Last Updated : 15 May, 2018 08:35 AM

 

Published : 15 May 2018 08:35 AM
Last Updated : 15 May 2018 08:35 AM

காற்றில் கரையாத நினைவுகள் 12: பழக்கமும் முதிர்ச்சியும்!

பெ

ண் என்பவள் அதிசயமாகவும், ஆண் என்பவன் அவசர மாகவும் அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அன்று மழலையர் வகுப்பிலேயே தனி வரிசைகள். ஆரம்பப் பள்ளியில் சகஜமாகப் பழகியவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒதுங்கி அமர்வது பழக்கம்.

இருபாலர் பயிலும் பள்ளிகள் அன்று மிகவும் குறைவு. எதற்கு வம்பு என நிர்வாகம் நினைத்தது. எங்கள் பள்ளியோ பெண்களும் படிக்கும் பள்ளி. எட்டாம் வகுப்பு வருகிறபோது அரும்பு மீசை ஆரம்பிக்கும். பெண்கள் தாவணி அணிவது அப்போது கட்டாயம். ஒன்றாய்ப் படித்தாலும் ஒரு வரிகூட பேசாமால் உம்என்று இருக்க வேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. தூரத்தில் ஆண் வருகிறபோதே தலையைத் தாழ்த்திக்கொண்டு பார்க்காததுபோல் கடந்து செல்ல வேண்டும். அப்படியே ஏதேனும் கேட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதே வழக்கம்.

பிரிக்கப் பிரிக்க ஆர்வம் அதிகரிக்கும். 6-ம் வகுப்பிலேயே சில மாணவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசி அசிங்கப்படுவார்கள். பெண்க ளைப் பற்றியே சிந்திப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஒவ் வொரு வகுப்பிலும் ஒரு பெண்ணை உலகப் பேரழகியாக அறிவித்துவிடுவார்கள். அதை அறிந்த மற்ற அத்தனை பெண்களுக்கும் வருத்தம் ஏற்படும். அவரவர் கண்களில் அவர்களே அழகு. நான்கைந்து மாணவர்கள் அந்தப் பெண்ணை பகிரங்கமாகப் பின்தொடர்வர்கள். எங்குச் சென்றாலும், என்ன செய்தாலும், அவர்கள் வீட்டு நாய் போல சென்று வருவதை அனைவரும் அறிவர். வீடுவரை வழியனுப்பிவிட்டு வருவதும் உண்டு. 8-ம் வகுப்பு வரை படிப்பில் எட்டாத உயரத்தில் இருந்தவர்கள் இதனால் குட்டிக்கரணம் போட்டு மதிப்பெண்களில் மந்தமாகி குப்புற விழுவதும் உண்டு.

கொடி கட்டிப் பறக்கும் பெண்கள்

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இந்த மாணவர்கள் காதல் கடிதங்களைக் கொடுப்பதும், அதைப் பெற்ற அப்பெண்கள் செருப்பைக் கழற்றிக் காண்பிப்பதும் உண்டு. சில நேரங்களில் கண்களால் அம்பு எய்தியது போதாதோ என்று எண்ணி, காகித அம்புகளை எறிவதும் உண்டு. இந்தப் பள்ளிப் பேரழகி கள் கல்லூரி சென்றதும் அங்கு தங்களைவிட இன்னும் அழகான பெண்களைப் பார்த்து உள்ளம் நொறுங்குவதும் உண்டு. அறிவால் சிறந்த பெண்கள் அங்கேயும் கொடிகட்டிப் பறப்பார்கள். அழகு எப் போதும் தொடர்புடைய உணர்வுதான் என்பது புரியும் போது காலம் கடந்திருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் 10-ம் வகுப்பில் 500-க்கு பெற்ற மதிப்பெண்களைவிட மேனிலை வகுப்பில் 1,200-க்கு பெற்ற மதிப்பெண்கள் குறைவு. கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து கனவுகளில் மிதந்ததால் வழுக்கி விழுந்த வரலாறு அது.

எங்கள் பள்ளி மேனிலை ஆனபோது ஆண்கள் மட்டும் படித்த பல பள்ளி மாணவர்கள் அங்கு சங்கமமாயினர். அவர்களுக்கு அதுவரை பெண்களின் வாசனையே கிடையாது. அவர்கள் அந்தப் புதிய அனுபவத்தில் வசமிழந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அவர் கள் மேற்படிப்புக் கனவுகள் சபலத்தின் காரணமாக சரிந்ததைக் கண்டிருக்கிறேன்.

இது கல்லூரியிலும் தொடர்வது உண்டு. மழலையர் வகுப்பில் இருந்து மேநிலை வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் வகுப்புகளில் படித்தவர்கள் கல்லூரிக்கு வந்ததும், அங்கிருக்கும் அத்தனை பெண்களும் மென்னடை போட்டு ஓடும் தேவதைகளாகத் தென்படுவார்கள்.

அவர்கள் பாட்டுப் போட்டிகளில் ஜாடையாகப் பாடி தங்கள் கனியாத காதலைத் தெரிவிப்பார்கள். இன்னும் சிலரோ முகத்தில் பச்சை குத்தாத குறையாக சிலர் பெயரை உதட்டில் இச்சை குத்தித் திரிவார்கள். எங்கள் கல்லூரியிலேயே நான்காண்டு பட்டப் படிப்பை கடைசி வரை முடிக்காமல் போனவர்கள் உண்டு.

