Published : 19 Aug 2017 09:33 AM
Last Updated : 19 Aug 2017 09:33 AM

அரிய நூல்களின் இணையவெளி!

.வே.சா. போன்ற ஆளுமைகள் பழந்தமிழ்ச் சுவடிகளுக்காக ஊர்ஊராக நிகழ்த்திய தேடல்களைப் பற்றி நாம் அறிவோம்! இதுபோன்ற தேடல்கள்தான் நம் பழந்தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை நம்மிடையே கொண்டுவந்து சேர்த்தன. சுவடிகளுக்காகத் தனியார் சேகரங்களை நாடிச் சென்றதுபோல் ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் நூலகம் போன்ற நூலகங்களை நாடிச் செல்வதும் நிகழ்ந்தது. இன்னமும் பல்வேறு ஆய்வறிஞர்களின் புகலிடம் இதுபோன்ற நூலகங்கள்தான். இவர்களின் பெருமுயற்சியின் காரணமாகத்தான் காலக்கரையானிடமிருந்து தப்பித்த புத்தகங்கள் பலவும் நமக்கு இன்று கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

இணையத்தின் வரவுக்குப் பிறகு, உலக மொழிகளின் அரிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் அரிய புத்தகங்கள் பலவும் இணைய நூலகங்களில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. இணையத்தின் சாதகமான அம்சங்களுள் இதுவும் ஒன்று.

‘இன்ட்டெர்நெட் ஆர்க்கைவ் லைப்ரரி’ என்ற எண்மய (டிஜிட்டல்) ஆவணக் காப்பகம் ஆய்வாளர்களின் சுரங்கமாக இன்று உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 1996-ல் தொடங்கப்பட்ட லாபநோக்கமற்ற இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் தொன்மையான நூல்களிலிருந்து சமீபத்தில் உரிமை காலாவதியான நூல்கள் வரை பல கோடிக்கணக்கில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஆவணக் காப்பகத்தில் இடம்பெற்றிருக்கும் நூல்களின் மொத்தப் பக்கங்கள் 40 ஆயிரம் கோடியைத் தாண்டும்.

இந்தியா காலனியாதிக்கத்துக்கு ஆட்படுத்தப்பட்ட சிறிது காலத்தில் கீழைத்தேச மொழிகளின் செல்வங்கள்மீது ஆர்வம் கொண்டிருந்த ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஏசியாட்டிக் சொஸைட்டி’ என்ற அமைப்பு. இந்தியாவின் பல்வேறு மொழிகளின் இலக்கிய வளங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் ஆவணப்படுத்தியும் ஏராளமான பணியை இந்த அமைப்பினர் செய்திருக்கிறார்கள். காலனியாதிக்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணிகளின் நோக்கம் கருதப்பட்டாலும் அவற்றின் விளைவாக உலகுக்குக் கிடைத்திருக்கும் நூல்களின் செல்வம் அளப்பரியது. அந்த நூல்களில் பெரும்பாலானவை இன்று அச்சில் கிடைப்பதில்லை. ஆனால், அவற்றில் பலவும் ‘இன்ட்டெர்நெட் ஆர்க்கைவ் லைப்ரரி’யில் கிடைக்கின்றன. இந்தியவியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த ஆவணக் காப்பகம் பெரும் வரப்பிரசாதம்! இதைப் போன்று ‘புராஜெக்ட் கூட்டன்பெர்க், இந்தியாவைச் சேர்ந்த ‘டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ (இந்தத் தளம் தற்போது சீரமைப்பில் இருக்கிறது) போன்ற ஆவணக் காப்பக நூலகங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழுக்கென்றே பிரத்யேகமாக, ‘மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்’, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம், இலங்கை தமிழ் எழுத்துகளை ஆவணப்படுத்தும் ‘நூலகம்.ஓஆர்ஜி’ போன்ற இணைய நூலகங்கள் இருக்கின்றன. இந்த ஆவணக் காப்பகங்களின் நூல்களை இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது இவற்றின் சிறப்பு.

வெளிநாட்டு நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் தேடுவது என்பது எல்லோராலும் இயலாதது. இந்நிலையில் ஆய்வு மாணவர்களும், அரிய நூல்களில் ஆர்வம் கொண்டோரும் இந்த இணைய ஆவணக் காப்பகங்களைப் பயன்படுத்தித் தங்கள் தேடலை வளப்படுத்திக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x