Last Updated : 02 Nov, 2015 11:03 AM

 

Published : 02 Nov 2015 11:03 AM
Last Updated : 02 Nov 2015 11:03 AM

இந்தியாவில் ஐ.எஸ். தாக்கத்தை தடுக்க மத்திய அரசின் மாதிரி திட்டம் தயார்

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்கத்தை தடுக்க மத்திய அரசின் மாதிரி திட்டம் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தை தயாரிக்க தெலுங்கானா போலீஸில் பெரும் பங்காற்றியுள்ளது.

திட்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பிவைக்கும். மத அடிப்படைவாத கொள்கைகள் காலூன்றுவதை தடுக்கும் வழிமுறைகள் அதில் இடம்பெற்றிருக்கும். அறிக்கையில் உள்ள பெரும்பாலான யோசனைகள் தெலுங்கானா போலீஸாரால் முன்வைக்கப்பட்டது. காரணம், கடந்த ஓராண்டில் இந்தியாவில் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர திட்டமிட்ட 19 இந்தியர்களில் 16 பேர் தெலுங்கானா போலீஸாரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அதுதவிர ஐ.எஸ். அனுதாபிகள் 60 பேரை அடையாளம் கண்ட தெலுங்கானா போலீஸார் அத்தகவலை உளவு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரண்டர் கொள்கை:

இது தவிர மாவோயிஸ்ட்டுகளுக்கு அளித்து வரும் சரணடைபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் போல், ஐ.எஸ். அமைப்பில் சேருவதில் இருந்து தடுத்து மீட்கப்பட்டவர்களுக்கான சரண் மற்றும் மறுவாழ்வு திட்டத்தை தெலுங்கானா போலீஸார் வகுத்துத் தந்துள்ளனர். இது குறித்து தெலுங்கானா மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஐ.எஸ். ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான சரண் மற்றும் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேபோல், பிற மத சகிப்புத்தன்மை குறித்த கல்வியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

பிரிட்டனில் உள்ளது போல் தீவிரவாதத்தை தடுக்க பிரத்யேக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா அரசு பரிந்துரைத்துள்ளது" என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் உளவு அமைப்பு அதிகாரிகள், மாநில போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'அடக்குமுறை வேண்டாம்'

தெலுங்கானா போலீஸ் வழங்கியுள்ள ஆலோசனைக் குறிப்பில், "சட்ட அமைப்புகள் தேவையற்ற அடக்குமுறையை பயன்படுத்துவதால் பலனில்லை. அதேவேளையில் சரணடைபவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் போன்ற திட்டங்களால் நல்ல பலனைப் பெற முடியும். இணைய பயன்பாட்டை கூர்ந்து கவனித்தாலே ஐ.எஸ். போன்ற அமைப்புகள் கொள்கை ரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தலாம்" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x