Published : 23 Oct 2016 11:29 AM
Last Updated : 23 Oct 2016 11:29 AM

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: சோக வனங்களும் இறந்த பெருங்கடல்களும்

நீண்ட பாரம்பரிய மிக்க அமெரிக்க நாட்டார் இசையின் ஒரு கண்ணியான ராபர்ட் ஆலன் ஜிம்மெர்மன் எனும் பாப் டிலனின் பாடல்களைக் கேட்பதை பாப் இசைக்குப் பின்பான தலைமுறை ஏறக்குறைய நிறுத்தியிருக்கும். மிகப் பொருத்தமாக அவருடைய சமீபத்திய ஆல்பத்துக்கு ‘வீழ்ந்த தேவதைகள்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. பல்வேறு அமெரிக்க கிளாசிக் பாடல்களின் தொகுப்பான அந்த ஆல்பம் சென்ற நூற்றாண்டின் 60-களில் வெளிவந்த அவருடைய எந்தவொரு ஆல்பத்தையும் போன்று சலனங்களை எழுப்பவில்லை. இவ்வாண்டு இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசு, ஏறக்குறைய மறக்கப்பட்டவராகிவிட்ட எதிர்(ப்பு)க் கலாச்சாரத்தின் தேவதைகளில் (அல்லது கேருபீன்) ஒருவரின் மீது உலகின் கவனத்தைப் படியவைத்திருக்கிறது.

மார்ட்டின் லூதர் கிங்கின், கணக்கற்ற முறை சுட்டப்பட்ட ‘எனக்கொரு கனவு இருக்கிறது’ எனும் உரை நிகழ்த்தப்பட்ட மேடையில் அவருடைய உரை தொடங்கும் முன்பாக டிலன் இரண்டு பாடல்களை இசைத்தார். லூதரின் உரைக்குப் பொருத்தமான பாடலான “அவர்களுடைய விளையாட்டில் (நாம்) வெறும் சிப்பாய் மட்டுமே” அவற்றில் ஒன்று. இதுவே டிலனுக்கு அவரது தொடக்க காலத்திலேயே கிடைத்த முக்கியத்துவம். அவரது பாடல்களின், இசையின், வடிவத்தின் பாதையும் இதுவே.

பொருள் தந்த பாடல்கள்

உலகப் போருக்குப் பின்பான உற்பத்திப் பெருக்கம், கொந்தளிப்புகள் நிரம்பிய 1960களின் தலைமுறைக்கு உள்ளீடற்ற வாழ்வையே தந்தது. அதிலிருந்து தப்பிக்கத் தேவைப்பட்ட அர்த்தங்களை டிலனின் பாடல்கள் உருவாக் கின. அவருடைய புகழ்பெற்ற பாடல்களான ‘காற்றிலே ஒலிக்கிறது’, ‘உருண்டோடும் கல்லைப் போல’, ‘கொடும் மழை பொழிய விருக்கிறது’ முதலானவை அவர்களுடைய தனியறைகளில், பேரணிகளில், இயக்கங்களில் ஒலித்தன.

சே குவேராவையும் பாரிஸ் மாணவர் எழுச்சியையும் வியட்நாம் போரையும் ஹிப்பிகளையும் பீட்டில்ஸையும் நீளமான அமெரிக்க கார்களையும் பனிப்போரையும் மாவோவின் சிவப்புப் புத்தகத்தையும் மால்கம் எக்ஸையும் ஒருசேரச் சிந்தித்துப் பார்த்தால் 1960-களின் அகக் கட்டமைப்பு புரியும். நாட்டார் இசையும் சமூகச் செயல்பாடும் இணைந்து செல்பவை என்று சொல்லியிருக்கிறார் டிலன். நாட்டார் மரபிசையை நவீன காலத்தின் அரசியலுடனும், உரிமைகளுக்கான செயல்பாட்டுக்காகவும், தனிநபரின் தொந்தரவுக்குள்ளாகும் மனதுக்கான ஆன்மிக நம்பிக்கையோடும் இணைத்த டிலன் அந்த இதிகாசக் காலத்தின் ஒரு நாயகன். அந்நினைவுகளை மீட்டெடுத்ததே அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசின் நேர்மறை விளைவு.

