Published : 14 Nov 2017 09:55 AM
Last Updated : 14 Nov 2017 09:55 AM

கடவுளின் நாக்கு: 71- நட்பின் வயது

தி

ருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடுவது போல, நட்பாகி 25 ஆண்டு ஆனதை யாராவது கொண்டாடுவார்களா என்ன?

சமீபத்தில் அப்படி ஓர் அழைப்பிதழைக் கண்டேன். ஆவடியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது நண்பருடன் நட்புகொண்டு 25 ஆண்டு தொடங்குகிறது, அதைக் கொண்டாடுவதற்காக அந்த அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அழைப்பிதழை கையில் வைத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவரின் நட்பு எத்தனை காலம் நீடிக்கக்கூடியது?

கடந்த காலங்களில் நட்பின் வயது நீண்டது. பள்ளி வயதில் தொடங்கிய நட்பை வாழ்நாளின் இறுதிவரை உறுதியாகக் கொண்ட பலரை நான் அறிவேன். இன்று, அதுபோன்ற நட்புகள் குறைவு. ஃபேஸ்புக்கில் ஒருவருக்கு நூறோ இருநூறோ நட்புகள் இருக்கிறார்கள். நிஜத்தில் ஐந்தோ பத்தோ இருக்கக்கூடும். அதில், ஒருவரோ அல்லது இருவரோதான் நெருக்கமான நண்பர்கள். அவர்களுடன் கூட சில ஆண்டுகளில் நட்பு முறிந்துவிடுகிறது அல்லது விலகிப் போய்விடுகிறது.

பேசும் மவுனம்...

நட்பைக் கொண்டாடுகிற நம்முடைய காலத்தில், ஏன் நட்பின் காலம் இவ்வளவு குறைவாக இருக்கிறது?

புதிய புதிய நண்பர்களைத் தேடி நேசிப்பது நல்ல பழக்கம்தான், ஆனால் நெருக்கமான நண்பர்களைக் கூட நாம் ஏன் விலக்கிவிடுகிறோம்? அல்லது புரிந்துகொள்ளாமல் போகிறது.

நல்ல நண்பர்கள் சதா பேசிக்கொண்டே இருப்பதில்லை. அவர்கள் மவுனத்தை புரிந்துகொள்கிறார்கள். பணமோ, பொருளோ எதற்காகவும் நட்பாக பழகுவதில்லை. மனதைப் புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசுகிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.

ஒரேயொரு நல்ல நண்பன் இருந்தால்கூட போதும். வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். ஆனால், இன்று ஐந்து நிமிஷத்தில் நட்பு தொடங்கி, ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் முடிந்து போய்விடுகிறது.

வேலை அல்லது தொழில் காரணமாக நண்பர்கள் பிரிந்து போவது உண்டு. ஆனால், அவர்களின் நட்பு பிரிவுபடுவது இல்லை. எங்கிருந்தாலும் நலம் விசாரித்துக்கொண்டு உண்மையான அன்போடுதான் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய இளைய தலைமுறைக்கு நட்பு என்பது விளையாட்டுத்தனமாகவே இருக்கிறது.

அற்ப விஷயத்துக்காக நட்பை உதறி எறிகிறார்கள். நட்பெனும் உணர்ச்சிபூர்வமான உறவை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பண விஷயமும், சந்தேகமுமே பலரது நட்பை முறித்திருக்கிறது.

இரண்டு தனிப்பட்ட மனிதர்களின் நட்பு, இரண்டு குடும்பங்களின் நட்பாக மாறி இருவரது வாழ்க்கையும் மேம்படுத்திய நிகழ்வுகளை நான் அறிவேன். யார் பெரியவர்? யார் சிறியவர்? யார் படித்தவர்? யார் ஏழை என எந்த பேதமும் நட்புக்கு கிடையாது. நம்முடைய வீட்டைப் போலவே உரிமையுடன் நண்பனின் வீட்டிலும் பழகவும், சாப்பிடவும் முடியும் என்பதே நிஜம்.

பிரிவின் தேநீர்...

நடைபயிற்சிக்குச் செல்லும் பூங்காவில் இரண்டு வயதானவர்களைக் கண்டிருக்கிறேன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஒருவர் தாடி வைத்திருப்பார். 70 வயது இருக்கும். அவர் எப்போதும் பிளாஸ்கில் தேநீர் கொண்டுவருவார். இருவரும் அதைக் குடிப்பார்கள்.

சில நாட்கள் ஒருவர் வரவில்லை என்றால் மற்றவர் கவலையோடு உட்கார்ந்திருப்பதையும் கண்டிருக்கிறேன். சமீபத்தில், இருவரையும் காணவில்லை. “என்னவானது அவர்களுக்கு?’’ என இன்னொரு நண்பரிடம் கேட்டேன்.

“தாடி வைத்திருந்த நாராயணன் இறந்துபோய் விட்டார். அன்றுமுதல் அவரது நண்பர் ஆறுமுகம் பூங்காவுக்கு வருவதில்லை...’’ என்றார். கேட்கவே வருத்தமாக இருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆறுமுகத்தை மறுபடியும் பூங்காவில் பார்த்தேன். அடர்ந்த தாடி. கவலை படிந்து போன முகம். அவர் கையில் ஒரு பிளாஸ்க். கூடவே இரண்டு குவளைகள். எப்போதும் போல இரண்டு குவளையிலும் தேநீர் ஊற்றிவிட்டு ஒன்றை குடித்துவிட்டார். மற்றதை அருகில் வைத்தபடியே வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த டீயைக் குடிப்பதற்கு நாராயணன் உலகில் இல்லையே என்ற ஏக்கம் அவரது முகத்தில் வலியாக படர்ந்திருந்தது.

