Last Updated : 14 Nov, 2015 09:27 PM

 

Published : 14 Nov 2015 09:27 PM
Last Updated : 14 Nov 2015 09:27 PM

ஆவலை வீசுவோம் 15 - தகவல் பலகை தேடியந்திரங்கள்

இணையத்தில் உயிர்ப்புடன் விவாதங்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் இணைய குழுக்கள், விவாத குழுக்களில் பகிரப்படும் கருத்துகளை தேட உதவும் சிறப்பு தேடியந்திரங்கள் இவை.

தேடியந்திரங்களில் பல வகை இருக்கின்றன. இணைய தேடலுக்காக பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் கூகுள் மற்றும் பரவலாக அறியப்பட்ட அதன் போட்டி தேடியந்திரங்கள் எல்லாமே பொது தேடியந்திரங்கள் எனும் பிரிவின் கீழ் வருகின்றன. அதாவது இணையம் முழுவதும் தேடி எல்லா வகையான தகவல்களையும் பட்டியலிடுபவை. பொது பயன்பாட்டிற்கான தேடியந்திரங்கள் இவை.

இணையதளங்கள், இணைய பக்கங்கள், தகவல்கள், செய்திகள், ஏன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேட இந்த வகை தேடியந்திரங்கள் ஏற்றவை.

பொது தேடியந்திரங்கள் தவிர வேறு முக்கிய தேடியந்திரங்களும் அநேகம் இருக்கின்றன. இவை குறிப்பிட்ட நோக்கிலானவை. அதாவது, இணையத்தை பொதுவாக தேடாமல் குறிப்பிட்ட ஒரு இலக்கைக் கொண்டு தேடுபவை. முழு இணையத்தையும் தேடாமல் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் அகழ்ந்தெடுக்கும் தேடியந்திரங்களும் இருக்கின்றன. சிறப்பு தேடியந்திரங்கள் மற்றும் குறுந்தேடியந்திரங்கள் என்று இவற்றை வகைப்படுத்தலாம்.

பொது தேடியந்திரங்களுக்கு இவை மாற்று அல்ல; ஆனால் பொது தேடியந்திரங்களின் போதாமையை உணரும் போது இவை கைகொடுக்கும். மேலும், குறிப்பிட்ட நோக்கத்திலான முடிவுகளை மட்டும் எதிர்நோக்கும் நேரங்களில் இவை பேருதவியாக இருக்கும்.

சிறப்பு தேடியந்திரங்களின் பட்டியலில் முதலில் தகவல் பலகை தேடியந்திரங்களை பார்க்கலாம்.

இணையம் என்பது இணையதளங்களால் ஆனது மட்டுமா என்ன? அது தகவல் பலகைகளையும் உள்ளடக்கியது தானே. செய்தி குழுக்களும் அதன் முக்கிய அங்கம் அல்லவா? இவற்றில் நடைபெறும் விவாதங்களும், பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளும் தானே இணையத்தை துடிப்பானதாக வைத்திருக்கிறது. இணையத்தின் ஜனநாயகத்தனமையை காக்கவும்,ஊக்குவிக்கவும் இவை உதவி வருகின்றன.

இணையம் முழுவதும் உள்ள பல வகையான விவாத குழுக்களில் பகிரப்படும் தகவல்களை தேடித்தரும் பணியை தான் ’தகவல் பலகை’ தேடியந்திரங்கள் செய்கின்றன.

இந்த இடத்தில் மேசேஜ் தகவல் பலகை பற்றி கொஞ்சம் யோசித்துப்பார்க்கலாம்.

இந்த பெயரை கேட்டதுமே இணைய அனுபவசாலிகள் பிளேஷ் பேக்கில் மூழ்கி தகவல் பலகைகள் இணையத்தில் ஆதிக்கம் செலுத்திய நாட்களை நினைத்துப்பார்க்கலாம். அதே நேரத்தில்,

ரெட்டிட் மற்றும் பேஸ்புக் தலைமுறைக்கு தகவல் பலகை என்பதே புரியாத புதிராக இருக்கலாம். இவற்றை ஏதோ இணையத்தின் பழைய சங்கதி என நினைக்கலாம்.

மெசேஜ் போர்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் தகவல் பலகைகள் இணையத்தின் பழமையான வசதி என்றாலும் பழங்கதையாகிவிட்டவை அல்ல. முன்போல இவை பிரபலமாக இல்லையே தவிர, இல்லாமல் போய்விடவில்லை.

