Last Updated : 21 Jun, 2015 01:53 PM

 

Published : 21 Jun 2015 01:53 PM
Last Updated : 21 Jun 2015 01:53 PM

தெரிந்த நாவல் / தெரியாத செய்தி - மீண்டும் அப்படி வாழ முடியாதா?

இன்று யோசித்துப் பார்க்கும்போது நான் ஒருவேளை, ’18-வது அட்சக்கோடு’ எழுத நேர்ந்ததில் நிர்ப்பந்தம் இருந்திருக்கிறதோ என்று ஓர் ஐயம் வருகிறது. அன்று வார ,மாதப் பத்திரிகைகளில் தொடர்கதை என்று ஒன்றாவது இருக்க வேண்டும். எனக்கு ‘அட்சக் கோட்டை’ தொடர்கதையாக மாற்றுவதில் சம்மதம் இல்லை. ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு எவ்வளவு நேர்த்தியாக அதைச் செய்து முடிப்பது என்பதில் கவனம் செலுத்தினேன்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் என் திட்டம். அது நாவலில் பூர்த்தியாகவில்லை. முன்பும் பின்னரும் எழுதிய சிறுகதைகளில்தான் அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று. ‘ஐநூறு கோப்பை தட்டுகள்’ சிறுகதையை முதல் அத்தியாயமாக வைத்துக்கொள்ள முடியுமா? ஏதேதோ பரிசோதனைகள் செய்த பின் இப்போது நாவல் ஓர் உருவம் பெற்றிருக்கிறது.

சுதந்திரத்துக்கு ஓர் ஆண்டு முன்னரே நிஜாம் ராஜ்யத்தில் வாழ்க்கை நடத்துவது கடினமாகப் போய்விட்டது. ஊரில் பாதி ஜனம் வெளியூர் போய்விட்டது. என் கூடப் படித்தவர்கள், விளையாடியவர்கள் சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் மறைந்துவிடுவார்கள். தெருவில் ஆறரை மணி, ஏழு மணிக்குப் பிறகு ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். நாங்கள் ஊருக்குச் சற்று வெளியே இருந்தோம். ஆனால் ஊர் மத்தியில் இருந்தவர்கள் எந்நேரமும் என்ன நடக்குமோ என்று கிலியில் இருந்தார்கள். எங்கள் சாரியிலேயே பன்னிரண்டு குடும்பங்களில் மூன்று குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆகாது. ஆனால் இப்போது அவர்களே தகரக் கத்திகளையும் ஓட்டை துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்கள்.

ஆனால் எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும், இந்த நெருக்கடி நிரந்தரமானதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். அது ஓரளவு பூர்த்தியாகியிருக்கிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் ஜெர்மனியை நிர்மூலம் செய்தன. அந்நாடுகளுடன் அதே ஜெர்மனி வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இரு அணு குண்டுகளை வீசிய அமெரிக்காவுடன் மின்னணுக் கருவிகள் மூலம் ஜப்பான் போட்டி போடுகிறது. நிஜாம் ராஜ்யத்தில் பல தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் அப்படி வாழ முடியாதா?

இன்று பல பிற்போக்குச் சக்திகள் உலவினாலும் ‘18வது அட்சக்கோடு’ நாவலில் பரவிக் கிடந்த பீதி இன்றில்லை. நிஜாம் ராஜ்ஜியமும் அரசுமுமே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x