Last Updated : 04 Oct, 2015 01:26 PM

 

Published : 04 Oct 2015 01:26 PM
Last Updated : 04 Oct 2015 01:26 PM

கோவில்பட்டி என்ற ஊரிலே எழுத்தாளர்கள்: உதயசங்கர் நேர்காணல்

கரிசல் மண்ணோடு கந்தக வாசனையும் கலந்தே வீசும் பூமி கோவில்பட்டி. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளைத் தந்த ஊர். எழுத்தாளர் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி, பூமணி, சோ.தர்மன், கோணங்கி, தேவதச்சன் என ஒரு பெரும் பட்டாளமே இன்றைக்கும் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இவர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை எழுத்தாளர் உதயசங்கர் தற்போது எடுத்துவருகிறார். தனது 20 வயதில் கவிதை எழுதத் தொடங்கி, பிறகு சிறுகதைகள் எழுதியவர் உதயசங்கர். ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றும் கோவில்பட்டிக்காரர். உதயசங்கரின் ஆவணப்படம் குறித்த நேர்காணல் இது…

கோவில்பட்டிக்கும் இலக்கியச் செயல்பாடுகளுக்கும் அப்படியென்ன விசேஷத் தொடர்பு?

கி.ரா.வை மையமாகக் கொண்ட இலக்கியச் சந்திப்புகள், தீவிர இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள் என தொடர்ந்து இலக்கிய வேட்கையோடு பலரும் கோவில்பட்டியில் இயங்கத் தொடங்கினோம். அன்றாடம் சந்திப்பது,பேசுவது என இலக்கியம் பேசாமல் ஒருநாளும் கழிந்ததில்லை. தேவதச்சன்,கெளரிசங்கர், பிரதீபன், பசப்பல் ராஜகோபால், பால்வண்ணன், சமயவேல் எனப் பலரும் எங்கள் விவாதங்களை ஒருங்கிணைத்தார்கள்.

கோவில்பட்டியில் இப்போதும் இலக்கிய செயல்பாடுகள் தீவிரமாக நடைபெறு கின்றனவா..?

80-களுக்கு பிறகு பெரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டுவிட்டது. பலரும் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டனர். முன்போல் இலக்கியச் சந்திப்புகளும் அதிகம் நிகழ்வதில்லை. இது குறித்த எனது நினைவோட்டங்களைத் தொகுத்து, 'முன்னொரு காலத்தில்…' என்ற நூலாக 2010-ல் எழுதியிருக்கிறேன்.

கோவில்பட்டி எழுத்தாளர்களை பற்றி ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எதனால் ஏற்பட்டது?

மூன்று முறை சாகித்திய அகாதமி விருது, இயல் விருது, விளக்கு விருது, கதா சாகித்திய விருது என பல விருதுகளை தங்கள் படைப்பிற்கென கோவில்பட்டி எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்குப் புதிதாய் எழுதவரும் பலருக்கும் இது தெரியாது. முன்னத்தி ஏராக இருக்கும் எழுத்தாளர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழும் காலத்திலேயே பதிவு செய்ய வேண்டுமென்கிற பெருவேட்கையில் உருவானதுதான் 'கோவில்பட்டி எழுத்தாளர்கள்' எனும் ஆவணப் பட முயற்சி.

பூமணி, சோ.தர்மன், கோணங்கி, தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், கெளரிஷங்கர், வித்யாஷங்கர், எம்.எஸ்.சண்முகம், அ.மாரீஸ், அப்பணசாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், முருகபூபதி என கோவில்பட்டியைச் சேர்ந்த 13 படைப்பாளிகளின் வாழ்வையும், எழுத்துப் பணியையும் நேர்காணல் செய்துவருகிறேன். இவர்களது படைப்புகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் விக்கிரமாதித்யன், பத்திரிகையாளர் ப.திருமாவேலன் போன்றோரின் உரையாடல்களும் இடம்பெறுகின்றன.

இலக்கியத்திற்கு ஒரு ஊர் இவ்வளவு பங்களிப்பைச் செய்திருப்பது ஒரு பக்கம் மகிழ்வைத் தருகிறது.எப்போதுமே படைப்பாளியை இழந்த பிறகு அவரது பெருமையை பேசும் தமிழ்ச் சூழலில்,வாழும்போதே எழுத்தாளர்களை கவுரவிப்பதும்,அவர்களது படைப்புகள் தமிழ் வாசக தளத்தில் எழுப்பிய எண்ண அலைகளை பதிவுசெய்வதும் நல்ல சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில் பெரிய பொருள் செலவாகும் இந்தப் பணியைச் செய்யும் முயற்சியில் நம்பிக்கையோடு இறங்கியுள்ளேன்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x