Last Updated : 19 Feb, 2017 11:15 AM

 

Published : 19 Feb 2017 11:15 AM
Last Updated : 19 Feb 2017 11:15 AM

பூரண நிலையை எட்டிய ஓவியங்கள்

சென்னை ஓவியக் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் இருக்கும் முதலாம் ஆண்டு வகுப் பறையின் வாயிலிலுள்ளது அவரது இருக்கை. அதைச் சுற்றிலும் பேப்பரும் கேன்வாஸும் இரைந்து கிடக்கும். எதை யாவது வரைந்துகொண்டே இருப்பார். அவர் ஓவியர் ராமன். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ராமனுக்குப் பள்ளி நாட்களில் இருந்தே ஓவியத்தின் மீது தீரா ஆர்வமுண்டு. அதனால் சென்னை ஓவியக் கல்லூரியில் ஷீட் மெட்டல் பிரிவில் சேர்ந்து பட்டயப் படிப்பு பயின்றார். பின்பு வண்ணக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். 1970-ம் ஆண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

நிதானமான அணுகுமுறையைக் கொண்ட ராமன் மாணவர்களுடன் கலந்துரையாடுவது அபூர்வம். சொற்பமான உரையாடல்களையே முன்னெடுத்த போதும், அவை மாணவர் களுக்குப் பெரும் உத்வேகத்தை கொடுத்தன. ஆசிரியர்களின் படைப்பு சார்ந்த இயக்கமும் ஆளுமையும் மாணவர்களின் பயிற்சித் தூண்டுதலுக்கு இன்றியமையாதவை. அந்த வகையில் ராமன், சுமார் இரண்டு தலைமுறை மாண வர்களின் படைப்புகளுக்கான உந்துதலாக இருந்திருக்கிறார்.

பணிக்கர் ஓவியக் கல்லூரியின் முதல் வராக இருந்தபோது, கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்களான ராமன், முருகேசன், அந்தோனிதாஸ், சந்தான ராஜ், ராம் கோபால் முதலியோர் சிறந்த ஓவியர்களாக அப்போதைய ஆசிரியர்க ளால் பயிற்றுவிக்கப்பட்டனர். “ராமன் கும்ப கோணத்தில் ஆசிரியராக இருந்தபோது அங்கு முதல்வராக இருந்த சீனிவாசலுவின் வழிகாட்டுதலில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில் ஓவிய சிற்பப் படைப்பு களின் மீது ஈடுபாட்டுடன் தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அதுதான் அவருடைய படைப்புக்கு ஒரு நிலைத்தன்மையைக் கொடுத்தது” என்கிறார் சண்முக சுந்தரம். அவருடன் இணைந்து தன்னுடைய பயிற்சியை பதிக் முறையில் துணிகளில் வடிவமைத் துள்ளார், அதுவே அவரது ஆரம்பகாலப் படைப்பாக இருந்துள்ளது.

“தொடர்ந்து மரபு சார்ந்த வடிவங்களின் மீதான பார்வை, தோல்பாவைக் கூத்தின் வடிவம் அதன் அலங்காரம், இயக்கம் முதலிய வற்றின் தாக்கம் இவருடைய கோடுகளுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது என்றும் ஆகவே, அவை முழுமையான கலைப் படைப்புகளாக உருமாற்றமடைந்தன என்றும்” சொல்கிறார் சண்முக சுந்தரம்.

பெரும்பாலும் வெள்ளைப் பரப்பில் கறுப்புக் கோடுகளும் அல்லது கறுப்புப் பரப்பில் வெள்ளைக் கோடுகளும் கொண்டு சொற்பமான வண்ணப் பூச்சுடன் அழுத்த மான கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட இவரது ஓவியங்கள் எந்தப் பரப்பின் மீது வேண்டுமானாலும் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் இயல்புடையவை.

பிரதேச வாழ்க்கை, பண்பாடு, வடிவங்களின் மீது நவீனம் எனச் சோதனை முயற்சியில் பயணப்பட்ட காலத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் நாட்டார் கலை மரபை நோக்கித் திரும்பியுள்ளனர். அவர்களுள் ராமனும் ஒருவர். அவர் தன்னுடைய படைப் புகளில் பெரும்பாலும் புராண இதிகாச நாயக நாயகிகள் மற்றும் சாமானியர்கள் கதை மாந்தர்களாக உறைந்திருக்கும் ஒரு பழமைக்கும், அலங்காரம் அதீத ஒளிர்தல் கொண்ட கூத்து மேடையின் வசீகரிப்புக்கும் இடையில் பார்வையாளர் களை நிலைகொள்ளச் செய்கிறார். அது பார்வையாளர்களைத் துன்புறுத்தாமல் ஊடாட அனுமதிக்கும் இயைபு கொண்டிருந் தது. மக்கள் கலை மரபின் ஓவியக் கண்ணியாகவும் இது செயல்பட்டிருக்கிறது.

மிக எளிமையான அணுகுமுறையைக் கொண்ட ராமன் இடைவிடாது இயங்கி வருபவர். தொடர்ச்சியான பயணத்தில் அவரது படைப்பு சிறிது சிறிதாகச் செழுமைப்பட்டு ஒரு முழுமையை அடைந்திருக்கிறது.

தொடர்ச்சியான ஓவியக் கண்காட்சிகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஓவிய முகாம்களில் பங்கேற்றிருக்கும் ராமன் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர். ஓய்வில்லாமல் தொடர்ந்து இயங்கும் ராமன் ஓவியக் கலைக்கும் தன் வாழ்க்கைக்குமான பூரணத்தை எட்டியவர்.

க.நடராஜன் - ஓவியர், சிற்பி. தொடர்புக்கு: natsviolet@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x