Last Updated : 16 Sep, 2014 03:26 PM

 

Published : 16 Sep 2014 03:26 PM
Last Updated : 16 Sep 2014 03:26 PM

10 மாநில இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு; சமாஜ்வாதி, காங்கிரஸுக்கு ஏறுமுகம்

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதி, 33 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன.

குஜராத்தின் வடோதரா, உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி, தெலங்கானாவின் மேடக் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ் தான், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, சிக்கிம், சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 33 சட்டசபை தொகுதி களுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு மாலையில் முழுமையான முடிவுகள் வெளியாகின. சத்தீஸ்கர் மாநிலம், அன்டாகர் சட்டசபை தொகுதியில் மட்டும் வரும் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

13 தொகுதிகள் இழப்பு

இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டசபை தொகுதிகளில் பாஜக வசம் 24 தொகுதிகள் இருந்தன. இதில் 13 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜக இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதேபோல ராஜஸ்தானின் 4 தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றில் வெற்றிவாகை சூடியுள்ளது.

மோடி தொகுதியில் வெற்றி

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகிய வடோதரா (குஜராத்) மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ராஜன் பட் 5,26,763 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்துக்கு 1,97,256 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பதவி விலகிய மெயின்புரி (உத்தரப் பிரதேசம்) மக்களவைத் தொகுதியில் அவரது உறவினர் தேஜ் பிரதாப் சிங் 3.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பிரேம் சிங் சக்கியாவை தோற்கடித்தார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த மேடக் மக்களவைத் தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் கோட்டா பிரபாகர் ரெட்டி 5,71,800 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சுனிதா லட்சுமி ரெட்டிக்கு 2,10,523 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஜெயபிரகாஷ் ரெட்டிக்கு 1,86,334 வாக்குகளும் கிடைத்தன.

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டசபை தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியாகின. இதில் பிஜ்னோர், தாக்கூர்வாரா, நிகாசன், ஹரிம்பூர், சார்க்ஹரி, சிராத்து, பல்ஹா, ரோஹன்யா ஆகிய 8 தொகுதிகளை ஆளும் சமாஜ்வாதி கைப்பற்றியது. சஹரான்பூர் நகர், நொய்டா, லக்னோ கிழக்கு ஆகிய 3 தொகுதிகள் மட்டும் பாஜகவுக்கு கிடைத்தன.

குஜராத்தில் காங்கிரஸ் -3

குஜராத் மாநிலத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் மணிநகர், தன்கரா, தலாஜா, ஆனந்த், மத்தார், லிம்கெடா ஆகிய 6 தொகுதிகளை பாஜக தக்கவைத்துக் கொண்டது. தீசா, காம்பாலியா, மங்ரோல் ஆகிய 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் -3

ராஜஸ்தானில் நான்கு தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் வெயர், நசிராபாத், சுராஜ்கர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது. ஆளும் பாஜகவுக்கு கோட்டா தொகுதி மட்டுமே கிடைத்தது.

மேற்குவங்கத்தில் பாஜக

மேற்குவங்கத்தில் சவுரங்ஜி, பஷிர்ஹட் தக்சின் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சவுரங்ஜி தொகுதியை ஆளும் திரிணமூல் காங்கிரஸும் பஷிர்ஹட் தக்சினை பாஜகவும் கைப் பற்றின.

1999-ல் மேற்குவங்கத்தில் ஒரு சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றிவெற்றது. அதன்பின் இப்போதுதான் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியைக் கைப்பற்றி பாஜக மீண்டும் புதிய கணக்கை தொடங்கியுள்ளது.

அசாமில் தலா ஒன்று

அசாம் மாநிலத்தின் 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தெலுங்குதேசம் வெற்றி

ஆந்திராவில் நந்திகாமா சட்டசபை தொகுதி இடைத்தேர்த லில் தெலுங்குதேசம் வெற்றி பெற்றது. திரிபுராவின் மனு தொகுதி யில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் வெற்றிவாகை சூடியது.

சிக்கிம் மாநிலத்தில் ரன்காங் யன்காங் தொகுதியில் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சகோதரர் ஆர்.என்.சாம்லிங் வெற்றி பெற்றார். அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x