Published : 08 Sep 2017 08:45 AM
Last Updated : 08 Sep 2017 08:45 AM

பார்த்திபன் கனவு - 20: பிரயாணம் தொடங்கியது

மகாராஜா அரையில் மஞ்சள் ஆடையும், மார்பில் போர்க் கவசமும், இடையில் உடைவாளும் தரித்தவராய் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ராணியும் இளவரசரும் வந்தார்கள்.

அரண்மனை வாசலில் மகாராணி தன் கையில் ஏந்தி வந்த ஆத்திமாலையை அவர் கழுத்தில் சூட்டினாள். அருகில் சேடி ஏந்திக்கொண்டு நின்ற மஞ்சள் நீரும், தீபமும் உள்ள தட்டை வாங்கி மகாராஜாவுக்கு முன்னால் மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு, கையில் ஒரு துளி மஞ்சள் நீர் எடுத்து மகாராஜாவின் நெற்றியில் திலகமிட்டாள்.

அப்போது மீண்டும் மீண்டும் “ஜய விஜயீ பவா”, “வெற்றி வேல்”, “வீர வேல்” என்னும் முழக்கங்கள் ஆகாயத்தை அளாவி எழுந்துகொண்டிருந்தன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் காது செவிடுபடும்படி அதிர்ந்தன.

மகாராஜா வீதியில் நின்ற கூட்டத்தை ஒரு தடவை தம் கண்களால் அளந்தார். அப்போது ஒரு ஏவலாளன் விரைந்து வந்து, மகாராஜாவின் காலில் விழுந்து எழுந்து கைகட்டி வாய் பொத்தி நின்றான்.

“என்ன சேதி?” என்று மகாராஜா கேட்கவும், “மாரப்ப பூபதி இன்று காலை கிளம்பும்போது, குதிரை மீதிருந்து தவறிக் கீழே விழுந்து மூர்ச்சையானார். மாளிகைக்குள்ளே கொண்டுபோய்ப் படுக்க வைத்தோம். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை” என்றான்.

இதைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் லேசாகப் புன்னகை பரவிற்று. அந்த ஏவலாளனைப் பார்த்து, “நல்லது, நீ திரும்பிப் போ. பூபதிக்கு மூர்ச்சை தெளிந்ததும், உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னேன் என்று தெரிவி!” என்றார்.

மேற்கண்ட சம்பாஷணை மகாராஜாவுக்கு அருகில் இருந்த ஒரு சிலருடைய காதிலேதான் விழுந்தது. ஆனாலும் வெகு சீக்கிரத்தில் “மாரப்ப பூபதிக்கு ஏதோ விபத்தாம்! அவர் போருக்கு வரவில்லையாம்” என்ற செய்தி பரவிவிட்டது.

பிறகு, மகாராஜா அருகில் நின்ற விக்கிரமனை வாரி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார். “குழந்தாய், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? மறவாமல் இருப்பாயா?” என்றார்.

“நினைவில் இருக்கிறது அப்பா! ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றான் விக்கிரமன்.

பிறகு மகாராஜா மைந்தனின் கையைப் பிடித்து அருள்மொழியினிடம் கொடுத்து, “தேவி! நீ தைரியமாயிருக்க வேண்டும். சோழர்குலச் செல்வத்தையும், புகழையும் உன்னிடம் ஒப்புவிக்கிறேன். வீர பத்தினியாயிருந்து என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முகமலர்ச்சியுடன் இப்போது விடை கொடுக்க வேண்டும்” என்றார்.

அருள்மொழி, கண்களில் நீர் பெருக “இறைவனுடைய அருளால் தங்கள் மனோரதம் நிறைவேறும்; போய் வாருங்கள்!” என்றாள். மகாராஜா போர் யானைமீது ஏறிக்கொண்டார். மறுபடியும் போர் முரசுகளும், தாரை தப்பட்டை எக்காளங்களும் ஏககாலத்தில் முழங்கின. உடனே அந்தச் சோழநாட்டு வீரர்களின் படை அங்கிருந்து பிரயாணம் தொடங்கிற்று.

- கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x