Published : 23 Feb 2017 09:24 AM
Last Updated : 23 Feb 2017 09:24 AM

இந்திய குழந்தைகள் வங்கி என்ற பெயரில் டெல்லி எஸ்பிஐ ஏடிஎம்மில் போலி ரூ.2,000 நோட்டுகள் விநியோகம்: வங்கி வாடிக்கையாளர் அதிர்ச்சி

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம்மில் இந்திய குழந்தைகள் வங்கி என்ற பெயரில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்ட தால் வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஏடிஎம் மற்றும் வங்கி கிளை களில் இருந்து பணம் எடுப்பதற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டன. தற்போது அந்த கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தினால், இன்றும் ஏடிஎம்கள் முன்பாக நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் தெற்கு டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் சத்தர்பூர் பகுதியில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருப வர் ரோஹித். இவர் அண்மையில் சங்கம் விஹாரில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். தனது கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏடிஎம்மில் இருந்து விநியோகிக் கப்பட்ட நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் குழந்தைகள் வைத்து விளையாடும் போலி நோட்டுகள் போல இருந்தன. இதனால் திடுக்கிட்ட ரோஹித் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்று இது குறித்து புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அதே ஏடிஎம்முக்கு வந்த எஸ்ஐ தனது கணக்கில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் எடுத்து பரிசோதித்து பார்த்தார். அந்த நோட்டும் போலியாக இருந்தது. உண்மையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி என்ற பெயர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பெயர், அவரது கையெழுத்து, அசோக சக்கரம், சீரியல் எண் உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இந்த போலி ரூபாய் நோட்டில் இல்லை. அதற்கு மாறாக இந்திய குழந்தைகள் வங்கி என பெயரிடப்பட்டு பல் வேறு குளறுபடிகளுடன் அந்த ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து வங்கி ரூபாய் நோட்டுகளுடன், இந்த போலியான ரூபாய் நோட்டுகள் எப்படி கலந்தன என்பது குறித்து கண்டறிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கியும் இது குறித்து விசாரிக்க தனிக் குழுவை அமைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x