Last Updated : 12 Feb, 2017 11:27 AM

 

Published : 12 Feb 2017 11:27 AM
Last Updated : 12 Feb 2017 11:27 AM

நாவல் விடம்பனம் : வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்

ஓவியராக அறியப்பட்டிருக்கும் சீனிவாசன் நடராஜனின் முதல் நாவல் விடம்பனம். வாசித்து முடித்த பின்னர் இந்த நாவலில் பலதும் இருப்பது போலத் தோன்றும். எதுவும் குறிப்பாக இல்லாதது மாதிரியும் தோன்றும். இந்த மனப்பதிவை ஏற்படுத்துவதுதான் நாவலின் நோக்கமாகத் தெரிகிறது. நாவல் என்ற வடிவம், ‘புதியது’என்ற அதன் தன்மையை ‘விடம்பனம்’ மூலம் தமிழில் புதுப்பித்துக்கொண்டுள்ளது. விடம்பனம் கீழத் தஞ்சைக்குரிய சொல் போலிருக்கிறது. இலக்கியத்திலேயேகூட அதிகம் பயின்று வராதது. அந்தப் பகுதியின் மூலவர் ந. முத்துசாமி பயன்படுத்தி ‘கசடதபற’ இதழில் படித்த நினைவு. கேலி, கிண்டல், இகழ்ச்சி என்று பொருள் தரும் இந்தச் சொல் நாவலின் ஆதாரத் தொனியைச் சுட்டுகிறது.

மனித வாழ்க்கையை வரலாறு வஞ்சித்துத் துயரத்தில் தள்ளிவிட்டதாகப் புலம்பி அதைத் துண்டுதுண்டாக நவீனத்துவ இலக்கியம் சித்தரிக்கும். அச்சித்தரிப்பில் வாழ்க்கை குறித்த அவநம்பிக்கை தூக்கலாகத் தொனிக்கும். ஆனால், பின்நவீனத்துவம் வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கேலியாகவும் கிண்டலாகவும் காலத்தை முன்பின்னாகப் புரட்டியும் வர்ணிக்கும். சீனிவாசனின் நாவல் இதைத்தான் செய்கிறது. புனைவின் சுதந்திரங்கள் அனைத்தும் ஒரு கொண்டாட்ட மனநிலையில் அனுபவிக்கப்பட்டுள்ளன. சுய எள்ளல் அதன் எல்லையைத் தொடுகிறது.

கதையில்லாத நாவல்

நாவல் மரபு பின்பற்றி வந்த எல்லா அடிப்படைக் கூறுகளையும் இப்படைப்பு குப்புறத் தள்ளியுள்ளது. சராசரியாக மூன்று பக்கங்களுக்கு மேல் ஓர் அத்தியாயம் நீள்வதில்லை. ஒன்றிலிருந்து அடுத்ததுக்குத் தொடர்ச்சியில்லை. வெவ்வேறு எழுத்துருக்களில் வெவ்வேறு குரல்கள். நம்பிக்கைகளும் கருத்துகளும் வெளிப்படுத்தப்பட்ட அடுத்த கணமே அவை துடைத்து அழிக்கப்படுகின்றன. கட்சிகளும் இயக்கங்களும் ஜாதிச் சங்கங்களும் அரசுகளும் அவை தரும் இலவசங்களும் உச்சபட்ச நையாண்டிக்கு உள்ளாகின்றன. கதைசொல்லி, அம்மாஞ்சி, ஆடுதன் ராணி, மைனர், குடிகாரன் ஆகியோரே பெரும்பாலும் கதையாடலை நகர்த்துகிறார்கள். டிராக்டர்கள் அறிமுகமான 1960கள் தொடங்கி 2016 தேர்தல் வரையிலான தமிழக வரலாறு கீழத் தஞ்சையை மாதிரியாக வைத்து விரிகிறது. தேர்தல் அரசியல், கட்சிகளின் சிறுசிறு சாதனைகள், பெரும்பெரும் பொய்மைகள், பள்ளி, மருத்துவமனை, பேருந்து ஆகியவற்றின் அறிமுகத்தில் தலித்துகளின் பங்கை எதிர்த்தல், கீழத் தஞ்சைக்குரிய பிரத்யேக விவசாயிகள் பிரச்சினை, நிழலான காரியங்கள் போன்றவை ஒரு புறம். சினிமா, கூத்து, சாராயம், கபடி, கலவி என்று மறுபுறம் கொண்டாட்டங்கள். காவிரியும், தாமரை இலைகளாலும் கொடிகளாலும் நிரம்பிக் கிடந்த குளங்களும் வற்றிப்போய் விவசாய நிலங்களை மனைகளாக மாற்றிக் கொள்ளையாகப் பணம் பார்த்தவர்கள் நகரத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு கொள்ளையை இன்னும் பெரிதாகச் செய்கிறார்கள். மைனர்கள் தரகர்களாகிக் கடைசியில் சினிமா எடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்தால் ஏதோ கதை என்று ஒன்று இருப்பதாகத் தோன்றலாம். உண்மையில் இவை துண்டு துணுக்குகளை இணைத்துப் பார்த்தால் கிடைக்கும் சித்திரங்களே.