ஆனாலும் அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இடைவெளி இருந்த காலம். அன்று பெண்கள் தங்குவதற்குத் தனி வளாகம். அவர்கள் அரங்கத்தில் படம் பார்க்க தனி நேரம். நாடகப் போட்டிகள் நடக்கும். ஆனால், ஆண்களே அனைத்திலும் பங்கு பெறுவார்கள். பெண்கள் வேடத்தில் மீசை சரியாக முளைக்காத மாணவர்கள் நடிப்பார்கள். குரலை பெண்மையாக்க பெரி தும் முயல்வார்கள். எங்கள் பல்கலைக்கழகத்திலேயே பல முன்மொழிவுகள் உரிய நேரத்தில் வைக்கப்படும். தள்ளப்பட்டவை நூறு என்றால், கொள்ளப்பட்டவை ஒன்றிரண்டு உண்டு. அந்த சொர்க்கத்திலேயே சில திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது உண்டு. நடந்த பிறகு வாழ்க்கை நரகமாக மாற இணைந்த வேகத்தில் பிரிந்தவர் உண்டு. நீடித்து நெடு வாழ்வு வாழ்பவரும் உண்டு.

பேதம் குறைந்த தமிழ்நாடு

இன்று ஆண் - பெண் பேதம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவ - மாணவியர் சகஜமாகப் பேசிப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒருவர் எழுதிய நோட்டை அடுத்தவர் வாங்கிப் படிக்கிறார்கள். சந்தேகம் கேட்டுத் தெளிகிறார்கள். சேர்ந்து தேநீர் பருகுவது சகஜமாகி இருக்கிறது. நூலகத்துக்கு ஒன்றாகச் செல்கிறார்கள். ‘வாடா’ ‘போடா’ என அழைப்பது இயல்பாகியிருக்கிறது. அதற்கு எந்த மாணவனும் கோபித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எங்கள் கல்லூரிப் பருவத்தில் அப்படி யாரும் அழைத்தும், கேட்டும் பழக்கமில்லை. இரண்டு பெண்கள் ஓர் ஆணோடு அமர்ந்து பேசுவதும், இரண்டு மூன்று ஆண்களோடு ஒரு பெண் சொந்த ஊருக்கு தொடர்வண்டியில் பயணிப்பதும் இன்று யாருக்கும் விகற்பமாகப் படவில்லை. மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வகுப்புத் தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்கிறார்கள். ரத்தம் தரவும் சித்தம் செய்கிறார்கள்.

வீடு வரை நட்பு

மகள் வேறொருவரோடு நட்பாகப் பழகுவதை அனுமதிக்கும் பெற்றோர் இன்று. வீடுவரை மகளின் வகுப்புத் தோழனை அழைத்து வந்தாலும் மரியாதை கொடுத்து சவரட்சணை செய் யும் மனப்பான்மை. இரண்டு வீட்டுப் பெற்றோரும் அறிமுகமாகிக்கொள்ளும் அளவு விசாலமான பழக்கவழக்கம். ‘பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கக் கூடாது’ என்ற பழைய பஞ்சாங்கத்தை உதறி எறிந்துவிட்டு ‘என் மகள் தவறு செய்ய மாட்டாள்’ என்ற திடமான நம்பிக்கை. அன்று ஆண் ஓட்டுகிற இருசக்கர வாகனத்தில் அந்நியப் பெண் அமர்ந்து செல்வது தீயாய்ப் பரவும் செய்தி. இன்று ஏற்றிக்கொள்வதும், பயணம் செய்வதும் சாதாரணம். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவோ, பெரிதுபடுத்தவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை.

அன்று வகுப்புத் தோழியிடம் ‘இன்று உன் உடை அழகாக இருக்கிறது’ என்று சொன்னால் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு செல்லும் மனப்பான்மை இருந்தது. இன்று புலனத்தில் ‘நீ அழகு’ என்று தகவல் அனுப்பினால் கைகூப்புகிற சமிக்ஞைகளை அனுப்புவது சாதாரணம். எந்த மாணவனாவது தோழியிடம் விரும்புவதாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வதிலும், மறுப்பதிலும் கண்ணியம் காட்டுகிற பெரும்போக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுத்து விட்டால் ஒரு சில இடங்களில் நிகழும் வன்மத்தைத் தவிர மற்ற நேர்வுகளில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லி திருமணத்துக் கும் செல்லும் தாராளம் இருக்கிறது.

சென்னைக் கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த கிளர்ச்சியில் எத்தனையோ கல்லூரி மாணவர்கள் சில பகல் இரவுகளாக தவமிருந்தனர். அங்கேயே உணவு, உறக்கம் என்று போராட்டத்தின் நோக்கத்தை அடையும்வரை தீர்க்கமாக இருந்தனர். அங்கே பெற் றோர் துணிச்சலாக தங்கள் மகள்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு கோஷமிட்டார்கள். மற்ற மாண வர்களோடு கலந்து குரல் கொடுத்தார்கள். அவர்களைக் கண்காணிக்க யாருமில்லை. அவர்களே தங்களுக்கு வேலி யாக இருந்தார்கள்.

வட இந்தியாவில் இருந்து வந்த என் நண்பர் ‘மாணவ - மாணவியர் ஒன்றாக ஈடுபடும் இத்தகைய கிளர்ச்சிக்கு வடக் கில் வாய்ப்பே இல்லை’ என்று சிலாகித்தார்.

சின்ன அசம்பாவிதம்கூட நடக்காமல் அத்தனை இதயங்களிலும் அன்புச் சுவடுகளை மட்டும் பதித்துவிட்டு விலகிச் சென்றது அந்தப் பெருங்கூட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்திய மாகி இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

- நினைவுகள் படரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x