Published : 21 Jun 2014 11:46 AM
Last Updated : 21 Jun 2014 11:46 AM

கற்றல் என்பது எளிய காரியம் அல்ல

நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதொன்றிலும் இருந்தும், சிறப்பானதைப் பெற முயற்சிக்கிறோம். நமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போதும், ஆண்டுகள் வளர்வதைப் போலவே நாமும் நேர்க்கோட்டில் அபிவிருத்தி அடைவோம் என்று கற்பனை செய்துவிடுகிறோம். ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவத்தை அடைவதற்குக் கடினமாக வேலை செய்தால், மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்புகிறோம்.

ஆனால், முன்னேற்றம் என்பது பல துறைகளில் நேர்க்கோட்டுத்தன்மையுடையது அல்ல என்று கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் எச்.யங் தனது சமீபத்திய வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஒரு மொழியைக் கற்கும்போதோ, ஓட்டப் பயிற்சி போன்ற முயற்சிகளிலோ வளர்ச்சி என்பது வேறு விதமானது. தொடங்கும்போது வேகமாக வளர்ச்சி இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தை அடைந்தவுடன் ஒவ்வொரு எட்டு வைப்பதும் கடினமாகவே இருக்கும்.

வேறு வேறு வளர்ச்சி நிலைகள்

இந்த வகையான செயல்பாடுகளுக்குக் குறிப்பிட்ட வகை மன அமைப்பு தேவை என்கிறார் யங். முதல் கட்ட வேக வளர்ச்சியில் எல்லாமே எளிதாக வந்துசேரும். கட்டுக்கோப்பான பழக்கங்களை மட்டும் பராமரித்தாலே போதும். இல்லையெனில் உங்களுக்கு பின்னடைவு ஏற்படும். அடுத்து வரும் மந்த வேக வளர்ச்சிக் கட்டத்தில், உங்களது சில பழக்கவழக்கங்களை உடைத்தே ஆக வேண்டும். அருமையிலிருந்து மகத்தானதிற்கு நகர நீங்கள் சில அன்றாடப் பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும். அவை உங்களைத் தேங்கவைப்பவை.

உதாரணத்திற்கு கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் தன் விளையாட்டைத் தொடங்கியபோது கடினமான பயிற்சி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. மிகச் சாதாரணமாக வெற்றிகள் அவர் வழியில் வந்தாலும் அவர் அந்த நடைமுறைகளை விடவேயில்லை. ஒரு கட்டத்தில் அவர் உயர்ந்த நிலையை அடைந்த பின், தனது திறனை மறுகண்டுபிடிப்பு செய்துதான் சிகர சாதனைகளை அடைய முடிந்தது.

ஒரு சில துறைகளில் வளர்ச்சி என்பது அதிவேக நிலையில் இருக்கும். அப்படியான துறைகளில் அடிப்படைகளை அறிவதற்கு மட்டும் வாரக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ முயற்சி எடுக்க வேண்டிவரும். ஆனால் அதன் பிறகோ, வேலை மிக எளிதானதாக மாறிவிடும். வளர்ச்சியும் பல மடங்கு இருக்கும்.

எல்லையை உடைக்க வேண்டும்

கல்விப் புலங்களில் நிபுணத்துவம் அடைவது இவ்வகையிலானது. அடிப்படையை இளங்கலைக் கல்லூரிப் படிப்பிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கற்கும் துறையின் கட்டமைப்புகளை உள்வாங்கிக்கொண்ட பிறகு அத்துறை சார்ந்த கோட்பாடுகளுடன் படைப்பூக்கம் மிகுந்த விளையாட்டை நீங்கள் ஆரம்பித்துவிடலாம். ஐஸ் ஹாக்கி விளையாட்டு அப்படிப்பட்ட விளையாட்டுதான். (பனியில் தடுக்காமல் சறுக்குவதற்கே ஆண்டுகள் பிடிக்கும்). இப்படிப்பட்ட துறைகளில் நிறைய பேர் ஆரம்பக் கட்டங்களிலேயே வெளியேறிவிடுவார்கள். எந்த பிரதிபலனும் இல்லாமல் கடின உழைப்பைச் செலுத்திக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆனால் பிந்தைய அதிவேக வளர்ச்சி நிலையில் கடின முயற்சி செய்து ஈட்டிய திறனின் எல்லைகளை உடைக்கவும் நீங்கள் திறந்த மனதுடையவராக இருக்க வேண்டும். வின்சன்ட் வான்கோ சித்திரம் வரைதலின் அடிப்படைகளைக் கற்கப் பல ஆண்டுகளைச் செலவழித்தார். அதில் நிபுணத்துவம் அடைந்த பிறகு, கைத்திறனை மீறித் தன் கலையை உருவாக்க ஆரம்பித்தார்.

