Published : 26 Sep 2017 10:43 AM
Last Updated : 26 Sep 2017 10:43 AM

கடவுளின் நாக்கு! 64: அலட்சியமாகும் விதிகள்!

அலட்சியமாகும் விதிகள்!

மூன்று நாட்களுக்கு முன்பாக மாலை நேரம். எண்பதடி சாலையின் சிக்னல் அருகே ஐந்து வயது மகளுடன் வந்த இளம்பெண்ணை பைக்கில் வேகமாக வந்த ஒருவன் இடித்துத் தள்ளிவிட்டு, எந்த சுரணையுமின்றி பறந்து போய்விட்டான். அந்தப் பெண் தரையில் விழுந்துகிடந்தார், அவரது கையில் ரத்தம் சொட்டியது.

அம்மாவின் கையில் ரத்தம் வருவதைக் கண்டு, மகள் கதறி அழுதாள். அந்தப் பெண் அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவ மனைக்குச் சென்றார். சாலையில் ஒரு சலனமும் இல்லை. அந்தப் பெண்ணுக்கு நடந்ததை விபத்து என்று கூற முடியாது. அநியாயமான செயல் என்றே கூறவேண்டும். இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம், இரண்டு பக்கமும் உள்ள திருமண மண்டபங்கள். அங்கு நடந்த திருமணங்களுக்கு வந்தவர்கள் சாலையை இரண்டு பக்கங்களையும் ஆக்கிரமித்து நிறுத்திப் போயிருந்த கார்கள், அதன் ஊடாக நுழைந்து அதிவேகமாக வரும் பைக் ஒட்டிகள். இவ்வளவு நடக்கும்போதும் அங்கே காவலர் ஒருவருமே இல்லை.

நடந்து போகிறவர்கள் உயிரை கையில் பிடித்த படியேதான் நகரச் சாலைகளில் செல்ல வேண்டியிருக்கிறது. சாலை விதிகளை ஒருவரும் கண்டுகொள்வதே இல்லை.

இந்தியாவின் அதிக வாகன நெருக்கடி கொண்ட நகரம் என்கிற பட்டியலில் சென்னைதான் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. அதிலும் மழைக் காலங்களில் சென்னை நரகம் ஆகிவிடுகிறது.

எப்போதும் சென்னை சாலைகளில் ஆங்காங்கே ஆள் உயரத்துக்கு குழி தோண்டி, மண்ணை குவித்து வைத்துவிடுகிறார்கள். கழிவுநீர் கால்வாய்க்கான குழியாகவோ அல்லது தொலைபேசித் துறை, இன்டர்நெட் காரர்களோ யார் தோண்டி யிருக்கிறார்கள்? எப்போது அதை மூடுவார்கள் என்கிற ஒரு அறிவிப்பும் கிடையாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரவில் அந்தச் சாலையில் பழுது பார்க்க போகிறார்கள். ஆகவே இரவு 11 மணி முதல் 2 மணி வரை அந்தச் சாலையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்த முடியும் என, ஒரு காவலர் ஒவ்வொரு காராக நிறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார். இரவு அந்த வழியாக திரும்பி வந்தபோது ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கும்படியாக இரண்டு காவலர்கள் நின்று, வாகன ஒட்டி களிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். சாலை போக்குவரத்தை எப்படி சீராக நடைமுறைப் படுத்துவது என்பதற்கு ஜப்பான் ஒரு முன்னோடி நாடு.

ஒழுங்கை உருவாக்கவும் தேவையற்ற மோதல்கள், சச்சரவுகள், பிரச்சினைகளைத் தவிர்க்கவுமே விதிகள் உருவாக்கப்படுகின்றன. விதிகளை நடைமுறைபடுத்தவும், மீறும்போது தண்டிக்கவுமே சட்டங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன. சாலை விதிகளைப் பொறுத்தவரை எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதை ஒருவரும் பொருட்படுத்துவதே இல்லை. சென்னை மாநகரில் சாலை விதிகள் ஒரு சதவீதம் கூட கடைபிடிக்கப்படுவதில்லை. மாநகரில் ஆயிரக்கணக்கான கல்யாண மண்டபங்கள் இருக்கின்றன. இவற்றில் 10 சதவீதம் மட்டுமே போதுமான வாகன நிறுத்தும் வசதி கொண்டவை. மற்றவை அத்தனையிலும் கார்கள் சாலையிலே நிறுத்தப்படுகின்றன. இதனால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்நாள் வரை ஒருமுறை கூட இதை காவல்துறை தடுத்து நிறுத்தவோ, முறைப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

துரத்தும் மாநகரம்

இதுபோல வெளியூர் பயணிகள் சென்னைக்குள் நுழைவதற்குள் விழிபிதுங்கிவிடுகிறார்கள். வண்டலூர், பெருங்களத்தூரைத் தாண்டி உள்ளே சென்னைக்குள் வருவதும் போவதும் பெருஞ்சிரமமாக இருக்கிறது. ‘இந்த நகருக்குள் ஏன் வருகிறீர்கள்?’ என்பது போலவே துரத்துகிறது மாநகரம்.

