Last Updated : 23 Oct, 2016 11:29 AM

 

Published : 23 Oct 2016 11:29 AM
Last Updated : 23 Oct 2016 11:29 AM

இலக்கிய இதழ்: சுபமங்களா - அனைவருக்கும் இடம் தந்த இதழ்

தமிழில் குறைந்தபட்ச வாசகர்கள், எழுத்தாளர்கள் கைகளிலேயே புழங்கும் தீவிர இலக்கியச் சிறுபத்திரிகைகளுக்கு நீண்ட நெடிய மரபு உண்டு. வெகுஜன சினிமாவையே வெவ்வேறு வகைகளில் கலந்து தரும் வணிக இதழ்களின் பாரம்பரியமும் மிக நீண்டது. இலக்கியம், ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகள், சினிமா, அரசியல் புலங்களில் சமகாலத்தில் நிகழும் அசைவுகளை மட்டுப்பட்ட தீவிரத்துடனும் சற்று சுவாரசியத்துடனும் சொல்லும் நடுநிலை இதழ்கள் சார்ந்த முயற்சிகளும் அவை அடைந்த வெற்றிகளும் மிகச் சமீபமானதே.

அந்த வகையில் 1991-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 1995-ம் ஆண்டு டிசம்பர்வரை கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் வந்த சுபமங்களா இதழ், மிக முக்கியமான திருப்புமுனை. தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் சார்ந்த ஆளுமைகள் மட்டுமே வண்ணப் புகைப்படங்களாக அதுவரை தமிழ் வாசகர்கள் மத்தியில் பதிவு பெற்றிருந்தனர். ஒரு எழுத்தாளருக்கோ ஓவியருக்கோ அவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்படும் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படமே பெரும் அங்கீகாரமாக இருந்த காலம் அது. எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஓவியர்களும் நட்சத்திரங்கள்தான் என்பதை அவர்களது அழகிய கலாபூர்வமான புகைப்படங்களை வெளியிட்டுத் தமிழ்ச் சூழலில் நிறுவிய பெருமை சுபமங்களாவையே சேரும்.

பல்துறை ஆளுமைகள் பங்களிப்பு

இன்றும் ‘சுபமங்களா’ இதழை நினைவுகூர்பவர்கள், கோமலை அந்த இதழின் பரப்பாகக் கற்பனை செய்துகொண்டு, அவர் எல்லாருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் இடம்கொடுத்தார் என்று சொல்வார்கள். தீவிரப் படைப்புத் தளத்தில் வேறு வேறு முனைகளில் இயங்கிக்கொண்டிருந்த சுந்தர ராமசாமியும் கவிஞர் தேவதேவனும் இதில் எழுதினார்கள். தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் நட்சத்திரங்களாக விளங்கிக்கொண்டிருந்த சு. சமுத்திரம் முதல் ஐசக் அருமைராஜன் வரை பங்களித்தார்கள். 90-களின் பிரதான போக்கான தலித் இலக்கிய அரசியலும், தலித் படைப்பாளிகளும் பங்குகொண்டனர். பின் நவீனத்துவம், அமைப்பியல் முதலானவை குறித்த கோட்பாட்டு விவாதங்களுக்கும் இடம்கொடுத்த இதழ் இது. ஜெயமோகனின் சிறந்த சிறுகதைளில் ஒன்றான ‘ஜகன் மித்யை’ கதையும், எஸ். ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்’ சிறுகதையும் இடம்பெற்ற இதழ் இது.

கலைஞர் மு. கருணாநிதி, இன்குலாப், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கலாப்ரியா, பத்திரிகையாளர் என்.ராம், அ. மார்க்ஸ், தமிழவன் எனக் கலை, இலக்கியம், இதழியல், அரசியல் எனப் பலதுறை ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள் ஒவ்வொரு இதழிலும் இடம்பெற்றன. இந்த நேர்காணல்கள் எடுக்கப்படுவதில் கோமலுக்கு உறுதுணையாக இருந்தவர் சுபமங்களாவின் துணை ஆசிரியராக இருந்த இளையபாரதி. ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்ற நூலாக கவிஞர் இளையபாரதி இந்த நேர்காணல்களைத் தொகுத்திருக்கிறார். குடந்தை கீதப்ரியன், எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகியோரும் கோமலுக்குத் துணையாகப் பணியாற்றியிருக்கின்றனர்.

