Published : 22 Oct 2016 10:51 AM
Last Updated : 22 Oct 2016 10:51 AM

நல் வரவு

கல்யாண் வீழ்ச்சி

(நாடகம்)

எம்.எம். கலபுர்கி

தமிழில்: இறையடியான்

விலை: ரூ.120

காவ்யா வெளியீடு,

044-23726882

கர்நாடகத்தின் சீர்திருத்தவாதி பசவண்ணரின் வாழ்க்கை பற்றிய நாடகம் இது. நாடகத்தைச் சுவாரசியப்படுத்தும் பல அம்சங்கள் நூலில் உள்ளன. ‘கல்யாண் வீழ்ச்சி’ நாடகம் தொடங்கும்போது, ‘கல்யாண் புரட்சி’ ஆகிவிடுகிறது. எம்.எல். கல்புர்கி சில இடங்களில் எம்.எல். கலபுர்கி ஆகிவிடுகிறார். சொற்பிழை, வாக்கியப் பிழைகளில் அவ்வளவு தாராளம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நூலைப் பதிப்பித்திருப்பது பதிப்பகத்தாரின் துணிச்சலே.

மிர்தாதின் புத்தகம்

மிகெய்ல் நைமி,

தமிழில்: கவிஞர் புவியரசு,

விலை: ரூ.170

கண்ணதாசன் பதிப்பக வெளியீடு.

044-24332682

உலகின் மகத்தான ஞான நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படும் நூல் இது. எந்த ஒரு மதத்தின் வேதப் புத்தகமும் அல்ல என்பது இதன் தனிச் சிறப்பு. கலீல் ஜிப்ரானின் நண்பரும் கவிஞருமான மிகெய்ல் நைமி எனும் லெபனான்காரர் எழுதிய நூல் இது. தத்துவங்களின் சாரம் அடங்கிய வாசகங்களும், உள்ளிழுத்துக்கொள்ளும் விவரணைகளும் நிறைந்த நூல். நுட்பமான ரசனை கொண்ட வாசகர்களுக்கான தத்துவார்த்தமான நூல் இது.

காவல் புலன்விசாரணை

வீ. சித்தண்ணன்

விலை: ரூ. 700

ஜெய்வின் வெளியீடு.

9840898199

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடிகளை மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், அவற்றிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்று பல விஷயங்களின் பதிவு இந்நூல். சாதிக் கலவரங்கள் தொடர்பான தகவல்களும், காவல் நிலையத்தில் பதிவான சாதி தொடர்பான குற்றங்களைப் பற்றிய தகவல்கள், அந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றையும் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

விலை: ரூ. 200

தமிழ்ப்பேராயம் வெளியீடு.

044- 27417375

தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். தமிழ் மொழி அமைப்பையும் தமிழரின் வாழ்க்கைக் கூறுகளையும் வெளிப்படுத்தும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கலைச்சொற்களைத் தொகுத்து இரா. இளங்குமரனார் அழகுற விளக்கியிருக்கிறார். ‘அமரில்’ (போரில்) மரணமடைந்தவர்களே ‘அமரர்’ என்பது போன்ற குறிப்புகள் சுவாரசியம். ஆய்வு மாணவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது.

பக்தி யோகம் ஸ்ரீமத் பகவத் கீதை 12வது அத்யாயம்

மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, விலை: ரூ.80, சைதன்ய மஹாபிரபு நாமபிக்ஷா கேந்திரா வெளியீடு.

044-24895400.

பகவத் கீதையின் 12-வது அத்தியாயம் பற்றி இந்த நூலில் தரும் விளக்கங்கள் எளிதில் புரியக் கூடியவை. உதாரணத்துக்கு, அழகைவிட அறிவே நிரந்தரமானது என்பதை விளக்க, கணபதி தன்னுடைய அழகான தந்தத்தை உடைத்தே, அறிவை பரப்பும் நோக்கத்தோடு வியாசர் சொல்ல, மகாபாரதத்தை எழுதினார் என்பதுதான் `வக்ரதுண்டாய நம’ என்னும் மந்திரத்தின் தத்துவம். இதுபோன்ற ஏராளமான உபன்யாசக் கருத்துகள் இந்நூலில் உள்ளன.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள்

பொழிலன்

ரூ. 600/-

மண்பதை வெளியீடு.

7418324618

தமிழின் பெருமை காப்பதற்கான போராளிகளில் ஒருவர் பெருஞ்சித்திரனார். ‘தென்மொழி’ என்ற இதழைத் தொடங்கி தமிழின் ஏற்றத்துக்காகப் பாடுபட்டவர் அவர். போராட்டங்கள் நிறைந்த அவரது வாழ்க்கைப் பாதையின் சுவடுகள் இந்த நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளன. பெருஞ்சித்திரனாரைப் பற்றி அவரது நண்பர்களும் அன்பர்களும் எழுதிய கட்டுரைகளும் இந்தப் பெருநூலில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x