Published : 23 May 2014 03:01 PM
Last Updated : 23 May 2014 03:01 PM

ஆப்கானில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாத தாக்குதல்: மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தான் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானில் உள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீராட் நகரில் இந்திய தூதரக அலுவலகம் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 3.25 மணி அளவில் 4 தீவிரவாதிகள் தூதரக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்த இந்திய திபெத்திய எல்லை படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக ஆப்கானிஸ்தான் ராணுவமும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரிடம் பேசினார்.

அப்போது அங்குள்ள நிலை குறித்து அவர் விசாரித்தார். ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார் . ஆப்கானில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் கலந்து கொள்கிறார் என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x