பேச்சு வழக்கில் மூடன் என்று பொருள்படும் அம்மாஞ்சி மொத்த நாவலுக்கும் ஒரு இணைப்புக் கண்ணி. இந்தப் பெயரில் ஒரு கேலி. பீடி குடித்து, ரம்மி ஆடி, பட்டம் விட்டு, முதல் நாள் முதல் ஆட்டம் சினிமா பார்த்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விடலைக் காதல் செய்து வாழும் ஒரு வகை மாதிரி கிராமத்து நபர். நாவல் வளர வளர புனிதங்கள், கலை, இலக்கியம், நம்பிக்கை என்று பெரும் விவாதங்களை முன்வைக்கிறான். அவன் மொழியும் மாறுகிறது. தமிழக வரலாற்றின் வெவ்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் சினிமாவைக் கலையாகப் பாவிக்கும் அமைப்பும் குடிகாரன் குரலில் பேசுகின்றன. தமிழ்வாணன் மணிமொழி, திருமணம் செய்துகொள்ளாமலேயே மனமொத்து வாழும் புரட்சிகர தலித் அறிவுஜீவி இணையர். ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து எழும் நிறுவன எதிர்ப்பின் பிரதிநிதிகள். பெயரில்லாதவளும் ஆடுதன் ராணியும் நாவலின் சில நிகழ்வுகளுக்குச் சாட்சியான கிருஷ்ணப் பருந்துவும் மாய யதார்த்த உருக்கள்.

பகடி மிகுந்த சித்தரிப்புகள்

நாவல் தன்னையே சுட்டும் செயலைத் தன்னுணர்வுடன் நாவலுக்குள் கொண்டுவரும் பின்நவீனத்துவக் கூறு Self-referentiality என்று குறிக்கப்படுகிறது. ‘விடம்பன’த்தில் இது ஒரு தொடர்க் குறிப்பாக வந்துகொண்டேயிருக்கிறது. வெறும் பரபரப்பு என்று சொல்லி இலக்கியக் கூட்டத்தில் எழும் எதிர்ப்புத் தொடங்கி, இது நாவல் மாதிரி இல்லையே, யார் படிப்பார்கள், பேசாமல் கிழித்துப் போட்டுவிடலாமா என்ற யோசனை, வேதம் புதிது கண்ணனின் ‘இது நாவலா? சிறுகதையா? திரைப்படமா? ஒரு சிறு குறிப்பு வேண்டாமா?’ என்ற முகநூல் குறிப்பு வரையிலான தற்சுட்டல்கள் பலவும் வருகின்றன. நாவல் தொடராக வரும்போது, அது அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதால் விபரீதம் நிகழலாம் என்பதால் தொடரை நிறுத்திவிடுங்கள் என்று அந்தப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதுகிறார் ஊரிசுக் கல்லூரி மாணவர் க. குப்புசாமி. இளம் கவிஞர் ‘ஏகலைவ’னாம் இவர். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படித்த இன்றைய மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி, இது எல்லாத் தரப்பினரையும் பகடி செய்து, எல்லாவற்றையும் நிராகரித்து, சர்ச்சைககளுக்குக் காரணமாகப் போவதால் அதைப் பிரசுரிக்க வேண்டாமென்று பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதுகிறார்! தொடருக்கும் நாவலின் முழுப் பிரதிக்கும் உள்ள இடைவெளியை உணர்த்துவதில் ஒரு கிண்டல். ‘ஏகலைவ’னைக் கதைசொல்லி ‘ஓட்டுகிறார்.’ நாவலாசிரியரை ஜி. குப்புசாமி ‘ஓட்டுகிறார்.’ மாயைக்கும் நிஜத்துக்கும் உள்ள இடைவெளி மங்குகிறது. நாவல் எழுதப்படும் நிகழ்வும் சமகால நிஜ நடப்புகளும் ஒன்றிணையும் ஒரு புது கதையாடல் முறையை இந்நாவல் இறுதி அத்தியாயங்களில் கைக்கொண்டுள்ளது. மே 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையும் உண்டு (நாவல் ஆகஸ்ட் 2016-ல் வெளியானது).

இலக்கிய வகைமைகளுக்கிடையே உள்ள இடைவெளிகள் மறையும் காலம் இது. விடம்பனத்தில் கதைக் கூறு உண்டு. கட்டுரை அம்சங்கள் கொண்ட பகுதிகள் உண்டு. கவிதை உண்டு. பாடல்கள் உண்டு. சுவரொட்டிகள் உண்டு. அறிக்கை உண்டு. சிறுகதை உண்டு. தீவிர அக்கறையுடன் ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கேலியும் விளையாட்டும் நுழைந்து எல்லாவற்றையும் கீழறுப்புச் செய்யும் கதையாடல் முறை வாசிப்பு சுகத்தைக் கொடுக்கிறது. முதல் நாவலுக்கான எந்தச் சலுகையும் தேவைப்படாத எழுத்து.

- ஆர். சிவகுமார், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in



விடம்பனம்

விலை: ரூ.575

வெளியீடு: காலச்சுவடு

தொடர்புக்கு: 9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x