வேறு சில வளர்ச்சிக் கட்டமைப்பு களையும் சிந்தித்துப் பார்க்கலாம். சில துறைகளில் முன்னேற்றம் என்பது படிக்கட்டு மாதிரி. ஒரு படி மேலேறியவுடன் சிறிது தேக்கம். பிறகு அடுத்த படி, தேக்கம், பிறகு அடுத்த படி என்று போகும். அடுத்து ஒரு படி. வேறு சில துறைகளிலோ, அலைகள் கரையை மீண்டும் மீண்டும் தொடுவது போல முன்னேற்றம் இருக்கும். ஒரு விஷயத்தை நாடிச் செல்லும்போது, அறிவின் ஏதேனும் ஒரு படிவை விட்டுச்செல்லும். மீண்டும் நாடிச் செல்வீர்கள் எனில், அடுத்த அலை இன்னும் கொஞ்சம் படிவைக் கொண்டுவரும்.

பாதாளத்திலிருந்து தொடங்கவேண்டும்

இன்னும் சில துறைகள் உள்ளன. அவை பள்ளத்தாக்கின் வடிவத்தில் இருக்கும். நீங்கள் மேலே செல்வதற்கு முதலில் கொஞ்சம் கீழே இறங்க வேண்டும். ஒரு புதிய நாட்டுக்குள் குடிபோகும் அனுபவம் அப்படி இருக்கும். ஒரு புதிய சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ளக் கீழேயிருந்துதான் தொடங்க வேண்டும். நெறிமுறை சார்ந்த வளர்ச்சியும் அப்படித்தான். உங்களது தோல்விகளிலிருந்து மீள்வதற்கு முன்னரே அடிமட்டத்திற்குச் சென்று அவற்றை ஆராய வேண்டும். சிறந்ததை அடைய முனைவதற்கு முன்பு அவமதிப்பையும் நீங்கள் ருசிக்க வேண்டும்.

வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் பற்றி யோசிக்கும்போது, வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் சுபாவங் களை முற்றிலும் மாற்றிக்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பது நினைவுக்கு வரும். ஒழுங்குடனும் இறுக்கமாகவும் இருப்பது பல துறைகளில் முதல் கட்டத்தில் பயனளிக்கும். ஆனால் அடுத்த கட்டத்தில் சௌகரியத்தை அடைந்த பின்னர் விளையாட்டுத் தனமும், நெகிழ்வும் அவசியம். அரசியல் துறையைப் பொருத்தவரை, பிரச்சாரத்திலிருந்து நிர்வாகத்தை நோக்கிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். பிரச்சாரம் அது உடனடி திருப்தியை அளிக்கும் செயல்பாடு. நிர்வாகத்திற்கோ அனுபவம், பொறுமை, பெறுவதற்கரிய ஞானம் ஆகியவை அவசியம்.

திறனைப் பெறுவதும் ஆழமான பொருளில் நெறிமுறைசார் செயல்பாடு தான். என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவு மட்டும் போதாது; உங்களது இயல்பான வேட்கைகளை வெற்றிகொள்வதற்கும் உங்களைப் பயிற்றுவித்தல் வேண்டும். வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் தன்னைத் தானே கொண்டாடிக்கொள்ளுதல், இளைப் பாறுதலுக்கான உந்துதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். அடுத்த கட்டத்தில் உங்கள் புகழைப் பலரும் பாடிக் கொண்டிருக்கும்போது, சுயதிருப்தியை எதிர்த்து நீங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டும்.

வேகமாகப் பலன்தரும் செயல்பாடுகளை நமது சமூகம் விரும்புகிறது. வேகமான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் விளையாட்டுகள், திடீர் நட்சத்திர மதிப்பைப் பெறுதல் ஆகியவற்றுக்கு அதிக மதிப்பு இருக்கிறது. ஒரு ராஜதந்திரியாகவோ கைத்திறனாளியாகவோ ஆவது அந்த அளவு விரும்பப்படுவதில்லை. இவற்றில் வளர்ச்சி வேகம் நிதானமாகவே இருக்கும்.

உங்கள் இயல்பான குணங்கள் என்ன என்பது முக்கியமல்ல. நீங்கள் விரும்பும் இருக்கும் துறையின் கட்டமைப்பு என்ன? அங்குள்ள வளர்ச்சித் தடத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் துறை சார்ந்த கட்டமைப்புகளுடன் எப்படி வினைபுரி கிறீர்கள்? இவைதான் முக்கியக் கேள்விகள்.

இந்தச் சிக்கலான கேள்விகளுக்கான பதில் கண்ணாடி பிம்பம்போல உங்கள் எதிரில் தெரிந்துவிடாது. சற்றுத் தொலைவி லிருந்து ஒரு நிலக்காட்சியைப் பார்ப்பது போல தூரத்திலிருந்து உங்களை நீங்களே நோக்குவதன் மூலம் அந்தப் பதில்களைப் பெறலாம். அதுதான் நிறைவானதும், ஆரோக்கியமானதுமான பார்வையாக இருக்கும்.

தி இந்து ஆங்கிலம் (தமிழில்: ஷங்கர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x