Published : 20 Aug 2017 11:57 AM
Last Updated : 20 Aug 2017 11:57 AM

‘என் பெயர் காஞ்சரமரம்’: நவீனத்தோடு உரையாடும் பெண்களும் பண்பாடும்!

எழுத்தாளர் கோணங்கியின் எழுத்துகளைத் தழுவி சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகமே ‘என் பெயர் காஞ்சரமரம்’. கோணங்கி, தன் வாழ்க்கையில் சந்தித்த ஏழு பெண்களின் உளவியல் பாங்கையும், அவரது கொமண்டி அப்பத்தாவின் சில வாழ்க்கை அனுபவங்களையும் இந்த நாடகம் நமக்குள் கடத்தி புதிய அனுபவத்தை நமக்குத் தந்துவிடுகிறது.

இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்துவரும் செம்மலர் அன்னம், ப்ரீத்தி கரண், அனுஷா, சந்திரமதி, அபிநயா, தாரணி, தேவகி ஆகிய பெண்களின் பங்களிப்பு தனிச் சிறப்பு கொண்டது. குறிப்பாக, தேவகி கடந்த 30 ஆண்டுகளாகத் வீதி நாடகம், மேடை நாடகம் என்று பங்காற்றிவருகிறார். நாடகத்துக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து, அதையே திருமணம் செய்துகொண்டுவிட்ட இவர், தனது 68-வது வயதில் கொமண்டி அப்பத்தாவாக இந்த நாடகத்தில் தனது உடல்மொழியை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். முருகபூபதியின் நாடகக் குழுவில் பங்களிப்பாளரான பகுருதீனும், தமிழ்த் திரையின் மாற்றுப் பாதையில் நீண்ட காலமாக இயங்கிவரும் இயக்குநர் அருண்மொழியும் இணைந்து இந்த நாடகத்தை இயக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொன்ம வளத்தையும், பண்பாட்டு அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நடிகர்களின் உடல்மொழி அமைந்தது கோணங்கியின் எழுத்துக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்தது.

கரிசல் காட்டின் விளைச்சல் இல்லாத நிலத்தில் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்தபடி ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வறண்ட பூமியில் அலைகிறாள் சென்னம்மாள் (செம்மலர் அன்னம்). பால்யம் முதல் அவள் வளர்த்துவந்த, அவள் வயதுக்கு இணையான காளை மாடு மயங்கி விழுகிறது. வானம் பார்த்த பூமியில் தண்ணீர் தேடி அலைந்தும் அது கிடைக்காத நிலையில், தன் காளையைக் காப்பாற்ற அதன் மூக்கணாங்கயிற்றை இழுக்கிறாள். அப்போது அதனோடு மற்ற மாடுகள் அனைத்தும் மண்புழுக்களாக மாறுகின்றன. இந்நிகழ்வு அரங்கின் வெளிப் பகுதியில் நடைபெறுகிறது. மண்புழுக்களாக மாறிய காளைகள் நம்மை வாயிலிலிருந்து அரங்குக்குள் அழைத்துச் செல்கின்றன. இரண்டு பக்கங்களும் தீப்பந்தம். அரங்கின் உள்ளேயோ அகல்விளக்குகள். தீப்பந்தத்திலிருந்து வரும் மணமும் அகல் விளக்கின் எண்ணெய் வாசனையும் வித்தியாசமான சூழலுக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன.

இப்போது அரங்குக்குள் நுழைந்த மண்புழுக்கள் அனைத்தும் பேய்களாக மாறுகின்றன. கொமண்டி அப்பத்தா பேய்களை ஓட்டுகிறாள். மீண்டும் பேய்கள் அனைத்தும் காளைகளாக மாறி ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அனைத்தும் ஆக்ரோஷம் கொள்கின்றன. சம காலத்தை இணைக்கும் விதமாக கோமாளி (பாலாஜி) ஒருவன், காட்சிகளின் இடையிடையே தோன்றிப் பிணைப்பை உருவாக்குகிறான். அவன் இன்றைய தமிழக அரசியல்வரை பேசிச் சென்றது ஈர்ப்பும் கலகலப்பும் மிக்கது.

காளைகளாக நடித்த ராம், விக்ரம், கமால், கிரி, டென்சில், இளங்குமரன், காளைகளின் தாயாக நடித்த ப்ரீத்தி கரண் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களும் தொடக்கம் முதல் இறுதிவரை உடல் மொழியோடு தங்கள் குரல்வளத்தையும் ஒரே சீராக அமைத்து, சோர்வடையாமல் இருந்தது அவர்களின் நீண்ட நாள் பயிற்சியை, உழைப்பை வெளிப்படுத்தியது. நாடகத்தின் இறுதி ஜல்லிக்கட்டு நிகழ்வை எழுத்தாளர் கோணங்கி, ஊர்க் கூத்தாகக் கொண்டாடும் மக்களில் ஒருவராகப் பார்க்கிறார். பார்வையாளர்களும் அந்த ஊர்க் கூத்தில் பங்கேற்பாளர்களாக மாறும் நாடக அனுபவம் கிடைத்துவிடுகிறது.

இந்த நாடகம் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவருகிறது. சென்னையில் கடந்த ஜூலை 15-ல் நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம், வரும் ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சென்னையில் அமைந்துள்ள ‘கூத்துப்பட்டறை’யில் மீண்டும் நிகழ்த்தப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள ‘ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி’யில் செப்டம்பர் 9-ம் தேதி நிகழ்த்தப்படவிருக்கிறது.

- ஆர்.சி. ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x