில்வே துறைக்கு 33 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* கடந்த 2012- ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த 5 ஆண்டுகளில் 1,600 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.95 ஆயிரத்து 736 கோடி) அரசு - தனியார் பங்களிப்பு மூலம் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், வெறும் 4 சதவீத இலக்கையே எட்ட முடிந்தது.

* புதிய பாதைகளை அமைப்பது, இணைப்பது உள்ளிட்டவை மிக மெதுவாகவே நடைபெறுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு 53,996 கி.மீ. நீளத்துக்கு ரயில்பாதைகள் இருந்தன. தற்போது 65,000 கி.மீ நீளத்துக்கு ரயில்பாதைகள் உள்ளன. அதாவது, கடந்த 67 ஆண்டுகளில் வெறும் 11 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மட்டுமே புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 164 கி.மீ. தொலைவு மட்டுமே புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நீண்ட ரயில்பாதை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. ஒரு சமயத்தில் சீனாவை விட அதிக தொலைவு கொண்ட ரயில்பாதை இந்தியாவில் இருந்தது. சீனா அசுரவேகத்தில் நவீனமயமாகத் தொடங்கியதன் விளைவு, நிலைமை மாறிவிட்டது.

* ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2006-11-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 1,750 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில்பாதைகள் போடப்பட்டன. இதே காலகட்டத்தில் சீனாவில் 14,000 கி.மீ. தொலைவுக்கு புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்திய ரயில்களில் தினமும் சராசரியாக 2.3 கோடிப்பேர் பயணிக்கின்றனர். பயணக்கட்டணத்தில் மிக அதிக அளவுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

* கடந்த 1950-ம் ஆண்டு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதி ரயில்வே துறையைச் சார்ந்து இருந்தது. தற்போது, இந்திய ரயில்வே மூன்றில் ஒரு பங்கு சரக்குகளைக் கையாளும் திறனையே பெற்றிருக்கிறது. மிகக் குறைவான வேகத்தில் செல்லும் ரயில்கள், நெரிசலான ரயில்பாதைகள் ஆகியவையே இதற்குக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x