இன்னமும் எண்ணற்ற இணைய குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. விவாதங்களில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கும்,கருத்து பரிமாற்றங்களை விரும்புகிர்களுக்கும் இவை தான் புகலிடமாக இருக்கின்றன.

இணையம் அறிமுகமான காலத்தில் தகவல் பலகைகளும்,அரட்டை அறைகளும் தான் இணையவாசிகள் பங்கேற்பதற்கும், பங்களிப்பதற்குமான வழியாக இருந்தன. அரட்டை அறை விவாதங்களை விட நீளமான விவாதங்கள் நடைபெறும் இடமாக தகவல் பலகைகள் அமைந்தன. மேலும் தகவல் பலகைகளில் கருத்துகள் (தற்காலிகமாகவேனும்)ஆவணப்படுத்தி வைக்கப்படும்.

தகவல் பலகை அல்லது இணைய குழுக்களுக்கு என்று பொதுவான அமைப்பு ஒன்று உண்டு. இவற்றில் உறுப்பினர்கள் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டு விவாதத்தை துவங்கி வைக்கலாம். மற்ற உறுப்பினர்கள் அதை ஒட்டியோ வெட்டியோ கருத்து தெரிவித்து விவாதத்தை தொடரலாம். இந்தத் தொடர்ச்சி சரடு ( திரெட்) என குறிப்பிடப்படும். பிரதான தலைப்பில் அல்லாமல், பல்வேறு உப தலைப்புகளிலும் தனியே விவாதம் நடக்கும். இவை துணைத்தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படும். இந்த விவாதங்களை நெறிப்படுத்த நிர்வாகி மற்றும் நெறியாளர்களும் இருப்பார்கள்.

குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த கருத்து பரிமாற்றத்திற்கான இணைய சமூகங்களாக இந்த குழுக்கள் அமைகின்றன.

செய்தி இணையதளங்களில் பின்னூட்டம் வாயிலாக கருத்துகள் தெரிவிக்கும் வசதி இருந்தாலும் இதில் இணையவாசிகளுக்கு அதிக பங்கு கிடையாது. மேலும் தள நிர்வாகிகள் நினைத்தால் இவற்றை நீக்கிவிடலாம்.

ஆனால், இணைய குழுக்கள் அப்படி இல்லை. இது இணையவாசிகளின் இடம். இவற்றில் ஒத்த கருத்துள்ளவர்கள் விவாதத்தை துவக்கி வைக்கலாம். அதில் பங்கேற்கலாம். புதிய விஷயங்களை ,மாறுபட்ட கோணங்களை தெரிந்து கொள்ளலாம். இவை தனி உலகம்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இணைய குழுக்கள் அநேகம் இருக்கின்றன. பல துறைகளில், பல வகைகளில் இணைய குழுக்கள் இருக்கின்றன. தமிழ் மொழியிலும் கூட இணைய குழுக்களாக துடிப்புடன் செயல்படும் இணைய தளங்களும் அநேகம் இருக்கின்றன.

புகழ்பெற்ற திரைக்களஞ்சியமாக கருதப்படும் ஐஎம்டிபி தளத்திலும் திரைப்படம் சார்ந்த விவாதம் தொடர்ந்து நடைபெறுவதை பார்க்கலாம்.

இணையத்தின் பிரதான வெளியில் புறக்கணிக்கப்படும் விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் இணைய குழுக்களில் அரங்கேறி வருகின்றன.

தகவல் பலகைகள் பற்றி, அவற்றின் வரலாறு பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. முன்னோடி இணைய சமூகமாக விளங்கிய யூஸ்நெட் பற்றியும் அசைபோடலாம். தகவல் பலகைகளின் ஆதார அம்சம் இணையவாசிகள் விவாதத்தில் ஈடுபடுவதற்கான இணைய சமூகங்களாக அவை இருக்கின்றன என்பதுதான்.

புவியில் உள்ள எந்த தலைப்பு குறித்தும் இணைய குழுவில் ஒரு பதிவை இட்டு, விவாதத்தை துவக்கி வைக்கலாம்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் மற்றும் ரெட்டிட் மூலம் விவாத குழுக்களை உருவாக்கி கொள்ளும் வசதி எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னரே இணையத்தில் உரையாடல் நடைபெறும் இடங்களாக தகவல் பலகைகள் அமைந்திருந்தன என்பது தான் அவற்றின் சிறப்பு.