பூங்காவை விட்டுக் கிளம்பும்போது அந்த தேநீரை அருகிலுள்ள செடி ஒன்றில் கொட்டிவிட்டு கிளம்பிப் போனார். அதன்பிறகு ஆறுமுகம் ஒவ்வொரு நாளும் இதுபோல செய்வதை கண்டேன்.

நாராயணனின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நட்பின் வலி அவருக்குள் ஆழமாக இறங்கியிருந்தது. ஆகவே, நண்பருக்கான தேநீரை தினமும் கொண்டுவந்து காணிக்கையாக்குகிறார். இப்படி நட்பைப் போற்றும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இதன் இன்னொரு பக்கம் ஃபேஸ்புக்கில் அறிமுமான நண்பன் ஏதோ கோபத்தில் எழுதிவிட்டான் என, வீட்டில் அழுது கொண்டு சாப்பிடாமல் கிடக்கும் இளைய தலைமுறையைக் காணும்போது, இவர்களுக்கு நட்பை எப்படி புரிய வைப்பது என கவலையாக இருக்கிறது.

முயலுக்கு புரிந்த நிஜம்

அதிக நண்பர்களைக் கொண்டவர்களுக்கு ஆபத்தில் ஒருவர் கூட உதவ மாட்டார்கள் என்று ஒரு கதையை ஈசாப் சொல்லியிருக்கிறார். சிறார்களுக்கு சொல்லப்படும் இக்கதை பெரியவர்களுக்கும் ஏற்றதே.

காட்டில் வாழ்ந்து வந்த முயலுக்கு நிறைய நண்பர்கள். பூனை, குரங்கு, காட்டெருமை, மான், யானை, சிறுத்தை, மாடு, ஆடு என எல்லாவற்றையும் தனது நண்பனாகக் கருதியது. எல்லா விலங்கும் தனது நண்பர்களே என பெருமை அடித்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் காட்டில் ராஜாவின் வேட்டை நடைபெற்றது. வேட்டை நாய்கள் ஆவேசத்துடன் பாய்ந்து வந்தன. இதைக் கண்ட முயல், தன்னை வேட்டை நாய்கள் கொன்றுவிடக் கூடாதே எனப் பயந்து, வேகமாக தாவியோடி மானிடம் சென்று, “நண்பா... என்னை காப்பாற்று. உன் முதுகில் ஏற்றிக்கொண்டு ஒடு’’ என சொன்னது.

அதற்கு மான், “என்னை காப்பாற்றிக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. உன்னை எப்படி நான் காப்பாற்றுவது?’’ என மறுத்துவிட்டது. உடனே, முயல் மலை உச்சியை நோக்கி ஒடியது.

வழியில் தென்பட்ட காட்டு எருமையிடம், “நீயாவது என்னை காப்பாற்ற உதவி செய்யேன்...’’ எனக் கேட்டது. காட்டு எருமையும் உதவ மறுத்துவிட்டது.

இப்படி ஆடு, குரங்கு, கரடி என எந்த விலங்கும் அதற்கு உதவ முன்வரவில்லை.

‘நிறைய நண்பர்கள் இருப்பதாக பெருமையாக இருந்தேனே. இன்று ஆபத்தில் ஒருவர் கூட உதவ முன்வரவில்லையே...’ என முயல் வருந்தியது. இதற்குள் வேட்டை நாய்கள் அதை நெருங்கிவிட்டன. முடிவில் வேறுவழியின்றி முயல் மலைஉச்சியில் இருந்து தாவிக் குதித்து உயிர் தப்பியது.

அதன்பிறகே உண்மையான நண்பன் ஒருவன் இருந்தால்கூட போதும் என்கிற உண்மை முயலுக்கு புரிந்தது என, அந்தக் கதை முடிகிறது.

இது சிறார்களுக்கு சொல்லப்படும் எளிய கதை. ஆனால், இந்தக் கதை இன்றைய ஃபேஸ்புக் யுகத்துக்கும் பொருத்தமானதே. ஃபேஸ்புக், ட்விட்டரில் உருவான நண்பர்கள், உங்களை வேடிக்கை பார்ப்பவர்கள்.

ஆபத்தில் உங்களை கைவிட்டுவிடுவார்கள். அரிதாக ஒரு சிலரே உதவக்கூடியவர். பெரும்பான்மையினர் உங்களைப் புரிந்துகொள்வதில்லை. ஒரு சிலர் உங்களை ஆபத்தில் மாட்டி விடுவதும் உண்டு.

ஆகவே, நட்பு என்பது நிமிட நேரத்தில் தோன்றி மறையும் மின்னல் என நினைக்க வேண்டாம். உண்மையான நட்பு என்பது ஆலமரத்தின் வேரைப் போல கண்ணுக்குத் தெரியாமல், உறுதியாக, ஆழமாக புதையுண்டிருப்பது. நீங்கள் நல்ல நண்பனாக இருங்கள். நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எந்த சிக்கலையும் தைரியமாக எதிர்கொண்டு ஜெயிக்கலாம்.

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramiki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x