Published : 10 Oct 2017 09:43 AM
Last Updated : 10 Oct 2017 09:43 AM

கடவுளின் நாக்கு! 66: கூடி உண்போம்!

கூடி உண்போம்!

னைவரும் ஒன்றுகூடி உணவருந்தும்போது நம்மில் ஒருவராக கடவுளும் இருக்கிறார் என்றொரு யூதப் பழமொழி இருக்கிறது. சந்தோஷங்களில் பெரியது, கூடி உண்பதாகும்.

ஓட்டல்களில் போய் சாப்பிடுவதற்கு அதுவும் ஒரு காரணம். பலரும் அவரவருக்கு விருப்பமான உணவை சாப்பிடும் இடத்தில் நாமும் அமர்ந்து நமக்கு விருப்பமான உணவை உண்பதும், அடுத்தவர் சாப்பிடுவதை ரகசியமாக பார்த்து ரசிப்பதும் இதனால்தான்.

குகையில் வாழ்ந்த நாட்கள் முதல் மனிதர்கள் வேட்டையில் கிடைத்த இறைச்சிகளை, காய் கனிகளை ஒன்றாக கூடியே உண்டார்கள். இன்றும் பழங்குடி மக்களிடம் கூட்டு சமையலும் கூடி உண்பதும் இருக்கிறது. விவசாய வாழ்க்கையே தனிச் சமையலை உருவாக்கியது. ஆயினும் தொழிற் சாலைகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் கூடி உண்பதும் இன்றும் தொடரும் பழக்கமே.

நாம் என்ன சாப்பிடுகிறோம். எப்படி யாருடன் பகிர்ந்து சாப்பிடுகிறோம் என்பது பண்பாட்டின் அம்சம். ஒவ்வொரு பண்பாடும் அதற்கான பகிர்வை, உணவு முறையை, விலக்கப்பட்ட உணவு வகைகளைக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பன்மைத்துவம் நிரம்பிய நாட்டில், உணவுப் பண்பாடு மிகப்பெரியது. விருந்தினர்களை உபசரிப்பதில் உணவு தருவதே தலையானது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தேன். வாடகை கார் ஒன்றின் ஒட்டுநராக வேலை செய்கிறார். அவர் வருத்தத்துடன் சொன்னார்:

‘‘தினமும் வீடு போய் சேருவதற்கு இரவு 12 மணியாகிவிடுகிறது. மனைவி, பிள்ளைகள் உறங்கியிருப்பார்கள். அதற்குப் பிறகு குளித்துவிட்டு தனி ஆளாக உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்போது உடன் உட்கார்ந்து சாப்பிட யாராவது ஒருவர் இருக்கக் கூடாதா என ஆதங்கமாக இருக்கும். இந்த அர்த்தராத்திரியில் யாரை எழுப்பி து உடன் சாப்பிடச் சொல்வது? ஆகவே, சாப்பாட்டில் விருப்பமே இருக்காது. பல வருஷங்களாக இரவுகளில் நான் ஒற்றை ஆளாகத்தான் சாப்பிடுகிறேன். காலையில் பிள்ளைகள் எழுவதற்குள் வேலைக்குப் போய்விடுவேன். ஓடியோடி உழைத்தும் வீட்டில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு பல வருஷமாகிவிட்டது’’ என்றார்.

பறந்து போன ருசி

அவரது வருத்தம் பலருக்கும் உரியதே.

என் சிறுவயதில் வீட்டில் அத்தனை பேரும் ஒன்றாக, வட்டமாக அமர்ந்து சமைத்த உணவை வைத்துக் கொண்டு தேவையான அளவு எடுத்துப் போட்டு சாப்பிட்ட நாட்கள் நினைவில் ஓடுகிறது. டைனிங்டேபிள் வந்த பிறகு உணவுக்கு சுவை போய்விட்டதோ என்று கூட சில சமயம் தோன்றும். உண்மையில் டைனிங் டேபிளில் இல்லை பிரச்சினை. கூடி உண்ணும் மனதும் விருப்பமானதை மற்றவருக்கு பகிர்ந்து தரும் ஆசையும் போய்விட்டது தான் உணவு ருசிக்காமல் போனதற்குக் காரணம். இன்றைக்கும் நண்பர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிடுவது எனக்கு விருப்ப மானதே.

கையில் தட்டு, ரேடியோ பாட்டு

பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் குடும்பத்தில் பலரும் தட்டில் சோறு, குழம்பு ஊற்றி பிசைந்தபடியே ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டே, சாலையில் போகிற வருகிறவர்களைப் பற்றிய கவலையின்றி சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். அவர்கள் தாங்கள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கிறார்களே என ஒளித்துக் கொள்கிறவர்களில்லை. வசதியும், அதிகாரமும் அதிகமானதும் நாம் சாப்பிடுவதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்கிறோம். உயரதிகாரிகள், பிரபலங்கள் பலரும் தனியாகத்தான் உண்ணுகிறார்கள்.

‘ருசியின் உளவியல்’ நூலை எழுதிய பிரில்லட் சவாரன் (Brillat Savarin) என்ற வழக்கறிஞர் ‘நீ என்ன சாப்பிடுகிறாய் என்று சொல். நீ யார் என்று நான் சொல்லிவிடுகிறேன்’ என்று கூறுகிறார். அது உண்மையே.