எதிர்க் கலாச்சாரத்தை முன்னெடுத்த ‘பீட்’ தலைமுறை இலக்கியவாதிகளான வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் டிலன். இவர் இயக்கிய ‘ரெனால்டோவும் கிளாராவும்’ திரைப்படத்தில் பங்க ளிக்க வில்லியம் பர்ரோஸ் அழைக்கப்பட்டார். அவர் இசைத்த பாடலைக் கேட்டு கின்ஸ்பெர்க் கண்ணீர் வடித்திருக்கிறார்.

நாட்டார் இசை

டிலனுடைய முன்னோடியான வுட்டி கத்ரி இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் “இவ்வியந்திரம் (கிதார்) ஃபாசிஸ்ட்டுகளைக் கொல்லும்” என்ற பாடலை இசைத்தார். பெருமந்தநிலைக் காலத்தின் செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட கத்ரியிடமிருந்தே டிலனின் அரசியலுணர்வு முகிழ்த்திருக்கும். டிலனின் கிதார் வியட்நாம் போர்க் காலத்தில் போரெதிர்ப்பு அரங்குகளில் ஒலித்தது. அமெரிக்க இசை வரலாற்றில் அது ஒரு தொடர்ச்சி. U2 குழுவின் பாடகரான போனோ சொன்னதைப் போல அவருடைய மூட்டையைத் தொடர்ந்து சுமக்கும் கலைஞர்களாக மார்க் நாஃப்ளர், பீட் சீகெர்ஸ், டாம் வெய்ட்ஸ் ஆகியோரைச் சொல்லலாம்.

எளிமையான கிதார் இசையும் ஹார்மோனிகாவும் இணைந்த டிலனின் பழைய பாடல்களைக் கேட்பவர்களுக்கு அவை கவிதை வாசிப்பை நினைவூட்டலாம். எளிமையின் அழகில் மிளிர்வதே நாட்டார் இசை வடிவம். கிறிஸ்துவுக்கு முன்பான பாணர்களின் கோட்டணிந்த உருவமே டிலன். நவீனக் கவிதைகளுக்கு நிகராகச் சில பாடல்களை எழுதியிருந்தாலும் கவிதைகளுக்கான மதிப்பை அவருடைய பாடல்களுக்கு வழங்கினால் அது இலக்கிய சமரசமாகக்கூட முடியலாம். வெறும் பாப்புலர் பாடலாசிரியராக டிலனை மதிப்பிடுவதும் குறைவானதே. நோபல், இலக்கியத்தை மறுவரையறை செய்கிறதென்று சொன்னாலும் அல்லது நாவலாசிரியரான மார்கரெட் அட்வுட் சொன்னதைப் போல, இது அமெரிக்கத் தேர்தலை ஒட்டி எடுத்த முடிவென்றாலும் டிலனுக்கு வழங்கப்பட்ட நோபல் அபத்தத்தின் சாயல் படிந்ததே. அவருடைய புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘It’s alright Ma’ பாடலை இசையை விடுத்துத் தனியாக வாசித்துப் பார்த்தால் மெச்சத்தக்க கவிதைகளில் ஒன்றாகவே தோன்றும். அப்பாடலின் ஒரு வரி: ‘சில சமயங்களில் அமெரிக்க அதிபரும் ஆடையின்றி நிற்க வேண்டியிருக்கும்’.

* ‘கொடும் மழை பெய்யப்போகிறது’ என்ற பாடலில் இருக்கும் ஒரு வரியே இக்கட்டுரைத் தலைப்பு.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எழுத்தாளர். தொடர்புக்கு: tweet2bala@gmail.com







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x