Last Updated : 30 May, 2018 09:01 AM

 

Published : 30 May 2018 09:01 AM
Last Updated : 30 May 2018 09:01 AM

எமதுள்ளம் சுடர் விடுக! 42: சிமிழுக்குள் அடங்காத தமிழ் சினிமா!

‘ம

ற்ற கலைகளைப் போல சினிமாவும் மனித வாழ்க்கை யைச் சொல்கிற கலையாக பிறந்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவோ மேடை நாடகத்தில் இருந்து வந்ததனால் தொடக் கால சினிமாக்களில் உள்ளடக்கம் புராணமாகவே இருந்தது. கூத்துகள் தமிழர் அறிந்த கூத்துக் கதைகளாக, உதாரணத்துக்கு ராமன் - சீதை, கோவலன் - கண்ணகி போன்ற கதைகளாகவே இருந்தன. நாடகங்கள் சினிமாவாக உருமாற்றம் பெரும்போது அதன் உள்ளடக்கம் நவீனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, சினிமா பிறந்த காலகட்டத்தில் பேரெழுச்சியாக உருவான சுதந்திரப் போரட்டம் வெகுநாட்கள் கழித்தே தமிழ் சினிமாவுக்குள் வந்தது.

பல காலம் நாடகம் நிகழ்த்துவது போலவே சினிமாவும் நிகழ்த்தப்பட்டு படம் பிடிக்கப்பட்டன. ஒரு மாறாத உதாரணத்தை சொல்லலாம். அரண்மனையில், ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்திருந்து ஒரு பெரிய ரகசியத்தைக் கேட்ட ஒரு படை வீரர், அதனை கேட்டுவிட்டு அப்படியே போவதில்லை. பார்வையாளர்கள் பக்கம் திரும்பி தலையை ஆட்டிவிட்டு, தெரிந்துகொண்டேன் என்ற பாவனையைப் பார்வையாளருக்கு ஏற்படுத்திவிட்டு போய்விடுவார். மிகமிக நுணுக்கமான சினிமா ஃபிரேமுக்குள் நடப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த தலையசைத்தல் எவ்வாறு நடந்தது? இது நாடகத்தில் நடந்தது அப்படியே சினிமாவுக்குள் வந்தது.

தமிழகத்துச் சூழலில், சினிமாவை எதிர்த்தவர்களே தேசிய தலைவர்களாக விளங்கினார்கள். உதாரணத்துக்கு ராஜாஜி. அதோடு சினிமா கலைஞர்களோடும் ஒன்றிணைந்து சினிமாவுக்கு உழைத்தவர்கள், சத்தியமூர்த்திபோலும் சிலர் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி 1967-ல் தோற்றுபோன பிறகு, அது வரையில் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்த சினிமாக்காரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்துக்குள் இடம் கிடைத்தது. நவீன வாழ்க்கை முறையில் உருவான கலை, சினிமா. ஆனால், வாழ்க்கை நவீனம் இல்லாத ஒரு இனம் நவீன சினிமாவை கண்டுபிடிக்க முடியாது. தமிழிலும் இதுதான் நேர்ந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகம் கல்வியால் நிரம்ப வேண் டும் என காமராஜர் முதலான தலைவர்கள் பெரும் உழைப்பை கல்விச் சாலைகளை உருவாக்குவதில் செலுத்தினார்கள். விளைவு அறிவு வளர்ந்ததோ இல்லையோ, கல்லூரிகளில்கூட சாதி பிரிவுகள் வளர்ந்தது. பகிரங்கமாக சாதி சங்கங்கள் செயல்படத் தொடங்கின.

சினிமாவுக்குள் சாதி நுழைந்த வரலாற்றில் அது உருவாக்கிய நிறைந்த தீமைகளை ஆராய வேண்டிய கட்டாயம் சினிமா விமர்சகர்களுக்கு ஏற்பட்டது. அதன் பய னாக ‘பேசாமொழி’ பதிப்பகத்தினுடைய தொகுப்பு ஒன்று மிகவும் அர்த்தபூர்வமாக வெளிவந்துள்ளது.