பண்டிகைகள். விழாக்கள் உருவாக்கபட்டதன் முக்கிய காரணம் மனிதர்கள் பரஸ்பரம் அன்பு செலுத்தவும், கூடி உண்ணவும், கூடிக்களிக்கவும்தான். இன்றைக்கோ பண்டிகை நாட்களில் வீட்டில் நம்மைத் தவிர, சாப்பிடுவதற்கு வேறு எவரையும் அழைப்பதில்லை. நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு எவரையும் ஒருபோதும் சாப்பிடக் கூப்பிடுவதே இல்லை.

சப்பாத்திகளின் நெடும் பயணம்

கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியராக இருந்த டாக்டர் கில்பர்ட் ஹாடோ ‘1857 சிப்பாய் எழுச்சி’ நடந்த நாட்களில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிடுகிறார். ‘‘பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டவர்களுக்கு உணவு தருவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் உணவில் ஐந்து சப்பாத்திகளை தனியே ஒரு துணியில் கட்டி வீட்டின் வெளியே வைத்து விடுகிறார்கள். இந்த சப்பாத்திகள் இரவோடு இரவாக சேகரிக்கப்பட்டு எங்கே, யாருக்குத் தேவைப்படுகிறதோ அங்கே விநியோகம் செய்யப்படுகிறது. 300 மைல் தூரம் வரை சப்பாத்திகள் பயணிக்கின்றன.

யார் இந்த சப்பாத்திகளைக் கொண்டு போகிறார்கள்? எப்படி கைமாறுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்தியர்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் சப்பாத்தியே சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உணவாகிறது. இதை எங்களால் தடுக்க முடியவே இல்லை. ‘ஐந்து சப்பாத்தி இயக்கம்’ என்றே இதை அழைக்கிறார்கள்’’ எனக் குறிப்பிடுகிறார்.

உணவு அரசியலாகிப் போன இக்காலகட்டத்துக்கும், உணவை கொண்டு பிரிட்டிஷ் அரசை எதிர்த்த அந்தக் காலத்துக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது பாருங்கள்.

சாப்பிட அழைத்து அவமானப்படுத்துவது சகித்துக் கொள்ள முடியாத விஷயம். அந்த வெறுப்பு மனதை விட்டு எளிதில் அகலாது. ஆகவே, எதிரியே சாப்பாட்டுக்கு வந்தாலும் இனிமையாகத்தான் நடத்தவேண்டும் என்கிறது நமது பண்பாடு.

பெரும் இதிகாசத்தின் தொடக்கம்

‘சரமா’ என்ற நாய் இந்திரன் வளர்த்தது. அதற்கு ‘சரமேயஸ்’ என்கிற பெயரில் இரண்டு குட்டிகளும் உண்டு. மகாபாரதம் ஒரு நாய்க்கு ஏற்பட்ட அவமானத்தில் இருந்தே தொடங்குகிறது.

பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் தனது தம்பிகளுடன் சேர்ந்து வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அந்த இடத்துக்கு சரமாவின் குட்டி ஒன்று வந்து சேர்ந்தது. வேள்விக்காக வைத்திருந்த உணவை தின்றுவிட்டதோ என நினைத்து ஜனமேஜயனின் தம்பிகள், அந்த நாய் குட்டியை அடித்து துரத்தினார்கள். ஒரு தவறும் செய்யாத தன்னை அடித்து விரட்டியதைப் பற்றி நாய்குட்டி தனது தாய் சரமாவிடம் முறையிட்டது.

உடனே சரமா அந்த வேள்விக் கூடத்துக்கு வந்து ‘‘வேள்விக்கு வைத்திருந்த நெய்யோ, உணவோ எதையும் நாக்கால் தொட்டுக்கூட பார்க்காத என் குட்டியை ஏன் அடித்து விரட்டினீர்கள்?’’ என நியாயம் கேட்டது.

அவர்களால் பதில் பேச முடியவில்லை.

‘‘செய்யாத தவறுக்காக தண்டிக்கபட்ட என் குட்டியைப் போல, நீங்கள் அறியாத சமயத்தில் உங்களை தீமை வந்து அடையும்’’ என ஜனமேஜயனுக்கு சரமா சாபம் கொடுத்தது. அந்த சாபமே மகாபாரதக் கதையின் தொடக்கப் புள்ளியாகும்.

உணவை புசித்துவிட்டதாக தவறாக தண்டிக்கப்பட்ட நாயின் கதையில் இருந்துதான் பெரும் இதிகாசமே தொடங்குகிறது.

மனிதனோ, நாயோ யாராயினும் விருந்தில் அவமதிக்கப்பட்டால் அது பகையாகவே உருமாறிவிடுகிறது.

வாழ்வின் பல்வேறு தருணங்களை, பல்வேறு நிலைகளை, அதன் புதிர்களை, துயரங்களை அடையாளம் காட்டி அதில் இருந்து விடுபடவும் வாழ்க்கையை மேம்படுத்த செய்யவுமே கதைகள் உதவுகின்றன. இதிகாசம் என்பது கதைகளின் பெருங்கடலே.

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x