Published : 17 Oct 2017 09:32 AM
Last Updated : 17 Oct 2017 09:32 AM

கடவுளின் நாக்கு 67: ஏழு அதிர்ஷ்டங்கள்

ஏழு அதிர்ஷ்டங்கள்

ன்னுடைய தவற்றை உணர்ந்து கொள்ள ஒருவருக்கு எவ்வளவு நாள் தேவைப்படுகிறது. சிலர் உடனே உணர்ந்துவிடுகிறார்கள். சிலரோ வருஷம் கடந்தாலும் உணர்வதில்லை. இன்னும் சிலரோ உணர்ந்தாலும் வெளிப் படுத்திக் கொள்வதில்லை. முதுமை தவறுகளின் வடிகாலுக்கான காலம்போல மாறி விடுகிறது. அதுவும் மரணப்படுக்கையில்தான் பலர் தனது தவற்றை நினைத்து வருந்துகிறார்கள். அப்போது வருந்தி ஆகப்போவதென்ன!

வாழும்போதே தவறை உணர்ந்து திருந்துவதும், யாருக்கு தவறு செய்தோமோ அவர்களுக்கு நன்மைகள் செய்வதும்தானே நல்வாழ்வின் அடையாளம்!

பள்ளி வயதில் இருந்து எத்தனையோ நீதிமொழிகள், அறவுரைகள் படித்திருந்தாலும் மனிதர்கள் மனதில் நீதி வேரூன்றவில்லை. தனக்கு அநீதி இழைக்கபடும்போது மட்டுமே நீதிக்காகக் குரல் கொடுக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு தராசு ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. அது அவனது செயல்களை எடைபோடுகிறது. தவறுகளின் தட்டு ஒருபக்கமாக இழுக்கும் போது அவனை எச்சரிக்கை செய்கிறது. ஆனால், மனிதர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. அங்கே தான் அவனது வீழ்ச்சி தொடங்குகிறது.

வேட்டையின் ஆதாரம்

சில நாட்களுக்கு முன்பு நேஷனல் ஜியாகிரபி சேனல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு விலங்கும் எப்படி ஒரு வேட்டை முறையை கைக்கொள்கிறது என்பதைப் பற்றி விரிவாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

தந்திரம்தான் வேட்டையின் ஆதாரம். நம்பவைப்பது போல நிதானமாக செயல்பட்டு எதிர்பாராமல் தாக்கி தனது இரையை கொல்கின்றன விலங்குகள்.

அந்த விவரணப்படத்தின் இயக்குநர் விலங்குகளைப் பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது, ‘இந்த எல்லா வேட்டைமுறைகளையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. மனித மூளை யோசிக்கும் அளவுக்கு வேறு எந்த விலங்கும் திட்டமிடுவதோ, தாக்குவதோ கிடையாது!’ என்றார்.

காட்டில் உடல் வலிமையான விலங்குகளே வலிமையற்றதை வேட்டையாடுகின்றன. ஆனால், மனிதர்கள் விஷயத்தில் இதற்கு நேர் எதிர். மனிதன் தனது அறிவை கொண்டே வேட்டையை நிகழ்த்துகிறான். உடல் உறுதி கொண்ட உழைப்பாளிகளை அதனால்தான் நோஞ்சை யான பணக்காரனால் எளிதாக வீழ்த்திவிட முடிகிறது.

பிரியமற்ற பிரிட்டா

ஸ்காண்டிநேவியா கதை ஒன்று மன்னித்தலின் மகத்துவத்தைக் கூறுகிறது. ஏழு குழந்தைகளைப் பெற்ற ஒரு விவசாயியின் மனைவி எட்டாவது பிரசவத்தின்போது இறந்துபோய்விடுகிறாள்.

ஏழு குழந்தைகளையும் தான் ஒருவ னால் வளர்க்க முடியாது என நினைத்த விவசாயி, பிரிட்டா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.

பிரிட்டாவுக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. அதுவும் குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டால் காதை பொத்திக் கொண்டுவிடுவாள்.

அவளிடம் தனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு அந்த விவசாயி தன்னுடைய பண்ணை வேலைக்குப் போய்விடுவான். அவளோ ஏழுபிள்ளைகளையும் ஏழு பாவங்கள் என்று சொல்லி அடித்து, உதைத்து இம்சை செய்தாள். ஆனால், ஒரு குழந்தை கூட சிற்றன்னையின் செயல்களைப் பற்றி தவறாக தனது தந்தையிடம் புகார் சொல்லவில்லை.

ஒருநாள் பிரிட்டா மந்திரவாதி ஒருவரிடம் போய் மந்திரப் பொடி வாங்கி வந்து, அந்த ஏழு குழந்தைகளையும் ஏழு பூனைக் குட்டிகளாக உருமாற்றி வீட்டில் இருந்து துரத்திவிட்டாள்.

மாலையில் விவசாயி வந்து கேட்டபோது, ‘‘ ஏழு பிள்ளைகளும் தன்னை அடித்து உதைத்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விட்டார்கள்’’ என்றாள்.

வருஷங்கள் கடந்தன. பிரிட்டாவும் கிழவியானாள். அந்த நாட்டில் கொள்ளை நோய் வந்தது. நோயால் மக்கள் எல்லோரும் கஷ்டப்பட்டார்கள்.

பிளேக் நோயில் விவசாயி இறந்துபோனான். பிரிட்டாவுக்கு போக்கிடம் இல்லை. அவளை வறுமை வாட்டியெடுத்தது.

பசியோடு ஒரு நகருக்கு வந்து சேர்ந்தாள். அங்கே ஒன்று போல ஏழு மாளிகை கள் இருந்தன. அந்த மாளிகையின் முன்னால் போய் நின்று பிச்சை கேட்டாள்.

