Last Updated : 10 Jul, 2016 04:44 PM

 

Published : 10 Jul 2016 04:44 PM
Last Updated : 10 Jul 2016 04:44 PM

இந்தியா, தான்சானியா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.616 கோடி கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

தான்சானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே 5 ஒப்பந்தங் கள் நேற்று கையெழுத்தாயின. இதன் ஒரு பகுதியாக தான் சானியாவுக்கு ரூ.616 கோடி கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மொசாம்பிக் மற்றும் தென்னாப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தான்சானியா சென்றடைந்தார்.

தார் எஸ் சலாம் நகருக்கு சென்ற மோடியை, அந்நாட்டு பிரதமர் காசிம் மஜலிவா மற்றும் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு மெம்பி ஆகியோர் விமான நிலையம் வந்து வரவேற்றனர்.

பின்னர் அதிபர் மாளிகைக்கு சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அதிபர் ஜான் போம்ப் ஜோசப் மகுபுலியை சந்தித்துப் பேசினார்.

அப்போது ஹைட்ரோகார்பன், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக உருவெடுத் திருக்கும் தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இணைந்து செயல்படுவது என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. இதன்படி, ஜன்ஜிபார் தண்ணீர் விநியோக திட்டத்தின் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.616 கோடியை இந்தியா கடனாக வழங்கும்.

இதுதவிர தண்ணீர் வள நிர்வாகம் மற்றும் வளர்ச்சி, ஜன்ஜிபாரில் தொழில் பயிற்சி மையம் அமைத்தல், பரஸ்பரம் அதிகாரிகளுக்கு விசாவில் இருந்து விலக்கு அளிப்பது ஆகியவை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் இந்திய தேசிய சிறுதொழில் கழகம் மற்றும் தான்சானியா சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் இடையிலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடியும் அந்நாட்டு அதிபர் மகுபுலியும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோடி பேசும்போது, “தான்சானியாவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள் வதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த நாட்டு மக்களின் தேவை மற்றும் முன்னுரிமையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்” என்றார்.

பின்னர், பிரதமர் மோடி ‘சோலார் மமாஸ்’ எனப்படும் சூரிய மின்சக்தி பெண் பொறியாளர்களை சந்தித்து உரையாடினார். கிராமங் களில் சோலார் விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை செய்துவரும் இந்தப் பெண் களுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரம்ஸ் வாசித்த மோடி

அதிபர் மாளிகையில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடியும் தான்சானியா அதிபர் மகுபுலியும் மரத்தாலான டிரம்ஸ் வாசித்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஒருகட்டத்தில் மகுபுலி டிரம்ஸ் வாசிப்பதை நிறுத்தினார். ஆனால் மோடி தொடர்ந்து வாசித்ததை கவனித்த அவரும் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தார். இந்தத் தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பானுக்கு சென்ற பிரதமர் மோடி, இசைக் கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார். அப்போது, இசைக் கலைஞர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x