Last Updated : 28 Jun, 2014 09:10 AM

 

Published : 28 Jun 2014 09:10 AM
Last Updated : 28 Jun 2014 09:10 AM

அகிலனின் தணியாத தாகம்

27 ஜூன்- அகிலன் பிறந்த நாள்

தமிழின் முதல் ஞானபீடப் பரிசை வென்ற எழுத்துக்குச் சொந்தக்காரரான அகிலனின் முதல் எழுத்துப் பூ 1939இல் அவரது 17-வது வயதில் மலர்ந்தது. கல்லூரிக் காலாண்டு சஞ்சிகையில் வெளிவந்த' அவன் ஏழை' என்பதே அக் கதை. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், “இந்தக் கதையை நீ எங்கே திருடினே?’’ எனக் கேட்க, கலங்கித் திடுக்கிட்ட அகிலன் தழுதழுத்த குரலில், கோபத்துடன், “நீங்க என் கதையைப் போட வேண்டாம்; திருப்பிக் கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர் எழுந்து வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, “நீயே சொந்தமா எழுதியிருப்பேன்னு என்னால நம்ப முடியவில்லை; கதை நல்லா இருக்கு “என்று கூறி, தமிழாசிரியருக்கே உரிய பழக்கத்தால் தலைப்பை மட்டும் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி வெளியிட்டார்!

தமிழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய அகிலன் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த பார்வைகளைப் பதிவு செய்தார்.

1944-ல் அகிலனின் முதல் நாவல் ‘மங்கிய நிலவு' நேரடியாகப் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் 1949-ல் ‘இன்ப நினைவு' எனும் தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தது. முதல் நாவலில் இருந்து, தம் இறுதி நாவல் ‘வானமா பூமியா' வரை இந்த நாட்டையும், இந்திய - குறிப்பாகத் தமிழர்களின் வளர்ச்சியையும் பற்றியே சிந்தித்தார். சிந்தனையைத் தூண்டும் சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், நிஜமான நிகழ்ச்சி கள், சுவையான, அழகிய, எளிய நடை என்று குழைத்து அழகிய சுடுமணல் சிற்பங்களாக வடித்து வைத்தார்.

அகிலன் எதற்காகவும் பணிந்து வளைந்து கொடுக்காதவர். கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர்.

எளிய தமிழில், இனிய நடையில், உயர்ந்த கருத்துக்களைச் சுவைபடக் கதையாகக் கூறி உணர்த்தும் கலையில் செய்நேர்த்தி பெற்றிருந்ததால் அகிலனின் பல படைப்புக்கள் இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றிலும் உலக மொழிகள் பலவற்றிலும் அன்று முதல் இன்று வரை மொழியாக்கம் கண்டுவருகின்றன.

பள்ளியிறுதி வரை மட்டுமே கல்வி கற்ற இவர் வாழ்நாள் முழுவதும் கற்றுவந்தார். டால்ஸ்டாய், கார்கி, செகாவ், டாஸ்டாவ்ஸ்கி, கோகல் முதல் ஷோலகாவ், மாப்பசான், வால்ட்டேர் என நீள்கிறது அகிலனின் வாசிப்பு. அகிலன் முதலில் சிறுகதைகளில் பயணித்து, குறு நாவல்கள் பெரு நாவல்கள் எனப் பரிமளித்தார். ‘தொடர்கதை என்பது இலக்கியமாகுமா', ‘இவர் வெறும் காதல் கதை மன்னர்' என்றெல்லாம் விமர்சன அம்புகள் வெவ்வேறு நோக்கத்தால் இவர் மீது பாய்ந்தன. “மலர் மாலைக்கு எப்படித் தலை வணங்குகிறோமோ, அப்படியே கல்லெறிக்கும் தலை வணங்கும் பக்குவம் பெற வேண்டும்” என்பார் அகிலன்.

அகிலனின் அனைத்துப் படைப்புகளிலும் அன்பும் அற நெறியும் ஆதிக்கம் செலுத்தின. போதனைகளாக அல்லாமல் சுவை யான வாழ்க்கை நிகழ்ச்சிகளாக அமைந்தன அவை. உணர்ச்சியும் அறிவும் அடிக்கடி மோதிக்கொள்ளும். ஆனால், அதன் மூலம் நமக்குக் கிடைத்தவை என்னவோ, அலாதியான அனுபவமும் வாழ்க்கைப் பாடங்களும். ‘வேங்கையின் மைந்த’னில் நாடாள்பவரின் தகுதி பற்றி, மக்களை நேசிக்கும் தலைவனைப் பற்றி, சரித்திரச் சான்றுகளுடன் அழகோவியம் தீட்டினார் அகிலன்.

அகிலனின் கலை, இலக்கிய, அரசியல் பங்களிப்பு என்பது மக்கள் முன்னேற்றம் என்பதையே நோக்க மாகக் கொண்டிருந்தது. அதனால்தான் பல் துறைப் பிரமுகர்களும் அகிலனை மரியாதையுடன் நேசித்தனர்.

மு.வ., கி.வ.ஜ., கி.ஆ.பெ.வி., ம.பொ.சி., சிவராம காரந்த் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள், சிவாஜி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, ராமு காரியத், டி.எம்.எஸ்., கே. அசோகன் போன்ற கலையுலகப் படைப்பாளிகள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் போன்ற அரசியல் வல்லுனர்கள் எல்லாம் மிக இயல்பாக அகிலனின் இல்லம் வந்து விவாதித்திருக்கிறார்கள்.

சரித்திர நாவல்களிலும் அகிலனின் சமூகப் பார்வையின் வெளிப்பாடே பிரதானமானது. இன்றும் அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதிலிருந்து அவர் எழுத்தின் வலிமையும் காலம் தாண்டி நிற்கும் அதன் முக்கியத்துவமும் புலனாகின்றன.

- கட்டுரையாளர், எழுத்தாளர், அகிலனின் மகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x