Published : 04 Nov 2017 09:56 AM
Last Updated : 04 Nov 2017 09:56 AM

இது மாற்றத்துக்கான தத்துவம்!

டதுசாரிகளுக்கு இந்த ஆண்டு கொண்டாட்டத்துக்குரிய ஆண்டு. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாள் ஆண்டு, மூலதனம் நூலின் முதல் பாகம் வெளிவந்ததன் 150-வது ஆண்டு, ரஷ்யப் புரட்சியின் 100-வது ஆண்டு என்று போற்றுதலுக்குரிய நினைவுகள் நிறைந்த ஆண்டு. அதன் ஒரு பகுதியாக, மார்க்ஸின் 200-வது பிறந்த நாளையொட்டி மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை பாரதி புத்தகாலயம் மறுபிரசுரம் செய்திருக்கிறது.

1983-ல் மாஸ்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக தமிழகம் முழுவதும் வாசிக்கக் கிடைத்த இந்நூல்கள் தற்போது பதிப்பில் இல்லை. எனவே இத்தொகை நூல்களின் வரவு குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், இந்த மறுபதிப்பின் சில பகுதிகள் மு.சிவலிங்கத்தால் மீண்டும் மொழிபெயர்க்கப்பட்டும், வீ.பா.கணேசனால் முழுமையாக ஒப்புநோக்கப்பட்டும் வெளியாகியுள்ளன.

மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துகளின் முழுத் தொகுதி 50 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகப் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அவர்களது கோட்பாடுகளைப் பற்றிய எளிய அறிமுகத்தை வழங்கும் வகையில் இத்தேர்வு நூல்கள் அமைந்துள்ளன. இத்தொகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனத்தின் முதல் இரண்டு பாகங்களின் சில பகுதிகளோடு இந்தியா வைப் பற்றிய மார்க்ஸின் கட்டுரைகள்; ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்; கூலி, விலை, லாபம்; லூயி போனபார்ட்டின் 18-ம் புரூமேர்; பிரான்சின் உள்நாட்டுப் போர் ஆகியவையும் மார்க்ஸின் இறுதி நிகழ்ச்சியில் எங்கெல்ஸ் ஆற்றிய உரையுடன் அவர் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்; மனிதக் குரங்கு மனிதனாய் மாறியதில் உழைப்பின் பாத்திரம்; ஜெர்மனி புரட்சியும் எதிர்ப் புரட்சி யும் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் அடங்கியுள்ள பல நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் தனியாகவும் வெளியிடப்படுகின்றன. என்றாலும் இத் தொகுப்பின் வழியாக அவற்றை வாசிக்கும் வாசகர்கள் முழுமையான பார்வையொன்றைப் பெற முடியும்.

அரசியல், தத்துவம், பொருளாதாரம்

விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களான மார்க்ஸும் எங்கெல்ஸும் அரசியல், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளைப் பற்றி மிக விரிவான பகுப்பாய்வுகளை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது ஆய்வுகளின் குவிமையம் இந்த மூன்று துறைகளும்தான் என்றபோதும் அவை வரலாறு, மானுடவியல், சட்டவியல், கலை இலக்கியம் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தத்தம் துறைகளில் புதிய வெளிச்சங்களை அளிக்கக்கூடியவை.

இருவரது எழுத்துகளின் இலக்கு பொதுவுடைமை, ஆனால் அதற்கான அடிப்படைக் கருத்துகள் அதுவரையிலான நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ அறிவுச் சேகரத் தின் அடிப்படையிலானவை. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி வர்க்கச் சிந்தனையோடு மீள்வரைவு செய்த மாபெரும் பணியை அவர்கள் செய்துமுடித்தார்கள். அதன் பிறகு வரலாறு, கதாநாயகர்களாகக் கட்டமைக்கப்பட்டவர்களிடமிருந்து விடுபட்டு உழைக்கும் மக்களின் வரலாறாக வடிவெடுத்தது. உற்பத்தியானது முதலாளித்துவமிடமிருந்து விடுபட்டு, சமதர்மப் பாதையை நோக்கி நடக்க முயற்சித்தது. தத்துவம் பொருள்முதல்வாதப் பார்வையை நோக்கித் திரும்பியது.