தமிழர்களின் கலாச்சார நாகரிக படைப்பாக்கங்களில் சினிமா எந்த இடத்தை வகிக்கிறது என்ற கேள்விக்கு, இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘சாதி அடையாள சினிமா’. நீலன் என்பவர் தொகுத்துள்ளார். புத்தகத்தில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அருண்.மோ, நந்தினி, இயல், முதலானவர்களும் ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய மிகச் சிறந்த கட்டுரையை ஞாநி மொழிபெயர்த்துள்ளார். திரையரங்குகளில் சாதியடுக்குகளை உடைத்தெறிந்ததற்கு மாறாக, திரைப்படங்களில் சாதிய அடுக்குகளை போற்றி பாதுகாத்தது என்று கூறுகிறார் அருண்.மோ. நூலில் வெளிவந்துள்ள கட்டுரைகளில் உள்ள கருத்துகளைத் தொகுத்துக் காணலாம்: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ‘முதல் மரியாதை’ படத்துக்கு முன்புவரை எந்த ஒரு சுயசாதி பெருமை பேசும் படங்களிலும் நடிக்காதபோது ரஜினிக்கும் கமலுக்கும் அதற்கான தேவை எதனால் வந்தது? தான் நடித்த ‘எஜமான்’ ஒரு கதாநாயகனின் வீரதீரத்தை பேசும் படமென்று அம்மாஞ்சியாக நினைத்துக்கொண்டுகூட ரஜினி நடித்திருக்கலாம். ஆனால், நிகழும் சமூக அமைப்பில் சாதிய பிரச்சினைகளை உணராதவரா ரஜினிகாந்த்?

‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்’ என்றால், ‘யார் அந்த எஜமான்? யாருக்கு அவர் எஜமான்?’ என்று கேள்வி கேட்காமலா என்று ஒரு நியாயமான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த கோமல் சுவாமிநாதன் நடத்திய ‘சுபமங்களா’ பத்திரிகையில், ‘கிழக்கு சீமையிலே’, ‘தேவர்மகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் விமர்சனம் வந்துள்ளன. அதில், ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தை ‘தமிழ் மண்ணின் படம்’, ‘எதார்த்த படம்’ என்கிறரீதியில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். அதில், தென்பட்ட சாதிய அடையாளங்கள் குறித்தோ அல்லது ‘தேவர்மகன்’ படத்தில் வெளியான சாதி பெருமிதம் குறித்தோ? பாடல் குறித்தோ ஒருவரி விமர்சனம் கூட இல்லை.

நாளடைவில் பாரதிராஜா சாதியத்தில் இறுகிப்போய், ‘பசும்பொன்’ போன்ற படங்களைப் படைத்தது மட்டுமல்லாமல் ‘திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா...’ என்று கோஷம்போட, பனைமரம்போல உயரமாக வளரவேண்டிய கலைஞன் எங்கோ வழிதவறி சிதைந்து போகிறார் என்று இத்தொகுப்பில் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் வெங்கடேஷ் சக்கரவர்த்தி.

தமிழ் சினிமாவின் நுட்பமான சாதிய அடையாளம் சித்தரிக்கப்பட்டது எப்போது? உண்மையாக அசல் கிராமம் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டது, எப்போது? தேவர், தலித் முரணை அடிப்படையாக கொண்டு உருவான ‘காதல்’ படம் தமிழ் சினிமாவில் மைல் கற்களில் ஒன்று என்கிறார் ஓர் ஆய்வா ளர்.

முன்னெப்போதையும் விட தமிழ் சினிமாவில் சாதி குறித்த உரையாடல் வெளிப் படையாக அதிகரிப்பதற்குக் காரணம் இயக்குநர் பா.இரஞ்சித் வருகை. அவரது முதல் படமான ‘அட்டக்கத்தி’தான் தலித் வாழ்க்கையை அதன் இயல்போடும் அழகோடும் சித்தரித்த முதல் தலித் சினிமா என்று சொல்லலாம். அதற்கு முன்பும் படங்களில் அம்பேத்கர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நீதிமன்றச் சுவர்களிலும் காவல் நிலையச் சுவர்களிலும் வெறும் பிம்பமாக மட்டுமே அம்பேத்கர் பயன்படுத்தப்பட்டார். ஆனால் பா.இரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’யில் சுவரோ வியங்களில் தென்பட்ட அம்பேத்கர், வேறு அர்த்தமும் அரசி யல் முக்கியத்துவம் பேசுகிறார்.

இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ நேரடியாகவே தலித் அடையாளத்துடனும் அரசியலுடனும் வெளிவந்தது. தங்களுக்கான முன்னோடியாக அம்பேத்கர், அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை வெளிப்படையாக முன்னிறுத்திய முதல் சினிமா ‘மெட்ராஸ்’.

