Published : 06 Oct 2017 09:28 AM
Last Updated : 06 Oct 2017 09:28 AM

பார்த்திபன் கனவு (இரண்டாம் பாகம்) 01: சிவனடியார்

பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும், விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்துகொண்டிருந்தன. உச்சி வானத்தில் வைரங்களை வாரி இறைத்ததுபோல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்தரிஷி மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது.

அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின் ‘ஹோ’ என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்றுமே இல்லை. திடீரென்று அத்தகைய அமைதியைக் கலைத்துக்கொண்டு ‘டக் டக் டக்’ என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக்கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில்தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சம் இல்லாமையால், அவன் யார், எப்படிப்பட்டவன் என்று அறிந்துகொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாம் என்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன், தான் சேரவேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.

அவனுக்கு வலதுகைப்புறத்தில் காவேரி நதியின் பிரவாகம். இடதுபுறத்திலோ அடர்ந்த மரங்களும், புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடதுபுறத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பழக்கப்பட்டதுபோல் அநாயாசமாக, செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும்.

அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக்கொண்டுதான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந்திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில் போக முடியாத படி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும், வளைந்துகொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக்கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டி இருந்தது.

இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு, திடீரென்று சிறிது இடைவெளியும், ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கு எதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாக இருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமல் இருந்தது. பலிபீடம், துவஜஸ்தம்பம் முதலியவையும் அங்கு காணப்பட்டன.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x