தொழிலாளர்களது சர்வதேச அமைப்பான கம்யூனிஸ்ட் கழகம் 1847 நவம்பரில் லண்டனில் நடத்திய மாநாட்டில் மார்க்ஸும் எங்கெல்ஸும் பொதுவுடைமைக் கட்சியின் தத்துவார்த்த, நடைமுறை வேலைத் திட்டத்தை வகுத்தளித்தனர். இந்த வரைவே ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற பெயரில் பிரபலமானது. ஜெர்மானிய தத்துவ அறிஞர்கள் லுத்விக் ஃபாயர்பாக், ஹெகல் ஆகியோரைப் பற்றி மார்க்ஸ் எழுதி உள்ள நூல்களும் கட்டுரைகளும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை வழங்குபவை.

அமெரிக்காவைச் சேர்ந்த லெவிஸ் ஹெச்.மார்கன் எழுதிய ‘பண்டைக்கால சமூகம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டும் அதைப் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகளை அடியொற்றியும் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய புத்தகம் சமூகவியலின் அரிச்சுவடியாகக் கொள்ளத்தக்கது. இந்நூலின் தாக்கத்தால் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைகளில் நடந்த ஆய்வுகளில் முன்னோக்கிய பெரும் பாய்ச்சலொன்று நிகழ்ந்திருக்கிறது. நிலவுடைமையைப் பாதுகாக்கும் வகையிலேயே குடும்ப அமைப்புகளும் அகமண முறைகளும் பின்பற்றப்பட்டன என்ற அந்த நூலின் முடிவு பெண்ணிய ஆய்வுகளுக்கும் முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் நடந்த புரட்சிகளின் வரலாற்றைப் பகுப்பாய்வு செய்து மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். அவற்றின் வழியாக அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி பல வெளிச்சப் புள்ளிகளை வாசகர்கள் பெற முடியும். 1848-49-களில் நடந்த ஜெர்மன் புரட்சியின் விளைவுகளைப் பற்றி மார்க்ஸின் ஒப்புதலோடு அவரது பெயரில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளில் ஒரு வரி இது. ‘முதலாளி வர்க்கத் தின் ஒவ்வொரு அரசியல் தோல்வியும் அதற்குப் பின்னால் வணிகச் சட்டத் துறையில் ஒரு வெற்றியை ஈட்டியுள்ளது’. இன்று பன்னாட்டு வர்த்தகக் கூட்டமைப்புகளின் வழியாக உறுப்பினர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் திருத்தங்களுக்கான காரணமே அதுதானே.
 

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

லண்டனில் மார்க்ஸ் வசித்தபோது இந்தியாவின் அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார நிலைகளைப் பற்றியும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தியாவை இத்தாலி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டு அவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விரிவாகப் பேசியிருக்கிறார். காலனியாதிக்க ஆட்சிகளின் காரணமாக, புதிய உலகத்துக்கான வாய்ப்புகளையும் பெற முடியாமல், ஏற்கெனவே இருந்த பழமையான சமூகத்தையும் இழந்துவிட்டு நிற்கும் இந்திய துணைக்கண்டத்தின் நிலையை வேதனையோடு எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரைகளிலிருந்து அரசு இன்றும் செயல்படுத்திவரும் பாசனத் திட்டங்களுக்கான காரணம், சுயவிருப்பமான கூட்டு முயற்சிக்கு வாய்ப்பு நேரவில்லை என்ற வரலாற்றுக் காரணங்களையும்கூட நம்மால் அறிந்துகொள்ள முடியும். பிரிட்டிஷ் நீராவிச் சக்தியின் ஆதிக்கப் பரவலை விவரிக்கும் இந்தக் கட்டுரைகளின் வழியாக இந்திய விடுதலைப் போரில் காந்தி கைராட்டினத்தை ஆயுதமாக எடுத்ததன் காரணத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

‘தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் பொருள்விளக்கப்படுத்தி மட்டுமே உள்ளனர்; விஷயம் என்னவோ அதை மாற்றி அமைப்பதுதான்’ என்பார் மார்க்ஸ். அவரும் அவரது நண்பர் எங்கெல்ஸும் மானுட வரலாற்றுக்குப் புதிய பொருள்விளக்கம் எழுதியவர்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதை விளக்குவதல்ல, மாற்றியமைப்பது.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x