Published : 29 Aug 2017 10:17 AM
Last Updated : 29 Aug 2017 10:17 AM

கடவுளின் நாக்கு 60: உனக்குள்ளிருக்கும் புத்தன்!

வா

ழ்க்கையில் நிகழும் மாற்றங்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் ஒருபோதும் மேன்மை அடைவது இல்லை. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பார் காரல் மார்க்ஸ். மாற்றங்கள் நாம் விரும்பியபடி ஏற்படுபவை அல்ல. அதற்காக நாம் எப்போதும் பாதுகாப்பு வளையம் ஒன்றுக்குள்ளாகவே வசிக்க முடியாது இல்லையா?

மாற்றங்களை எதிர்கொள்ள துணிவற்றவர்கள் முடங்கிவிடுகிறார்கள். மாற்றங்களைத் தேடிப் போகிறவர்கள், மாற்றங்களைக் கண்டு அஞ்சாதவர்கள், மாற்றங்களுக்கு ஏற்ப தன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றிபெறுகிறார்கள்.

எதைக் கைவிடுவது?

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் துயரங்களும் துரதிர்ஷ்டங்களும் வந்து போகவே செய்கின்றன. ஆனாலும், நம்பிக்கையே வாழ்க்கையை முன்னெடுத்துப் போகிறது. வெறும் நம்பிக்கை மட்டும் வாழ்க்கை இல்லை. மாற்றங்களைப் புரிந்துகொண்டு எதை கைவிடுவது? எதை தக்க வைத்துக் கொள்வது? எப்படி மாற்றிக் கொள்வது என்பதை, முடிவு செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்ட மனிதனின் கடமை!

உலகில் எதுவும் மாறவே கூடாது என நினைத்தால், வாழ்க்கை நம் கையைவிட்டுப் போய்விடும். ஆகவே, மாற்றங்களைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம். நாம் எவ்வளவு சீக்கிரம் மாற்றங்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நன்மை பயக்கும்.

மாற்றங்களை எப்போதும் பண்பாடு எளிதாக ஏற்றுக் கொள்வதே இல்லை. பலத்த எதிர்ப்பு உருவாகும். பிரச்சினைகள் கிளம்பும். ஆனால், காலமும் சூழலும் இணைந்து பின்பு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் என்பதே உண்மை. நட்பிலும், வேலையிலும், திருமண வாழ்விலும், சமூக உறவுகளிலும் தேவையான மாற்றங்களை அனுமதிக்க மறுத்தால் நம் வாழ்க்கை நரகம் ஆகிவிடும்.

100 வருஷங்களுக்கு முன்பு, காதல் திருமணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். ஒரு ஊரில் அபூர்வமாக ஒன்றிரண்டு பேர் மட்டுமே காதல் திருமணம் செய்திருப்பார்கள். ஆனால், இன்று காதல் திருமணத்தை பண்பாடு ஏற்றுக் கொண்டுவிட்டது. பாதிக்கும் மேலான திருமணங்கள் காதல் திருமணங்களே. இந்த மாற்றம் ஒரு நாளில் ஏற்பட்டது இல்லை.

தனக்குள் ஓர் உலகம்

சிலர் பிறந்தது முதல் கடைசி வரை தனது சொந்த ஊரைவிட்டு போகவே மாட்டார்கள். சொந்தம் தவிர வேறு யாருடனும் பழக மாட்டார்கள். உள்ளுரைத் தவிர வேறு இடங்களில் வணிகம் செய்ய மாட்டார்கள். இப்படி உலகில் எந்த மாற்றம் வந்தாலும் அவர்கள் தங்கள் உலகுக்குள் மட்டுமே வாழ்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை உலகம் என்பது வெறும் சொல் மட்டுமே. ‘கல்லில் அடித்து வைத்துவிட்டதைப் போல வாழ்கிறார்கள்’ என்று கிராமத்தில் கேலி செய்வார்கள்.

உண்மையில் கற்கள் கூட மாற விரும்புகின்றன. ‘எத்தனை நாட்கள் இப்படியே தெருவோரத்திலேயே கிடப்பது. சலிப்பாக இல்லையா?’ என கற்கள் முணுமுணுப்பதாக ஜென் கதை ஒன்று சொல்கிறது.

ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கதைகள் தத்துவ சார்பு கொண்டவை. ஜென் துறவிகள் ஞானத்தை எளிய மனிதனும் புரிந்துகொள்ளும் வகையில் குட்டிக் கதைகளாக சொன்னார்கள். அப்படி ஒரு ஜென் கதையில் இரண்டு பாறைகளின் வாழ்க்கை எப்படி மாறியது எனக் காட்டப்படுகிறது.

உளி வலி

ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பெரிய பாறைகள் இருந்தன. அவை, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நகராமல் இருந்தன. ஆகவே, வெயிலும் மழையும் அதன் நிறத்தை மாற்றியிருந்தன. ‘எத்தனை காலம் மாற்றமே இல்லாமல் இப்படியே கிடப்பது’ என, ஒரு பாறைக்கு ரொம்பவும் சலிப்பாக இருந்தது.

‘‘என்றைக்காவது நாம் இங்கிருந்து நகர்வோமா?’’ என்று மிகவும் ஏக்கத்தோடு கேட்டது முதற்பாறை. அதற்கு இரண்டாவது பாறை சொன்னது: ‘‘எங்கே போனாலும் இதே வாழ்க்கை தானே. எதற்காக போக வேண்டும்? இப்படியே இருக்கலாம்!’’