கபாலி ஏன் வந்தார்?

வழக்கமான வணிக அம்சங்கள் இருந்தபோதும் ‘புளூ பாய்ஸ்’ நடனக்குழு தொடங்கி பல்வேறு காட்சிகளில் பாய்ந்த அம்பேத்கரின் நீலவண்ணம் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. வெறும் சுவரோவியங்களாகவும் சிலைகளாகவும் இருந்த அம்பேத்கர் மூன்றாவது படமான ‘கபாலி’யில் வசனமாகவே வந்துவிட்டார் ‘மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது’, ‘கலகம் செய்து ஆண்டைகளின் கதை முடிப்பான்’ போன்ற வரிகள் சாதிய மனம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதிய உளவியல் என்றால் என்ன?

ரஜினி வானவராயனாக நடித்ததை சகித்தவர்களால் அவர் தலித் ‘கபாலி’யாக நடித்ததைச் சகிக்க முடியவில்லை, சின்னக்கவுண்டர், தேவர் மகன் மற்றும் இயக்குநர் முத்தையாவின் படங்களோடு பா.இரஞ்சித்தின் படங்களையும் பட்டியலில் இணைத்து அனைத்தும் ‘சாதியப் படங்கள்’ என நிரூபிக்கின்றனர். இத்தனை ஆண்டுகாலத் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு தலித் வாழ்வியல் பதிவுக்கு எதிரான அநீதியான எதிர்வினைகள் நமது சாதிய மனநிலையை வெளிச் சம் போட்டுக் காட்டுகின்றன.

மேல்சாதிக் கலை

சிவாஜிகணேசனைவிட எம்.ஜி.ஆரும் கமல்ஹாசனைவிட ரஜினிகாந்தும் அதிக செல்வாக்கு பெற்ற நடிகர்களாக இருப்பதற்குப் பின்னால் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது. தமிழர்களான நடிகர்களைச் சாதி அடையாளங்களோடு அணுகும் தமிழ் ரசிக மனம், எந்தவொரு நடிகரையும் உச்ச நடிகராக ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குகிறது.

எனவே சாதி அடையாளம் தெரியாத பிற மாநிலத்தில் பிறந்த நடிகர்களை உச்ச நடிகர்களாகத் தேர்ந்துகொள்வது எளிதாக இருக்கிறது. இத்தையை அடையாளச் சிக்கல் என்பது அடிப்படையில் சாதியச் சிக்கலே.

1928-ல் சென்னை மியூசிக் அகாடமி உருவாக்கப்பட்டதும், பரதநாட்டியமும் கர்னாடக இசையும் உயர் கலாச்சார அளவுகோலாக நிறுவனமயமாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. பரத நாட்டியத்துக்கும் கர்னாடக இசைக்கும் வேறுபட்டதாக, மறுபுறம் தமிழ் அடித்தள மக்கள் ஆதரிக்கும் கீழ்கலாச்சாரம் என்று கருதப்பட்டவையாக கம்பெனி நாடகமும், நாட்டார் கலையக தெருக்கூத்தும் இருந்தன.

கிராமங்களில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து அறுவடை முடிந்த பிறகு கோடைக் காலத்திலும், பார்ப்பனரல்லாதோரின் இந்துக் கோயில் திருவிழாக்களிலும் விடிய விடிய நடத்தப்பட்டு வந்தது. கீழ்த்தர கலாச்சார ரசனையின் அளவு மட்டமாகத் தெருக்கூத்து தமிழ் மேட்டுக்குடியால் கருதப்பட்டு, அருவருக்கப்பட்டது.

தன் குழந்தைப் பருவம் பற்றி எழுதும்போது, தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்: ‘முகத்தில் சாயம் போட்டு மகாபாரதக் கதைகளைச் சொல்லி திரிகிற அந்த ரசமான வேஷக்காரர்களைக் கீழ்மக்கள் என்றே எனது உயர்ந்த ஜாதி எனக்கு அடையாளம் காட்டிற்று!’’ என்கிறார், தன் இளமைக் கனவைச் சொல்லும் பாண்டியன்.

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை சினிமாவோடும் எடுத்துக்காட்ட முடியும். அதற்கு இந்தப் புத்தகம் ஒரு சான்று.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x