Last Updated : 25 Sep, 2016 11:17 AM

 

Published : 25 Sep 2016 11:17 AM
Last Updated : 25 Sep 2016 11:17 AM

வளர்ப்புப் பிராணி அல்ல காமம்

மேற்கத்திய இலக்கியங்களில் காமம் சார்ந்த படைப்புகள் நிறைய உண்டு. இவற்றை ‘போர்னோ ரைட்டிங்’, ‘எரோட்டிகா’ என இரண்டு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம் தான். முன்னது, காமத்துக்கான வடிகால். பின்னது, காமத்தை ஆராதிக்கும் அழகியல்.

அந்த அழகியலைப் போற்றும் விதமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது ‘தி ப்ளஷர் பிரின்சிபல்’ எனும் புத்தகம். முழுக்க முழுக்க ‘எரோட்டிகா’ சிறுகதைகளின் தொகுப்பு. ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் ‘சோஷியல் அஃபையர்ஸ் எடிட்ட’ராக இருக்கும் ஜி.சம்பத் தொகுத்த இந்தப் புத்தகத்தை அமரிலிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் முதன்முதலில் வெளி வந்த நாவல்களே இத்தகைய விஷயங்களை உள்ளடக்கியிருந்தன. அந்தப் பாரம்பரியம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்த எழுத்துகளில் பல தரமான இலக்கியமாகவும் இருக்கின்றன. அதனால் இப்படியான படைப்புகளுக்கு உலக அளவில் நல்ல அங்கீகாரமும் சந்தையும் கிடைக்கின்றன.

ஆனால், தமிழர்களுக்குத் தெரிந்த ‘எரோட்டிகா’ என்பது இன்றளவும் சரோஜா தேவியும் சபிதா பாபியும் மட்டும்தான். ‘செக்ஸ்’ என்ற சொல்லை ‘பாலினம்’ என்ற பொருளுக்கு மேலே நாம் புரிந்துகொள்ளவேயில்லை. அந்தப் புரிந்துகொள்ளல் இல்லாததால்தான் இன்று நம் சமூகத்தில் பல அனர்த்தங்கள் அரங்கேறுகின்றன. ஆண் பெண் உறவு பக்குவமான நிலையை இங்கே இன்னமும் எட்டாமல் இருப்பதும் இதனால்தான். நடைபெறும் பல பாலியல் வன்கொடுமைகளுக்கு நாம் மவுன சாட்சியாக இருப்பதற்குக் காரணமும் இந்தப் புரிதல் இன்மைதான்.

அதைத்தான் ஜி.சம்பத் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் தெரிவிக்கிறார். “அந்நிய முதலீட்டை விடவும், நல்ல அரசாட்சியை விடவும், 9 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை விடவும், நல்லதொரு கால்பந்து அணியை விடவும் இன்று இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படுவது இத்தகைய ‘எரோட்டிகா’ கதைகளின் தொகுப்புகள்தான். இந்தியாவுக்கு இப்படியொரு புரட்சி தேவை” என்கிறார்.

தஸ்லிமா நஸ்ரின், விக்ரம் கபூர், அமிதாவ் குமார், சைரஸ் மிஸ்த்ரி, கங்கனா பாசு, மீனா கந்தசாமி உள்ளிட்ட, ஆங்கிலத்தில் இன்று எழுதும் முக்கியமான எழுத்தாளர்கள் 15 பேரின் சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். இவர்களில் ஒன்பது பேர் பெண்கள். இவர்களில் சிலருக்கு ஏற்கெனவே காமம் தொடர்பான கதைகளை எழுதிய அனுபவம் உண்டு. சிலர் முதன்முறையாக எழுதியுள்ளனர்.

தன்னிடம் கற்கும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர், வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை நிர்வாணமாகப் பார்க்க ஆசைப்படும் முதியவர், உறவுக்காரப் பெண்ணிடம் முகிழ்க்கும் காமத்தை வெளிப்படுத்தும் இளைஞன், பதின்பருவத்தில் முதன்முதலில் காம அனுபவத்தைப் பெறும் சிறுவன், தன் கணவனின் தோழியுடன் உறவுகொள்ளும் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட பெண், பெண்களிடம் தன் இச்சைகள் தீர்ந்ததும் இயந்திரம் போன்று எழுந்து செல்லும் ஆண்களை வெறுக்கும் திருநங்கை, வேலைக்காரப் பெண்ணை மனதில் நினைத்துக் கொண்டு மனைவியுடன் உறவுகொள்ளும் ஆண் என இந்தப் புத்தகத்தில் தென்படும் கதைக்களங்கள் வித்தியாசமானவை. இந்தக் கதைகளில் வரும் கதை மாந்தர்கள் நம்மில் பல வகையான எண்ணச் சிதறல்களை ஏற்படுத்திச் செல்கிறார்கள்.

இந்தக் கதைகள் அனைத்திலும் தென்படும் மையச் சரடு, காமம் கள்ளத்தனமாக அனுபவிக்கப்படுகிறது என்பதுதான். முறைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ காமம் ஒன்றும் வளர்ப்புப் பிராணி அல்ல. அது ஒரு காட்டு விலங்கு. சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கும் பசி மிகுந்த விலங்கு. எங்கே கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றனவோ அங்கே கள்ளத்தனங்களும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். எந்த நேரமும் விழிப்புடன் இருக்கும் அந்த உணர்வை நன்கு புரிந்துகொள்வது மட்டுமே நாம் இந்தச் சமூகத்தில் மனிதர்களாக நடமாடுவதற்கான தகுதியை ஏற்படுத்தித் தரும். அதற்கு இத்தகைய படைப்புகள் உதவும்.

இதுபோன்ற ஒரு தொகுப்போ அல்லது இந்தக் கதைகளின் மொழிபெயர்ப்போ தமிழில் சாத்தியப்படுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x