Last Updated : 27 May, 2017 09:56 AM

 

Published : 27 May 2017 09:56 AM
Last Updated : 27 May 2017 09:56 AM

இந்தியாவின் மிக நீளமான பாலம்: நிறைவுவேறியது 20 ஆண்டு கனவு

அசாம் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அசாம் மாநிலத்தில் லோஹித் நதியின் குறுக்கே தோலா சதியா பகுதிகளுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான பாலம். படம்: பிடிஐ

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோஹித் நதியின் மீது மேல் தோலா சதியா பகுதிகளுக்கு இடையில் நாட்டின் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் முடிக்கப்பட்டது. இந்தப் பாலம் அசாம் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் 9.15 கி.மீ. நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் திஸ்பூரில் இருந்து 540 கி.மீ. தொலைவில் சதியா உள்ளது. இங்கிருந்து அருணாச்சலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகருக்கு 300 கி.மீ. தொலைவில் உள்ள தோலா என்ற இடம் வரை இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

அசாம் பாடகர் பெயர்

அசாம் மாநிலத்தின் சதியா பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் பூபன் ஹசாரிகா. அவருடைய பெயரை இந்தப் பாலத்துக்கு சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பாலம் அசாம் அருணாச்சல மாநில மக்களை இணைக்கும். அவர்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத் தும். புதிய பொருளாதார புரட்சிக் கான அடித்தளமாக இந்தப் பாலம் விளங்கும். வல்லரசாக வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு இந்தப் பாலம் உதவும். தவிர பயண நேரத்தையும் பணத்தையும் இந்தப் பாலம் மிச்சப்படுத்தும்.

இந்தப் பாலம் 165 கி.மீ. தூர பயணத்தை குறைக்கும். பயண நேரம் 7 முதல் 8 மணி நேரம் குறையும். பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பாலம் புதிய கதவை திறந்து விட்டிருக்கிறது. எனவேதான் ஒட்டுமொத்த நாடும் இந்த பாலம் எப்போது போக்குவரத்துக்கு திறக்கப் படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தது.

அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பாலம் முக்கிய பங்காற்றும். நிரந்தரமான வளர்ச்சியை அடைய வேண்டு மானால், அதற்கு உள்கட்டமைப்பு கள் முதலில் தேவை. அதற்கேற்ப நிரந்தரமான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தப் பாலம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஞ்சி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களது பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். ஆர்கானிக் இஞ்சியை விவசாயிகள் உற்பத்தி செய்தால் சர்வதேச சந்தை அவர்களுக்கு சாத்தியப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பாலத்தின் முக்கிய அம்சங்கள்

நாட்டிலேயே மிக நீளமான பாலத்தைப் அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அதன் முக்கிய அம்சங்கள்: *

* பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோஹித் நதியின் குறுக்கே, தோலா சதியா இடையே 9.15 கி.மீ. நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அசாம் கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தை இணைக்கிறது.

* அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தப் பாலத்தில் சென்றால், பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாக குறையும். 165 கி.மீ. தூரம் குறைந்துவிடும்.

* இந்தப் பாலம் மும்பையில் உள்ள பாந்த்ரா வோர்லி இடையிலான பாலத்தை விட 3.55 கி.மீ. அதிக நீளமுடையது.

* கடந்த 2011-ம் ஆண்டு பாலம் கட்டும் பணி தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,056 கோடி செலவிடப்பட்டுள்ளது. ராணுவ பீரங்கிகள் உட்பட 60 டன் பாரத்தை தாங்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

* இந்திய சீன எல்லைப் பகுதியை விரைவில் அடையவும், அவசர காலத்தில் சீன எல்லைப் பகுதிகளுக்கு இந்திய ராணுவம் துருப்புகளை வேகமாக கொண்டு செல்லவும் இந்தப் பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அருணாச்சலப் பிரதேசத்தில் விமான நிலையம் இல்லாததால், இந்தப் பாலம் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். சாலை வழியாக வந்து செல்வது அவர்களுக்கு எளிதாக அமையும்.

* தொழிற்துறை முதலீடுகள் பெருகவும், வடகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுடனான எல்லைப் பகுதி வர்த்தகம் அதிகரிக்கவும் இந்தப் பாலம் முக்கிய பங்காற்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x