Published : 23 Jun 2018 08:50 AM
Last Updated : 23 Jun 2018 08:50 AM

மொழிபெயர்ப்பு நூல்களில் கலைச்சொல்லாக்க அடைவு அவசியம் தேவை!

மிழில் நேரடியாக எழுதப்படும் நூல்களுக்கு இணையாக மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்திய மொழிகளிலிருந்து நேரடியாக இலக்கியங்கள் மொழிபெயர்க்கப் படுகின்றன. ஆங்கிலத்தின் வழியாக உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் வெளிவந்த பல துறைகளைச் சேர்ந்த நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இத்தகைய அறிவு, பண்பாட்டுப் பரிவர்த்தனைகள் நீண்ட நெடுங்காலமாக நடக்கின்றன என்றாலும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, அதை இன்னும் விரைவுபடுத்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்பின்போது வெவ்வேறு பண்பாட்டுச் சூழலுக்கேற்பப் பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந் தெடுக்கும் மொழிபெயர்ப்பாளர், சரியான வார்த்தைகள் கிடைக்காதபட்சத்தில், புதிய வார்த்தைகளையும் சொற்சேர்க்கைகளையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த நூல்கள் மொழி பெயர்க்கப்படும்போது ஒவ்வொரு துறையிலும் உருவாகி யிருக்கும் புதிய கோட்பாடுகள், சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்குப் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் அல்லது உருவாக்கும் தேவை எழுகிறது. அந்த வகையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் வருமொழியில் உள்ள கருத்துகளைப் பெறுமொழிக்கு மாற்றுவதோடு மட்டுமில்லாமல், வருமொழியில் புதிய சொல்லாக்கங்களையும் உருவாக்கி, அந்த மொழியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறார். இவ்வாறு உருவான புதிய சொல்லாக்கங்களே நாளடை வில் பொதுப்பயன்பாட்டுக்கும் வருகின்றன.

தற்போது வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களில் இந்த புதிய சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சொல்லாக்கங்களை வாசிப்பின்போக்கில் எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், அனைத்துக் கலைச்சொற்களையுமே அவர்கள் நினைவில் கொள்வதும் எந்த இடத்தில் அச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது என்று தேடுவதும் சிரமமானது. இதைத் தவிர்க்க, மொழிபெயர்ப்பு நூல்களின் இறுதியில் கலைச்சொல் அடைவு (glossary) இணைக்க வேண்டியது அவசியம். கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை சார்ந்த நூல்களில் இந்த முறை ஒரு வழக்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதை எல்லா வகையான புத்தகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

புத்தகங்களின் இறுதியில் பின்னிணைப்பாக அமையும் கலைச்சொல்லாக்க அடைவுகள், அத்துறை சார்ந்து அடுத்து வெளிவர இருக்கும் நூல்களுக்கு ஒரு வழிகாட்டி யாக இருக்கும். முக்கியமாக, வெவ்வேறு மொழிபெயர்ப் பாளர்கள் ஒரே கலைச்சொல்லாக்கத்தைப் பின்பற்றவும், முரண்பாடுகள் எழாமலும், மிகச்சரியான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும் உதவியாக இருக்கும்.

மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும்போதே அந்நூலில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கலைச்சொற்கள், புதிய சொல்லாக்கங்கள் என அனைத்தையும் மொழிபெயர்ப்பாளர் குறித்துவைத்தாலே போதுமானது. அதை அகரவரிசைப் படுத்தி அட்டவணையிடுவது இன்றைய கணினியுகத்தில் மிகவும் எளிதானது. மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x