இணையத்தில் செய்திகளையும் ,தகவல்களையும் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் கருத்துகளையும், பார்வைகளையும் அறிய விரும்பினால் இணைய குழுக்களை தான் நாட வேண்டும். இணைய குழு உறுப்பினர்களுக்கு இது நன்றாகத்தெரியும்.

எல்லாம் சரி, இணைய குழுக்கள் சின்னதும் ,பெரிதுமாக எண்ணற்றவையாக இருக்கும் போது அவற்றில் நடைபெறும் விவாதங்களை எப்படி தெரிந்து கொள்வது? இணைய குழுக்களில் பகிரப்பட்ட கருத்துக்களில் குறிப்பிட்ட தலைப்பு சார்ந்தவற்றை எப்படி கண்டறிவது? இணைய குழுக்களில் எப்படி தேடுவது?

இந்த கேள்விக்கு பதிலாக அமைகின்றன தகவல் பலகை தேடியந்திரங்கள். அதாவது இணைய குழுக்களில் நடைபெறும் விவாதங்களில் இருந்து கருத்துக்களை தேடித்தருபவை.( ரெட்டிட் இணைய சமூகத்தில் நடைபெறும் விவாதங்களையும் கூட இவற்றின் மூலம் தேடலாம்).

கூகுள் மற்றும் யாஹுவிலேயே கூட இணைய குழுக்கள் தகவல்களை தேடும் வசதி இருக்கிறது. இவை பத்தோடு பதினொன்றாக அளிக்கப்படுபவை.

ஆனால், >boardreader.com இணையகுழுக்களில் மட்டுமே பிரதானமாக தேடித்தரும் தேடியந்திரம்.

கூகுளைப் பயன்படுத்துவது போலவே இதையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள தேடல் கட்டத்தில் தேவையான குறிச்சொல்லை டைப் செய்தால், தேடும் முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன. எல்லாமே இணைய குழுக்களின் விவாதங்களில் எடுத்து வரப்பட்டவை. முடிவுகளின் இடது பக்கத்தில் அவை எந்த குழுவில் இருந்து எடுக்கப்பட்டதோ அதன் லோகோ இடம்பெற்றிருக்கும். முடிவுகள் தேதி வாரியாக வரிசையாக இடம்பெற்றிருக்கும்.

இணையம் எதை விவாதிக்கிறது என்பதை அறிய அல்லது நீங்கள் விரும்பும் தலைப்பு தொடர்பாக இணையத்தில் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதை அறிய போர்ட் ரீடரில் தேடிப்பார்க்கலாம்.

வீடியோ, திரைப்படங்கள், செய்திகள் ஆகிய தலைப்புகளிலும் முடிவுகளை பட்டியலிட்டு வழிகாட்டுகிறது இந்த தேடியந்திரம். ஐஎம்டிபி போன்ற பிரபலமான இணைய குழுக்களிலும் தனியே தேடலாம். ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் தேடலாம்.

போர்ட்ரீடர் போலவே இணைய குழுக்களில் தேடுவதற்கான மற்றொரு தேடியந்தரம் ஒம்கிலி ( >omgili.com). இதன் தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்து தேடினால் முடிவுகளை அழகாக பட்டியலிடுவதுடன் கூடுதல் விவரங்களையும் அளிக்கிறது.

கருத்து இடம் பெற்ற இணைய குழு, அதன் உறுப்பினர் எண்னிக்கை, கருத்துகளின் எண்ணிக்கை, விவாத சரடு ஆகிய விவரங்கள் முடிவுக்கு இடது பக்கத்தில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

விவாத குழுக்கள் தவிர, செய்திகள் மற்றும் வலைப்பதிவுகளை தனியே குறிப்பிட்டும் தேடலாம். தமிழில் தேடும் வசதியும் இருக்கிறது. இதே போல போர்ட் டிராக்கர் உள்ளிட்ட சில தேடியந்திரங்களும் இருந்தன. இணையம் என்ன விவாதிக்கிறது என்பதை அறிய இந்த தேடியந்திரங்களில் ஒரு முறை தேடிப்பாருங்கள்.

- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x