Published : 17 Apr 2017 05:00 PM
Last Updated : 17 Apr 2017 05:00 PM

அத்துமீறும் பயணிகளுக்கு அபராதம் நிர்ணயித்தது ஏர் இந்தியா

விமான பயணத்தின் போது விமான நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் அத்துமீறி ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு ரூ.5 முதல் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் நடத்தை விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஏர் இந்திய விமான ஊழியர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான மதிப்பை குறைக்கும் என்பதால் பயணிகள் நடத்தை விதிமுறைகளை வகுத்துள்ளதோடு அவற்றை மீறுபவர்களுக்கு அபராதம் நிர்ணயித்துள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா வகுத்துள்ள விதிமுறைகள் பின்வருமாறு:

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளால் விமான புறப்பாடு, தரையிறக்கத்தில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகை வசூலிக்கப்படும்.

* அதன்படி, விமான புறப்பாடு, தரையிறக்கத்தில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் அபராதமாக ரூ.5 லட்சமும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் ரூ.10 லட்சமும், இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் ரூ.15 லட்சமும் சம்பந்தப்பட்ட பயணியிடம் இருந்து வசூலிக்கப்படும்.

* ஏர் இந்தியா விமான ஊழியர்கள் ஊடகங்களுக்கு நேடியாக பேட்டியளிக்க தடை விதிக்கப்படுகிறது.

* தகராறில் ஈடுபடும் பயணிகள் மீது சட்டத்துக்கு உட்பட்டு போலீஸ் புகார் / எப்ஐஆர் பதிவு செய்யப்படும்

* பயணிகள் ரகளையில் ஈடுபட்டால் உடனடியாக விமான நிலைய மேலாளர், மூத்த மேலாளர், ஆர்.டி., சி.டி., சிஎம்டி உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கே தகவல் அளிக்கப்பட வேண்டும்.

* சட்டத்திட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்ளும் பயணிகளை கையாள்வது எப்படி என்பது குறித்து விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கடந்த 7-ம் தேதி (ஏப்.7-2017) திரிணமூல் எம்.பி. டோலா சென் வருவதற்கு தாமதமானது. சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமான ஊழியரை தாக்கியது, ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை ஒய்.எஸ்.ஆர்.சி., எம்.பி., மிதுன் ரெட்டியை தாக்கியது போன்ற சம்பவங்களை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x