ஒரு நாள் பவுத்த ஆலயம் ஒன்றை கட்டுவதற்காக கற்களைத் தேடிக் கொண்டு சிலர் வந்தார்கள். இரண்டு பெரிய பாறைகளையும் பார்த்து உற்சாகமாக சொன்னார்கள்: ‘‘இந்த பாறைகளைக் கொண்டுபோய் சிற்பங்கள் செய்யலாம்!’’

சிற்பி இரண்டு பாறைகளையும் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார்: இதைக் கொண்டு அழகான புத்தனின் சிலையை செய்துவிடலாம். நாளைக்கே வண்டியில் ஏற்றிக்கொண்டு போய்விடலாம்.

சிற்பிகள் திரும்பிச் சென்ற பிறகு முதல் பாறை சொன்னது: ‘ ‘ஆஹா! நாம் நினைத்தது போல மாற்றம் வரப் போகிறது. நாம நகரத்துக்குப் போகப் போகிறோம்.’’

இரண்டாவது பாறை கோபமாக திட்டியது: ‘‘அட முட்டாளே! அவர்களை நம்மை அடித்து உடைத்து செதுக்கி, சிலையாக மாற்றப் போகிறார்கள். உளி கொண்டு செதுக்கினால் எவ்வளவு வலி ஏற்படும் தெரியுமா?’’

அதைக்கேட்ட முதற்பாறை சொன்னது:

‘‘ஆனால், நாம் புத்தனாகிவிட்டால் நம்மை வணங்குவார்களே! இன்று வரை நம்மை யாரும் கண்டுகொள்ளவே இல்லையே. ஒன்றைப் பெறவேண்டுமானால் கஷ்டத்தை, வலியைப் பொறுத்துத்தானே ஆக வேண்டும்!’’

அதைக் கேட்ட இரண்டாவது பாறை, ‘ ‘என்னால் முடியாது. இங்கே சுகமாக இருப்பதைவிட்டு, எதற்கு கஷ்டப்பட வேண்டும்? நாளை அவர்கள் வரும்போது என்னை தூக்க முடியாதபடியே இறுகிப்போய்விடுவேன். எனக்கு இந்த இடமே போதும். இந்த வாழ்க்கையே போதும்!’’ என்று சொன்னது.

‘‘உன்னை என்னால் திருத்த முடியாது. சந்தர்ப்பம் வரும்போது மாறிக் கொள்ளத் தவறினால், நீ விரும்பும்போது சந்தர்ப்பம் உன்னை தேடி வராது’’ என்றது முதற்பாறை.

இரண்டாவது பாறை பிடிவாதமாக அங்கிருந்து மாற விரும்பவில்லை என்றது. மறுநாள் சிற்பிகள் வண்டியோடு வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அசைக்க பார்த்தார்கள். முடியவே இல்லை.

‘‘சரி, கிடைத்து ஒரு பாறை! போதும்’’ என அவர்கள் திரும்பிச் சென்றார்கள்

ஆறு மாத காலம் அந்தப் பாறையை உடைத்து, செதுக்கி, புத்தரின் உருவத்தை அழகுற செதுக்கினார்கள். அந்த நாட்களில் பாறை கண்ணீர்விட்டது. இரண்டாவது பாறை சொன்னதே சரி என புலம்பியது. ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் ஒரு புத்தனின் உருவமாக மாறியதைக் கண்டபோது, அந்தப் பாறையால் நம்பவே முடியவில்லை. ‘நமக்குள் ஒரு புத்தன் மறைந்திருந்தானா?’ என வியந்துபோனது.

சிற்பி தனது சீடர்களிடம்: ‘‘இனிமேல் இந்தச் சிற்பம் இருக்கவேண்டிய இடம் பரிசுத்த ஆலயம்தான்!’’ என்று சொல்ல, அடுத்த வாரமே அந்தப் புத்தனின் சிற்பம் ஆலயத்தில் வைக்கப்பட்டது. வழிபாடு நடத்தப்பட்டது. அன்று முதல் அந்தச் சிலையை ஒவ்வொரு நாளும் பலரும் வழிபடத் தொடங்கினார்கள்.

புதைபடும் கல்

மாறவே கூடாது என நினைத்த பாறை, அதே இடத்தில் அடையாளம் மாறிப்போய் எதற்கும் உதவாத ஒன்றாகக் கிடந்தது. பின்பு, சாலை போடுவதற்காக அதை துண்டு துண்டாக உடைத்துக் கொண்டு போனார்கள். அப்போது அந்தப் பாறை கதறியபடியே சொன்னது:‘ ‘நானும் புத்தனாக மாறவேண்டியவன்தான். ஆனால், எனது பிடிவாதத்தால் மாற மறுத்தேன். இப்போது சிதறுண்டு சாலையில் புதைபடப் போகிறேன். ‘

இந்தக் கதை நாம் மாற்றத்தை எதிர்கொள்ளவும்; உட்படவும் வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறது.

நம்மில் சிலரும் இரண்டாவது பாறையைப் போலவே பிடிவாதமாக, இருக்கும் நிலையே போதும் என நினைக்கிறார்கள். உலகம் அவர்களை ஒருபோதும் உயர்த்திவிடாது என்பதே நிஜம். கஷ்டங்களும் வலியும் சேர்ந்துதான் பாறையைப் புத்தனாக்கியது. நமக்குள்ளும் ஒரு புத்தன் இருக்கிறான்தானே! அவனை செதுக்கி வெளிக்கொண்டு வர நாம் தயாராக வேண்டுமில்லையா..?

- பேசும்…

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x