மன்னிக்கும் கருணை

கதவைத் திறந்து வெளியே வந்த அந்த வீட்டின் வேலைக்காரி, பிரிட்டாவை அந்த வீட்டின் எஜமானர்கள் உள்ளே அழைப்பதாகச் சொன்னாள்.

பிரிட்டா உள்ளே போனபோது பட்டாடையும் வைர நகைகளும் ஜொலிக்க நான்கு பெண்களும், இளவரசர்கள் போல மூன்று ஆண்களும் முன்வந்து நின்று, ‘‘எங்களை தெரியவில்லையா..?’’ எனக் கேட்டார்கள்.

பிரிட்டாவுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை.

‘‘ஏழு பாவங்களை நினைவிருக்கிறதா.’’ என்றனர்.

‘பூனையாக மாற்றப்பட்டவர்கள், எப்படி இப்படி மாறினார்கள்!’ என திகைத்துப் போனாள் பிரிட்டா.

ஏழு பேரில் மூத்தவள் சொன்னாள்: ‘‘அம்மா... நீங்கள் எங்களை மந்திரத்தால் பூனையாக மாற்றி துரத்திவிட்டீர்கள். நாங்கள் போகுமிடம் தெரியாமல் அலைந்தபோது, இன்னொரு மந்திரவாதி எங்களை மீண்டும் மனிதர்களாக மாற்றினார். அவரே வேலைக்காக கடல் வணிகர் ஒருவரிடம் அனுப்பி வைத்தார்.

அந்த வணிகரிடம் பதினாலு வருஷங்கள் கடுமையாக உழைத்தோம். அவருக்கு எங்களைப் பிடித்துப் போகவே, எங்களை தனது வாரிசுகளாக அறிவித்துவிட்டார். இப்போது அவரது சொத்துகளுக்கு நாங்கள்தான் அதிபதி!

எங்கள் ஏழு பேருக்கும் ஏழு மாளிகைகள் இருக்கின்றன. ஏழு வீடுகளுக்கும் சேர்ந்து ஒரே ஒரு உணவு மேஜை. ஒன்றாக உண்கிறோம். ஒன்றுபோல உடை உடுத்துகிறோம். ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்கள் பிரார்த்தனையின்போது உங்களையும் அப்பாவையும் நினைத்துக்கொண்டு நீங்கள் நலமாக வாழ பிரார்த்தனை செய்வோம்!’’ என்றாள்.

பிரிட்டா குழப்பத்துடன் கேட்டாள்: ‘‘என் மீது உங்களுக்கு கோபமோ, வெறுப்போ இல்லையா?’’

‘‘இருந்ததுதான். ஆனால், அதை நாங்கள் பகையாகவோ, விரோதமாகவோ, பழிவாங்கும் செயலாகவே மாற்றிக் கொள்ளவில்லை. உங்கள் தவறுக்கு காலமே தண்டனை வழங்கிவிடும் என நம்பினோம். அதுவே நடந்துவிட்டிருக்கிறது.

அம்மா... குளிர்காலத்தில் ஒருநாள் நாங்கள் நடுங்கிக் கொண்டிருந்தபோது, வேண்டா வெறுப்பாக நீங்கள் கம்பளி ஒன்றை எடுத்து எங்கள் மீது வீசினீர்கள். அந்த ஒரே ஒரு நற்செயல் நீங்கள் செய்த ஆயிரம் தவறுகளையும் சரிசெய்துவிட்டது தாயே! வாருங்கள் இனி, எங்களுடனேயே தங்கலாம். சாப்பிடலாம். இது உங்கள் மாளிகை!’’ என்றான் அந்த ஏழு பேரில் ஒருவன்.

பிரிட்டா அவர்களின் நற்செய்கையை நினைத்து கண்ணீர்விட்டு அழுதுகொண்டே சொன்னாள்: ‘‘நான் உங்களை எவ்வளவோ மோசமாக நடத்தியபோதும், நீங்கள் என்னை மன்னித்துவிட்டதோடு மீண்டும் எனக்கொரு வசதியான வாழ்க்கையும் தர முன் வந்திருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் ஏழு பாவங்கள் இல்லை. ஏழு அதிர்ஷ்டங்கள்!’’

அந்த ஏழு பிள்ளைகளும் பிரிட்டாவுக்கு பட்டாடைகள் வழங்கி, விருந்து கொடுத்து தங்க கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

உள்ளேயிருந்து ஒரு குரல்

அன்றிரவு பிரிட்டாவின் மனசாட்சி அவளை கேலி செய்து பேசியது: ‘பிரிட்டா... அந்த ஏழு பேரும் வேண்டுமானால் உன்னை மன்னித்திருக்கலாம்.

நான் மன்னிக்கவே மாட்டேன். நாளை முதல் ஒவ்வொருவேளை நீ சாப்பிடும்போதும், ‘நீ உண்பது உன் தவறை மறந்து அவர்கள் போடும் பிச்சை என்றே கூறுவேன். உனக்கு மீட்சியே கிடையாது!’

பிரிட்டாவின் மனசாட்சி அவளை வாழ்நாளின் கடைசி வரை கேலி செய்தே கொன்றது என அந்தக் கதை முடிகிறது.

நற்குணமும். பெருந்தன்மையும். பேரன்பும் கொண்டவர்களால் மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும். ஆனால், நாம் அவ்வளவு பெரிய மனது கொண்டவர்களில்லை. அதனால்தான் இது போன்ற கதைகள் மன்னித்தலின் பெருமையை நமக்கு நினைவூட்டி, நம் மனதை பக்குவப்படுத்துகின்றன!

- கதை பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x