Published : 28 Oct 2017 11:42 AM
Last Updated : 28 Oct 2017 11:42 AM

நம் வரலாற்றிலிருந்து புரட்சிக்கான பாதையைச் சமைக்க வேண்டும்! - மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன் நேர்காணல்

ஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் பொற்காலம் என்று 70-களையும் 80-களையும் என்று சொல்லலாம். அப்போது கப்பல் கப்பலாக வந்திறங்கிய ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களை பூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா, தொ.மு.சி. ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) உள்ளிட்ட சொற்பமானவர்களே மொழிபெயர்த்தார்கள்.

அவர்களில் ரஷ்யாவுக்கே சென்று மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர் நா. தர்மராஜன். எட்டு ஆண்டுகள் அங்கு தங்கிப் பணிபுரிந்த காலத்தில் 50-க்கும் மேற்பட்ட ரஷ்யப் புத்தகங்களை ஆங்கிலம் வழியாகத் தமிழுக்குத் தந்துள்ளார். தமிழகம் திரும்பிய பிறகு டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

அடுத்த ஆண்டுடன் அவருடைய மொழிபெயர்ப்புப் பணி 60 ஆண்டுகளைத் தொடுகிறது. பல்வேறு துறைசார் நூல்களையும் கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், ஐன்ஸ்டைன், ஜவாஹர்லால் நேரு உள்ளிட்டோரது நூல்களையும் இலகுவான மொழியில் நா. தர்மராஜன் தமிழில் தந்திருக்கிறார்.

மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் பயின்று அங்கேயே ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவப் பருவத்திலேயே பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார். தமிழகத்தின் முன்னோடி கல்லூரி ஆசிரியர் இயக்கமான 'மூட்டா' உருவாக அடிப்படைக் காரணமாக இருந்தவர். மொழிபெயர்ப்புப் பணிகள், தொழிற்சங்கப் பணிகள், இடதுசாரிச் சிந்தனை மீதான பிடிப்பு, கம்யூனிஸ இயக்கப் பணிகள் என அவருடைய பன்முகம் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

நேரடியாகத் தமிழில் எழுதுபவர்களுக்கான அங்கீகாரமே அபூர்வமாக இருக்கும் நிலையில், அரிய நூல்களைத் தமிழில் வாசிப்பதற்கு வகைசெய்த பேராசிரியரின் பணி பெரிதாகக் கொண்டாடப்படாததில் ஆச்சரியமில்லை. இன்றைக்கும்கூட புத்தகங்கள் மட்டுமே அவருக்குத் துணையாக இருக்கின்றன.

28CHVAN_Book_kakki-udaiyum.jpgright

அவரைத் தொடர்புகொள்வதற்கான ஒரே வழி கடிதங்கள். நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களை தினசரி படித்து உடனடியாக பதில் போட்டுவிடுகிறார். 82 வயதை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அவர் பழைய ஞாபகங்களைத் துல்லியமான நினைவுத்திறனுடன் அசைபோடுகிறார். அன்றைக்கு வந்திருந்த கடிதங்களுக்கான பதிலை பெரிய எழுத்தில் எழுதி முடித்த பிறகு, தொடர்ந்து பேசினார்:

புத்தகங்களை நோக்கி நீங்கள் ஈக்கப்பட்டதன் பின்னணி…

என் தந்தையும் சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவருமான ரா. நாராயணன், சிறு வயதிலேயே என் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவித்தார். விக்டர் ஹ்யூகோவின் 'ஏழை படும்பாடு' நாவல் உட்பட கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த பல்வேறு பிரெஞ்சு நூல்களைப் படிக்கும் வாய்ப்பு பள்ளிக் காலத்திலேயே எனக்குக் கிடைத்தது. திராவிட இயக்கம் எழுச்சி பெற்ற என்னுடைய கல்லூரிப் பருவத்தில் சக மாணவர்கள் பெரியாரையும் அண்ணாவையும் படித்துக்கொண்டிருந்தபோது, கார்ல் மார்க்ஸையும் நேருவையும் நான் படிக்க ஆரம்பித்திருந்தேன்.

மொழிபெயர்ப்புத் துறை மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

மே தினம் பற்றி சியான் ஓ’கேசி எழுதிய 'உழைப்பாளியின் சங்கநாதம்' என்கிற படைப்பே எனது முதல் மொழிபெயர்ப்பு. 1958-ல் 'ஜனசக்தி'யில் வெளியானது. 'தாமரை' இதழ் என் பயிற்சிக் களமாக இருந்தது. நான் எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பதற்கும் முதல் காரணமாக இருந்தவர் ஜீவா.