எத்தனையோ விஷயங்களுக்கு பொது வழக்குத் தொடுக்கிறார்கள். நீதிமன்றம் உரிய வழிகாட்டுகிறது. இது போல திருமண மண்டபங்களில் நிறுத்தப்படும் கார்களுக்கோ, சாலையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கோ தடைவிதிக்க ஒருவரும் ஏன் முயற்சிப்பதேயில்லை? நீதியரசர்கள் வரும் வாகனங்களும் இதே நெருக்கடியைத் தானே சந்திக்கின்றன.

சாலைவிதிகளும் சட்டங்களும் நமது நலனுக்கானவை என வாகன ஒட்டிகளில் பெரும்பான்மையினர் நினைப்பதே இல்லை. சாலைவிதிகளை மீறுகிறவர்கள் நம்மை, யார் என்ன செய்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் செல்கிறார்கள். ஒரு நாளில் எத்தனையோ விபத்துகள். உயிரிழப்புகள்.

எதுவும் நம்மிடமில்லை

ஒரு முறை, அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். சென்னையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு, இந்த இரண்டு நாட்களிலும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம். விடிய விடிய ஆம்புலன்ஸ் போய்க் கொண்டேயிருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படும் சாலை கண்காணிப்பு, கெடுபிடிகள் நீதிமன்றத் தண்டனைகள் எதுவும் நம்மிடமில்லை. ஆகவே, விபத்தின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது என்றார்.

வாகனங்கள் அதிகமாகிவிட்டது. மக்கள் தொகை பெருகிவிட்டது என்பதெல்லாம் உண்மையே. அதற்காக எந்த இடத்திலும், யாரையும் மோதிவிட்டு போய்விடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்ன? இதுபோல மக்களை தினந்தோறும் பாதிக்கும் பிரச்சினைகளை, அரசியல் கட்சிகள் ஏன் கண்டுகொள்வதே இல்லை? வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மாநகரின் முக்கிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் தளம் அமைக்கலாம் , போக்குவரத்து காவலர் எண்ணிக்கையை அதிகமாக்கலாம். கண்காணிப்பையும் தீவிரப்படுத்தலாம்.

ஒரு முல்லா கதை

முல்லா நஸ்ருதீனின் பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றில் தனது மகன் தண்ணீர் இறைக்கப் போகும்போது சத்தமாக சொன்னார்: ‘‘மண்பானை, கவனமாகக் கொண்டு போ... உடைத்துவிடாதே!’’

அந்தப் பையன் அதை காதில் கேட்டுக்கொள்ளவே இல்லை. உடனே பக்கத்து வீட்டுக்காரர் ஆத்திரத்துடன் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டுபோய் ‘‘மண்பானை, கவனமாகக் கொண்டு போ.... உடைத்துவிடாதே!’’ எனச் சொல்லி அவனுக்கு ஒரு அடி கொடுத்தார் இதைக் கண்ட முல்லா, ‘‘ ஏன் சிறுவனை அடிக்கிறீர்கள்? அவன் தான் பானையை உடைக்கவில்லையே...?’’ என்றார்.அதற்கு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்: ‘‘இப்போது கண்டிக்காவிட்டால் பானையை உடைத்தப் பிறகு கண்டித்து எந்தப் பிரயோசனமும் இல்லையே...’’ என்றார்

அதற்கு முல்லா, ‘‘யாரோ எப்போதோ பானையை உடைத்துவிட்டார்கள் என்பதற்காக, சொந்த மகனை இப்படித் திட்டுவதா?’’ என திரும்பவும் கேட்டார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகன் கிணற்றில் தண்ணீர் இறைத்து தூக்கும்போது கைக்கழுவி பானையைப் போட்டு உடைத்துவிட்டான்.

இப்போது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்: ‘‘பார்த்தீர்களா, எத்தனை தடவை அவனுக்கு படித்துப் படித்து சொன்னேன். காதில் வாங்கவேயில்லை. இப்போது பானை போய்விட்டது. கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயத்தை நூறு முறை சொல்வதில் தப்பில்லை. இத்துடன் நான்கு பானைகள் உடைந்துவிட்டன!’’

இதைக் கேட்ட முல்லா சொன்னார்: ‘‘அலட்சியம்தான் இதற்குக் காரணம்! அறிவுரை சொல்லி அதனைத் திருத்தி விட முடியாது. உணரச் செய்ய வேண்டும். பானையை உடைத்தால் ஒரு நாள் பட்டினி போடுங்கள். பிறகு ஒருபோதும் உடைக்க மாட்டான்!”

முல்லா கதையில் வரும் சிறுவனின் அலட்சியம் போன்றதே, மாநகர வாகன ஒட்டிகளின் அலட்சியமும். அதை தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிக மோசமாகவே இருக்கும்.

- கதை பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x