Published : 05 Sep 2017 09:47 AM
Last Updated : 05 Sep 2017 09:47 AM

கடவுளின் நாக்கு 61: மூடிய கைகள்!

பூங்காவில் இரண்டு பள்ளிச் சிறுவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். உயரமான பையன் சொன்னான் ‘‘எட்டாம் வகுப்பு சார், எப்போ பாரு மூஞ்சிய உர்ருன்னு வெச்சிட்டுருக்காரு. அவரு சிரிச்சு நான் பார்த்ததே கிடையாது. கிளாஸ் ஒர்க் நோட்டுல கையெழுத்து வாங்கப் போனா, கொரில்லாக் கிட்டே போற மாதிரி பயமா இருக்குடா. வீட்லயும் இப்படிதான் இருப்பாராடா?’’ ‘

‘‘ஆமான்டா! அவரு பொறக்கும்போதே சிடுமூஞ்சியாதான் பொறந்தாராம்’’ என்றான் மற்ற மாணவன். பேசிக்கொண்டே அவர்கள் சத்தமாக சிரித்தும் கொண்டார்கள். ஏதோவொரு பள்ளியில், எங்கோ ஓர் ஆசிரியர் இப்படி இருப்பதை கேலி செய்து பேசிக் கொள்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியர்கள் பலரும் இப்படி சிடுமூஞ்சியாகத்தான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டால், ‘‘நாங்கள் மட்டுமா இப்படி இருக்கிறோம்? எத்தனை அரசு அலுவலர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், வங்கி மேலாளர்கள், வாகன ஓட்டிகள், பேருந்து நடத்துநர்கள் இப்படி சிடுசிடுவென இருக்கிறார்கள். வேலை நெருக்கடி எங்களை இப்படியாக்கிவிட்டது. சிரித்துப் பேசி, நட்புடன் இருந்தால் வேலை நடக்காது சார்’’ என்கிறார்கள்.

கண்டிப்புடன் நடந்துகொள்வது வேறு. கொரில்லாவாக இருப்பது வேறு.

பேருந்தில்,கோயில்களில், ஷாப்பிங் மால்களில் எதிர்படும் முகங்களில் பெரும்பான்மை கசக்கி எறியப்பட்ட காகிதம் போலத்தான் இருக்கிறது. கையெடுத்து வணங்கும்படியான முகத்தை காண்பதே அரிது. ஏதேதோ யோசனைகள், குழப்பங்கள், சிந்தனைகள், கவலை, கோபம், ஆத்திரம் பீறிடும் முகங்களே நம்மை கடந்து செல்கின்றன.

வெட்டவெளியில், கொளுத்தும் வெய்யிலில் ஆடு மேய்க்கும் சிறுமியின் முகத்தில் இப்படியான கோபம் இருப்பது இல்லை. நாள் முழுவதும் இரும்பு அடிக்கும் தொழிலாளி முகத்திலோ, கடலோடி வரும் மீனவர் முகத்திலோ இப்படியான வெறுப்பும், கசப்பும் பீறிடுவது இல்லை. சாலையோரத்தில் வசிப்பவர்கள் ஏழ்மையில் இருந்தபோதும் முகத்தில் பொலிவுடன் இருக்கிறார்கள். படித்த, மத்திய தர மனிதர்களின் முகம்தான் உருமாறிப்போயிருக்கிறது.

தோற்றம் பாதிக்கும்

சந்தோஷமான, மலர்ச்சியான முகங்கள் ஏன் மறைந்துபோயின? ஒரு நாளின் தொடக்கம் என்பது பிரச்சினைகளின் ஆரம்பமாகவே இங்கே பலருக்கும் இருக்கிறது. வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு உரிய நேரத்தில் போய்ச் சேரவேண்டிய பரபரப்பு. சாப்பாட்டில் கவனம் இல்லை. பதற்றம். உடலை பேணாமல் விட்டதால் உருவான நோய்கள். கடன் பிரச்சினை… இப்படி ஆயிரம் சிக்கல்களுக்குள் சுழன்றபடியேதான் நாளைக் கடந்து போகிறார்கள். இந்த நெருக்கடி அவர்களின் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

ஆசிரியர்களின் தோற்றம் என்பது மாணவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடக்கூடியது. அவர்களின் நடை, உடை, பாவனை மாணவர்களைப் பாதிக்கக் கூடியது. அதை உணர்ந்துகொண்டு செயல்படுகிறவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

காந்தியின் புன்னகை

மகாத்மா காந்தியின் புகைப்படங்களைப் பாருங்கள். எத்தனை அழகான புன்னகையுடன் அவரது முகம் ஒளிர்கிறது. ஒரு கருப்பு - வெள்ளை படத்தில் அவரும் நேருவும் அருகருகில் அமர்ந்துகொண்டு, தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். மறக்கவே முடியாத புகைப்படம் அது. அந்த நாட்களில் தேசம் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தது. கண் முன்னே ஆயிரம் பிரச்சினைகள். சிக்கல்கள். போராட்டத்தைத் தலைமையேற்க வேண்டிய சூழல். ஆனாலும், காந்தியின் முகத்தில் இருந்து புன்னகை மறையவே இல்லை.

இறுக்கமான, கோபமான முகத்துடன் இருப்பவர்களை எப்படி திருத்துவது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. தைவானில் சொல்லப்படும் கதை இது.