கட்சித் தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த தொ.மு.சி. ரகுநாதன் மக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலையும், எஸ்.ஆர்.கே. என்றழைக்கப்பட்ட எஸ். ராமகிருஷ்ணனின் 'சக்ரவர்த்தி பீட்டர்', 'வீரம் விளைந்தது' உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் மொழிபெயர்த்தார்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்புத் திறனையும் அதற்கு அவர்கள் செலுத்திய அசுரத்தனமான உழைப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அன்றைக்குத் தமிழில் நேரடி இலக்கியங்கள் என்கிற பெயரில் வெளியான தழுவல்களின் தரத்துடன் ஒப்பிடும்போது, மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தரம் ஓங்கியிருந்தது. அவர்களது நட்பும் உழைப்பும் மொழிபெயர்ப்புகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டி எனக்கு உத்வேகம் அளித்தன.

நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்த ஜி. நாகராஜன் அறிமுகப்படுத்திய பல்வேறு வெளிநாட்டுப் படைப்புகள் என் வாசிப்பையும் மொழிபெயர்ப்பு ஆர்வத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. ஆரம்ப கால மொழிபெயர்ப்புகளில் சிலவற்றை என் சக பேராசிரியரான 'அன்னம் பதிப்பக'த்தின் மீரா பதிப்பித்தார்.

மொழிபெயர்ப்புப் பணிக்காக ரஷ்யாவுக்குச் சென்றீர்கள் அல்லவா...

மாஸ்கோவில் இருந்த முன்னேற்றப் பதிப்பகத்தில் பணியாற்றுவதற்கு, என்.சி.பி.எச். நிறுவத்தின் அன்றைய நிர்வாக இயக்குநர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி மூலம் வாய்ப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று என் மனைவி, மகன், மகளுடன் மாஸ்கோவிலேயே எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து பணிபுரிந்தேன். அந்தக் காலத்தில் பாரதி நூற்றாண்டு விழா வந்தது. மாஸ்கோவில் அதை சிறப்புறக் கொண்டாடக் காரணமாக இருந்தது, மனதுக்குத் திருப்தி தந்த நிகழ்வு.

28CHVAN_Book_captain-magal.jpg

ரஷ்யப் பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார்கள். கார்ல் மார்க்ஸ், டால்ஸ்டாய் போன்ற மாமேதைகளின் படைப்புகளை மற்றொரு மொழிக்குக் கொண்டுசெல்லும்போது, சிறு தவறுகூட நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையாக இருப்பார்கள்.

அங்கே இருந்தபோது மார்க்ஸ் பற்றிய பிரபலப் புத்தகத்தின் ஆங்கிலத் தலைப்பு ‘பர்த் ஆஃப் எ ஜீனியஸ்’ (Birth of a Genius). இதை 'மேதையின் பிறப்பு' என்று மொழிபெயர்ப்பதுதானே சரி என்பது அவர்களுடைய வாதம். ஆனால், மார்க்ஸை பெருமைப்படுத்தும் வகையில் கவித்துவமாக ‘மார்க்ஸ் பிறந்தார்’ எனும் தலைப்பை நான் கொடுத்திருந்தேன். அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கியபோது, அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.

மாஸ்கோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, முன்னேற்றப் பதிப்பகத்தில் பணிபுரிந்த தமிழறிந்த ரஷ்யர் சோபலோவ் போன்றோர் எனது மொழிபெயர்ப்பைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

மாஸ்கோவில் பெற்ற மொழிபெயர்ப்பு அனுபவமே எனது பின்னாளைய மொழிபெயர்ப்புப் பணிக்கு ஆதாரமாகவும் தொடர்ந்து சோர்வின்றிப் பணியாற்றவும் அடிப்படையாக அமைந்தது.

பல துறை சார்ந்த மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறீர்களே. அது எப்படி சாத்தியப்பட்டது?

இளங்கலை பட்டப் படிப்பில் பொருளாதாரம் படித்திருந்ததால் பொருளாதார நூல்களையும், சிறு வயதிலிருந்தே கம்யூனிஸ இயக்கத்தில் இயங்கிவந்ததால் அரசியல் தத்துவப் புத்தகங்களையும், ஆங்கிலப் பேராசிரியராக இருந்ததால் மொழிநடையையும் சிறப்பாகப் பெறுவதற்கான வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அதன் பிறகு மொழிபெயர்ப்புக்கான நூல்களை நானே படித்துத் தேர்வுசெய்வேன்.

நூலின் அடிப்படைக் கருத்தும், ஒட்டுமொத்தமாக நம் மனதைக் கவரும் தன்மையும் மிக முக்கியமானவை. கடமைக்கு மொழிபெயர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நூல் நம் மனதுக்குப் பிடித்தால் மட்டுமே விரைவாக மொழிபெயர்க்க முடியும். 'அன்னா கரீனினா'வை ஆறே மாதங்களில் மொழிபெயர்த்தேன். கட்டுப்பாட்டுடன் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுவேன். சோவியத் நாட்டில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்ததால் கிடைத்த பயிற்சி அது.

28CHVAN_Book_anna-karenina.jpgrightநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இத்துறையின் மீதான பிடிப்புக்கு அடிப்படைக் காரணம்?

வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் முயற்சியாகவே மொழிபெயர்ப்பைப் பார்க்கிறேன். நான் மொழிபெயர்க்க நினைத்து கையில் எடுக்காத பல புத்தகங்கள் உள்ளன. இன்னும் நிறைய புத்தகங்கள் வரவேண்டியுள்ளது. இன்றைக்கு மொழிபெயர்ப்பு முயற்சிகளை பலர் முன்னெடுக்கிறார்கள். முக்கிய புத்தகங்கள் அனைத்தையும் நம்மால் மொழிபெயர்க்க முடியாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. முதல் கட்டமாக முக்கிய உலக இலக்கியங்கள் அனைத்தின் சுருக்கங்களையாவது வெளியிட வேண்டும். அதன்மூலம் ஒரு நூலின் சாரம் வாசகனை விரைவாகச் சென்றடையும். அதன் மூலம் ஆர்வம் தூண்டப்படுபவர்களில் சிலராவது மூல மொழி நூலை நிச்சயம் தேடிப் படிக்க முயற்சி செய்வார்கள்.

இன்றைய மொழிபெயர்ப்புகளைக் கவனிக்கிறீர்களா?

எந்தப் புத்தகத்தையும் அதன் காலச்சூழல், அறிவுச்சூழலை உள்வாங்கிக்கொண்டு மொழிபெயர்க்க வேண்டும். ஒரு படைப்பை மொழிபெயர்க்க மூல நூலைப் படித்திருந்தால் மட்டும் போதாது. எழுதப்பட்ட நாட்டின் சமூகம், பண்பாடு போன்ற பின்னணிகள் தெரிந்திருந்தால் மட்டுமே ஆத்மார்த்தமாக மொழிபெயர்க்க முடியும். இன்றைக்குப் பல புத்தகங்களில் காணப்படும் இடறலான மொழிபெயர்ப்புக்கு பின்னணி குறித்து அறிவதற்கான முயற்சியின்மையும் அவசரமும் முக்கியக் காரணங்கள்.

அத்துடன், மூல நூலோடு மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுச் சரிபார்க்கவும் செப்பம் செய்யவும் ஆசிரியர் குழு அவசியம். நான் வேலை பார்த்த சோவியத் நிறுவனத்தில் அப்படித்தான் இருந்தது. பல முன்னணித் தமிழ்ப் பதிப்பகங்கள்கூட இன்றைக்கு நூல்களை 'எடிட்' செய்வதில்லை. நேரமில்லை, செலவு பிடிக்கும் என்று காரணங்களை அடுக்குகிறார்கள். முறையாக 'எடிட்' செய்யாமல் வெளியிடுவது படைப்பை அவமரியாதை செய்வதைப் போன்றது. மொழிபெயர்ப்புப் பணிகளை அரசு கையிலெடுத்து, செலவுக் கணக்குப் பார்க்காமல் செயல்பட்டால் சிறப்பாக அமையும்.

நீண்ட காலம் தொழிற்சங்கவாதியாகவும் இடதுசாரிச் செயல்பாட்டாளராகவும் இருந்திருக்கிறீர்கள். இடதுசாரிச் சிந்தனையின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சாதியுணர்வும் மதவெறியும் நம் காலத்தின் மிகவும் மோசமான அம்சங்கள். இவற்றை அகற்றவும் மானுட மேம்பாட்டுக்குச் செயலாற்றவும் அனைவரும் முனைய வேண்டும். வரலாறு என்பதே வர்க்கங்களுக்கு இடையிலான நெடிய போராட்டத்தின் சுவடுகள்தான். வெளிநாட்டு மார்க்சிய அறிஞர்களின் தத்துவங்கள், பெயர்களை மட்டும் சொல்லி மக்களைப் போராட அழைப்பது அவர்களை இதில் முழுமையாக ஒன்றவிடாமல் செய்வதற்கு சாத்தியம் உள்ளது. வரலாறு நெடுகிலும் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ஒரு பகுதியில் புரட்சி உருவாகிறது. அந்த வகையில் நம் வரலாற்றிலும் நிறைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்தப் போராட்டங்களை ஆராய்ந்து, நம்மிடம் உள்ள முற்போக்குக் கூறுகளைக் கண்டறிந்து புரட்சிக்கான பாதையைச் சமைக்க வேண்டும்.

28CHVAN_Book_Marx.JPGபேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்த நூல்களுள் சில:

டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா / கஸாக்குகள்'

அலெக்சாந்தர் புஷ்கினின் 'கேப்டன் மகள்'

சிங்கிஸ் ஐத்மாத்தவின் 'அன்னை வயல்'

ஜே.எம். கோட்ஸியின் 'மைக்கேல் கே. சில குறிப்புகள்'

ஹென்றி வோல்கவின் 'மார்க்ஸ் பிறந்தார்'

'பாரிஸ் கம்யூன்'

'கம்யூனிஸ்ட் அறிக்கை எப்படித் தோன்றியது?'

'அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்'

'அடுப்பு முதல் அணுஉலை வரை'

'காக்கி உடையும் காவிக் கொடியும்'

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாந்தர் புஷ்கின்

ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகள்

-ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x