Last Updated : 11 Mar, 2018 11:44 AM

 

Published : 11 Mar 2018 11:44 AM
Last Updated : 11 Mar 2018 11:44 AM

மரணத்தை வென்ற எழுத்து!

யிரைப் பறிக்கும் நோய்களை வெல்ல நவீன மருத்துவ அறிவியல், கால ஒப்பீட்டு அளவில், தன் பக்கமிருந்து நடத்திவரும் போரில் பெற்ற வெற்றிகள் அதிகம் என்றாலும், அதுவும் தோல்வியைச் சந்திக்கின்ற சில நோய்களில் ஒன்றாகப் புற்றுநோய் இருக்கிறது. நவீன மருத்துவத்தின் வலிமையை நன்குணர்ந்த, எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை உயிர்ப்பித்துக் கொடுத்த, 36 வயதே ஆன இளம் மூளை அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவர் மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானபோது, அவருள் எழுந்த மனவெழுச்சியே இந்நூல்.

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த முதல் தலைமுறை அமெரிக்க மருத்துவரான பால் கலாநிதி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர் பட்ட மேற்படிப்பு முடித்த பயிற்சியாளராக, இளம் வயதுக்குள்ளேயே தன்னளவில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதபோதிலும், அவருக்கு நான்காம் நிலை நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகளை மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப் போராடி, அதில் வெற்றியும் பெற்ற தன் வாழ்க்கையின் உன்னதத் தருணங்களை, காதலின் உச்சத்தில் இருந்த திருமண வாழ்க்கை, மருத்துவ உலகில் தான் மேலும் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருந்த சாதனைகள் ஆகியவை உடைந்து சிதறிப்போகும் சூழ்நிலையில், மரணத்தை எதிர்கொள்ள வேண்டி யிருந்த தருணங்களை, நோயின் பன்முகத் தாக்கங்களை, மருத்துவராகவும் நோயாளியாகவும் மாறி மாறி அனுபவிக்க நேர்ந்த தருணங்களை இந்நூலின் மூலம் ஒரு மீள்பார்வைக்கு உள்ளாக்குகிறார்.

ஓர் அறுவைசிகிச்சை நிபுணர் என்ற வகையில், நவீன மருத்துவம் மரணத் தைத் தள்ளிப்போடுவதில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது என்பதை, அனுபவத் தில் உணர்ந்தவராக, மருத்துவத்தின் இந்த வெற்றிக்குப் பிறகு, ஒரு நோயாளி யின் எதிர்கால வாழ்க்கை இயல்பான ஒன்றாக இல்லாமல், கழிவிரக்கம் நிரம்பியதாக, தனிமனிதப் போராட்டம் நிரம்பியதாக மாறிவிடும் சூழல் இருக்கு மானால், அந்த நோயாளி மரணத்தை எதிர்கொள்வதே சிறப்பானது என்ற கருத்தோடு முனைப்புடன் செயல்பட்டுவந்த ஒரு மருத்துவர், தன்னளவில் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்போது, அவரது சிந்தனை எவ்விதப் பிறழ்வுமின்றித் தொடர்வதை இந்நூல் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

எந்தக் கணத்திலும் தன் உயிர் மூச்சு வெறும் காற்றாக மாறவிருப்பதை அறிந்த நிலையில், அந்த இளம் மூளை மருத்துவ அறுவைசிகிச்சை நிபுணர் எவ்வாறு மரணத்தை எதிர்கொண்டார் என்பதைக் கவித்துவ நடையில் கூறியுள்ளது இந்நூல். அவரது மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வெளியாகி, முதல் ஆறு மாதங்களுக்கு மிக அதிக அளவில் விற்பனையான நூல் என்ற இடத்தைப் பிடித்தது. இவ்வுலகில் எந்த நேரத்திலும் மரணிக்கவிருப்போருக்கு மட்டுமல்ல, பொதுவாகவே மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை மனிதகுலத்துக்கு எடுத்துக் கூறும் நூல் இது. தனது புத்தகத்தின் மூலம் அமரத்துவத்தைப் பெற்றுவிட்டார்

பால் கலாநிதி. ‘வென் ப்ரெத் பிகம்ஸ் ஏர்’ –

பால் கலாநிதி – பெங்க்வின் ராண்டம் ஹவுஸ் – விலை: ரூ. 599

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x