முன்னொரு காலத்தில் தைவானில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவி மிகவும் கோபக்காரி. வீட்டில் உள்ளவர்களை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கு விருந்தினர்கள் யார் வந்தாலும் கோபித்துக் கொண்டு சண்டையிடுவாள். அவள் சிரித்து ஒருவரும் பார்த்ததே இல்லை. எப்போதும் சிடுசிடுவென்ற முகத்துடன்தான் இருப்பாள். அவளை சாந்தப்படுத்த அவளது கணவனும், பிள்ளைகளும் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால், எதுவுமே பலிக்கவில்லை. ஆகவே, அவர்கள் வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் எவரும் வருவதற்கு பயந்தார்கள்.

இதனால் வணிகன் மனமுடைந்து போனான். அவர்களின் ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வருகை புரிந்தார். பலரும் துறவியிடம் நல்லாசி பெறப் போனார்கள். வணிகனும் சென்றான். அவன் தன் மனைவியைப் பற்றி எடுத்துச் சொல்லி, ‘‘இவளை உங்களால் திருத்த முடியுமா?’’ எனக் கேட்டான்.

‘‘இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. நாளை உன் வீட்டுக்கு சாப்பிட வருகிறேன். உணவு தயார் செய்’’ என்று சொன்னார் துறவி.

சாப்பிட வந்த துறவியை மனைவி அவமானப்படுத்திவிடுவாளோ என வணிகனுக்கு உள்ளுக்குள் பயம். ஆனாலும், மனைவியிடம் ‘‘உன்னதமான சக்திகள் கொண்ட துறவி ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு உணவு படைத்தால், நீ விரும்பியதைத் தருவார்’’ என்று நைசாகப் பேசி, சம்மதம் பெற்று விருந்துக்கு ஏற்பாடு செய்ய வைத்தான்

மறுநாள் துறவி அவனது வீட்டுக்கு வந்தார். சிடுசிடுத்த முகத்துடன் வணிகனின் மனைவி அவரை முறைத்தபடியே சாப்பிட அழைத்தாள்.

துறவி தனது வலது கையை மூடியபடியே சாப்பிட அமர்ந்தார்.

‘‘கையை மூடிக்கொண்டு எப்படி சாப்பிடுவீர்கள்?’’ எனக் கேட்டாள் .

‘‘நீண்ட நாட்களாகவே நான் இந்தக் கையை இறுக்கமாக மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதுவே என் இயல்பாகிவிட்டது. கையை மூடியபடியேதான் சாப்பிடுவேன், வேலைகள் செய்வேன்!’’ என்றார்.

‘‘இது என்ன முட்டாள்தனமான செயல். கையை மூடிக்கொண் டால் எப்படி உணவை எடுத்து சாப்பிட முடியும்? வேலைகள் செய்ய முடியும்? கைகள் எப்போதும் திறந்து இருப்பதுதானே கையினுடைய இயல்பு’’ என, துறவியிடம் கோபமாக கேட்டாள் வணிகனின் மனைவி.

‘‘உண்மைதான்! கை மட்டுமில்லை. முகமும் திறந்துதான் இருக்க வேண்டும். மூடிய கைகளைப் போல இறுக்கமான, கோபமான முகத்தை வைத்துக் கொண்டு நீ சிடுசிடுப்பாக இருப்பது தவறு இல்லையா?

திறந்த கைகளால் ஒன்றை எடுக்கவும், கொடுக்கவும் முடிவது போல, சிரித்த முகத்தால் அன்பை கொடுக்கவும் பெறவும் முடியும். உன் முகம் என்பது உனக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது உலகுக்கு உன்னைக் காட்டும் கண்ணாடி. உனது முகத்தை கொண்டுதான் உலகம் உன்னை அறிந்துகொள்கிறது. மூடிய கைகளைக் கொண்டவனால் எப்படி உணவை சாப்பிட முடியாதோ? அப்படித்தான் சிடுமூஞ்சிகளால் அன்பை தரவே முடியாது!’’ என்றார் துறவி.

அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய தவறு புரிந்தது. அன்று முதல் அவள் தனது சிடுசிடுப்பை மாற்றிக் கொண்டாள். புன்னகை ததும்பும் முகத்துடன் இனிமையாகப் பேசவும் பழகவும் தொடங்கினாள் என்று முடிகிறது அந்தக் கதை.

முதல் புள்ளி

எவ்வளவு பெரிய விஷயத்தை கதை எளிதாக உணர்த்திவிடுகிறது. நம் கைகள் தானே மூடிக்கொள்வது இல்லை. நாம்தான் அதை இறுக்கமாக மூடிக்கொண்டு, பிறருக்கு எதையும் தரக் கூடாது என நினைக்கிறோம். அப்படித்தான் பிறரை வெறுக்கவும், ஒதுக்கவும், துரத்தவும் கோபமான முகத்தைக் கொள்கிறோம்.

மலர்ந்த முகம் என்பது தெளிந்த மனதின் அடையாளம்! கண்ணாடியாக இருந்தாலும் அதை துடைத்து சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முகம் தெரியாமல் போய்விடும். நம் முகமும் அப்படிப்பட்டதுதான். உடலில் சேரும் அழுக்கைப் போக்கிக் கொள்ள தெரிந்த நமக்கு, மனதில் சேரும் கசடுகளை நீக்க ஏன் தெரிவதில்லை?

உங்கள் முகம் உங்களைப் பற்றிய செய்தியை உலகுக்குச் சொல்கிறது என்பதை நீங்கள் முழுமையாக உணருங்கள். தொடங்க வேண்டிய மாற்றத்தின் முதல் புள்ளியாக உங்கள் புன்னகை இருக்கட்டும்!

- கதைகள் பேசும்…

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

இணைய வாசல்: http://www.taiwandc.org/folk.htm

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x