‘சுபமங்களா’ என்ற பெயர் மிகவும் சம்பிரதாயமான தாகவே அப்போதும் இருந்திருக்கும். ‘நிகழ்’, ‘காலச்சுவடு’, ‘கனவு’ போன்ற சிற்றிதழ்களிலேயே எழுதிக்கொண்டிருந்த இன்றைய இலக்கிய நட்சத்திரமான ஜெயமோகனிடம், ஒரு பதிப்பாளர், சுபமங்களாவுக்குப் படைப்புகளை அனுப்பச் சொன்னபோது அவருக்கும் ‘சுபமங்களா’ என்ற பெயர் தொடர்பாகக் குழப்பம் இருந்துள்ளது. ஆனால் அந்த இதழ் வழியாகவே கூடுதலான எண்ணிக்கையிலான வாசகர்களை அவர் அடைந்தது வரலாறு.

ஒரு வெகுஜனப் பத்திரிகையின் தோற்றம், அதற்கேயுரிய விளம்பரங்கள், வடிவமைப்பு ஆகியவற்றோடுதான் ‘சுபமங்களா’ வெளியாகியுள்ளது. தொடக்க இதழில் உள் அட்டையில் எஸ்.தாணு தயாரிப்பில் ஆர். பார்த்திபன் நடித்து வெளிவந்த ‘தையல்காரன்’ திரைப்பட விளம்பரம் உள்ளது. பின்பக்க உள் அட்டையில் க்ளாமர் சாஷே ஷாம்பு விளம்பரம் உள்ளது. உள்ளே ராகவேந்திரரின் குரு ராஜ கவசத்தின் விளம்பரம். அதற்கு மேலே சா. கந்தசாமியின் முக்கியமான சிறுகதையான ‘சாந்தகுமாரி’ இடம்பெற்றுள்ளது. அதற்கு ஓவியம் வரைந்திருப்பவர் வெகுஜன வாசகர்களைத் தனது பெண் சித்திரங்களால் கவர்ந்த ஓவியர் ஜெயராஜ்.

மாற்றத்துக்கு வித்திட்ட இதழ்

‘சுபமங்களா’வுக்கு முன்னோடி இதழ்கள் உண்டு. இரண்டு இதழ்களே வந்து நின்றுபோன ‘புது யுகம் பிறக்கிறது’, எஸ். வி. ராஜதுரை ஆசிரியராக இருந்து நடத்திய ‘இனி’ ஆகிய இதழ்களைச் சொல்லலாம். ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் நீடிக்கவில்லை.

இன்று சீரிய நடுத்தர இதழ்களாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘தீராநதி’, ‘உயிர் எழுத்து’, ‘தடம்’ போன்ற பத்திரிகைகளின் உள்ளடக்கத்துக்கும் வெற்றிக்குமான வேர் ‘சுபமங்களா’வில் உள்ளது என்று சொல்லலாம். இந்த முத்திரைக்கு நிச்சயமான காரணம் கோமல் சுவாமிநாதன் என்னும் ஆளுமைதான். அவர் தனது வாழ்வின் கடைசிக் கட்டத்தில் ‘சுபமங்களா’வின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அதற்கு முன்பு அவர் நாடகக்காரர், சினிமா ஆளுமை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர். ராம் குரூப் நிறுவனத்தின் ரஞ்சனி சார்பாக நடத்தப்பட்ட ‘சுபமங்களா’ இதழின் பொறுப்பைக் கோமல் ஏற்றபோது அவருக்கு இருந்திருக்கக்கூடிய மனச்சாய்வுகளை இதழில் வெளிப்படுத்தவேயில்லை. “இது கர்நாடகப் பெயராக இருக்கிறதே. பெண்கள் பத்திரிகை போலத் தொனிக்கிறதே. வடமொழியாக இருக்கிறதே! இதை எல்லாம் நான் எண்ணவில்லை. கலை இலக்கிய சிந்தனைத் துறைகளில் ஆழமான பார்வையுடன் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உடனடி வாகனமாக வந்தது சுபமங்களா. பற்றிக்கொண்டேன்” என்று தனது முதல் இதழின் தலையங்கத்தில் எழுதுகிறார்.

பரவலான தமிழ் வாசகர்களை எழுத்து, ஓவியம், அரசியல், சிந்தனைத் துறைகளில் ஓரளவு விரிவான களத்திற்கு அழைத்துச் சென்றதில் கோமலுக்கு என்றென்றும் பங்குண்டு. அதற்குச் சான்றாக இருக்கிறது, கோமலின் மகள் தாரிணி தொகுத்த ‘சுபமங்களா’ இதழ்த் தொகுப்பு. மொத்த ‘சுபமங்களா’ இதழ்களையும் பார்வையிட http://www.subamangala.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x