Last Updated : 17 Aug, 2017 09:20 AM

 

Published : 17 Aug 2017 09:20 AM
Last Updated : 17 Aug 2017 09:20 AM

பெண் கதை எனும் பெருங்கதை 07

இந்த வீடு அப்போது ஓட்டையில்லை. நல்லாவே இருந்தது.

கரிசக் காட்டில் வீடுகளை நினைத்த இடத்தில் கட்டிவிட முடியாது. கரிசல் இல்லாத வெள்ளைத் தரைகளில்தான் கட்ட முடியும். பார்த்தாலே தெரிந்துவிடும். கள்ளியும்கூட சரியாக வளராமல் வெக்கரித்துப் போய், ‘இந்த இடம் எமக்கானது இல்லை; மனிதருக்காக’ என்று சொல்லும்.

அந்த இடம் ஓடைகள் வந்துசேரும் இடமாகவும் இருக்க வேண்டும். (நதியின் கரைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு வந்தவன் இவன்!)

அந்த இடத்தில் முதலில் ஒரு குளம் வெட்டுவார்கள். அது ஒரு குட்டையாக இருந்த இடம் என்று பார்த்தாலே தெரிந்துவிடும். இதெல்லாம் ஒரு மாதத்தில் நடந்துவிடும் சமாச்சாரமில்லை. இவர்களைப் பார்த்துத்தான் எறும்புகள் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குளங்கள் அமையும் இடங்கள் யோகத்தைப் பொறுத்தது. ஆசையைப் பொறுத்ததல்ல. மனிதனுக்கு என்றால், குளிக்க ஒன்று, குடிக்க ஒன்று என்று இருக்கணும். கால்நடைகளுக்கு என்றும் தனியாக வேணும்.

முதலில் ஒரு குளம் இரண்டாகும், மத்தியில் ஒரு சுவர் எழுப்பி.

மழைத் தண்ணி ஒரு ருசி என்றால், குளத்துத் தண்ணீர் இன்னொரு ருசி!

இடத்துக்குத் தக்கபடியெல்லாம் தண்ணீருக்கு ருசியும், பெயரும் வந்துவிடும். மலைக்கு மேல் உச்சியிலும் சுனைத் தண்ணீர் என்று கிடைக்கும்.

“நீராவியில் போய் தண்ணீர் எடுத்துக் கொண்டுவா” என்ற

சொல் காதில் விழும்; வீமன் குண்டு என்ற பெயர் ஒரு தண்ணீர்த் துறைக்கு.

குளத்துக்குள்ளே ஒரு கிணறு; தெப்பம் என்ற பெயரில்.

‘தெக்கு, வடக்குத் தெப்பம்

தெய்வ கைலாசத்துக் கொப்பம்

அய்டீ செவல் பார்

ஆனந்தமான இந்த

அய்டீ செவல் பார்...’

- என்று ஒரு பாடல் ஒரு ஊரைப் பற்றி!

குளங்களின் கரைகள் உயர்த்தப்பட்டு, நீடிய ஆயுள்கொண்ட பிரம்மாண்டமான மரக் கன்றுகள் நட்டு அவைகள் வளர்ந்து மேகங்கள் உரசிக்கொண்டு போகும் உயரத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்தாலே ஒரு ஆனந்தம்தான்!

தூரத்தில் நடந்து போகிறவர்களுக்கு அங்கே ஒரு பச்சைக் குன்று போல் தெரிவது ஒரு ஊர் என்று தெரிந்துவிடும். வேனா வெயிலில் போகிறவனைக் கூப்பிட்டு, “இங்கே குளிர்ந்த நிழல் உண்டு, குடிக்க ருசியான நீர் உண்டு வாருங்கொ, வாருங்கொ” என்று அழைப்பதுபோல் இருக்கும்.

ஊர் தோன்றிக் கொண்டிருக்கும் காலத்தில் மாடிகள் இல்லாத கூரை வீடுகள் குச்சில்களாகத்தான் இருக்கும். மாடிகளுக்குப் பதில் பக்கவாட்டில்தான் வளரும் வீடுகள், தொழுக்கள் என்று. ஒன்றுதொட்டு ஒன்றாக மாட்டுக்கு ஒரு தொழு, பசு மாட்டுக்கு ஒன்று எருமை மாட்டுக்கு ஒன்று என்றும், குலுக்கைப் பட்டரைகள், சேர் வீடுகள் சாவடிகள், சாளை, களம், மடம், கோவில், கடை கண்ணி என்றும் ஆகிவிடும்.

பெரிய்ய பெரிய கூட்டுக் குடும்பங்களெல்லாம் இந்த விஸ்தாரமான அகலமான வீடுகளில்தான் குடியிருந்தார்கள்.

குடம் குடமாகத் தண்ணீர் சுமந்தார்கள்; குடம் மாற்றிக் குடமாக, எதிர்க்குடம் மாற்றிக் கொண்டு.

ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்; வேடிக்கைக்காக, திட்டுவதும் வைவதும் கூட ஒரு விளையாட்டுத்தான்!

தெரு உண்டானதுக்குப் பிறகுதான் தெருச் சண்டை வந்தது.

எருதுகட்டு என்று ஒரு விளையாட்டு. கீகாட்டில் உள்ள தரக்குடி என்கிற ஊரில், மூன்று அல்லது அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருக்க.

பார்க்காதவரெல்லாம் பார்க்கப் பிரியப்படுவார்கள். (இப்பவும் நடக்கா என்று தெரியலை)

உறுமி மேளம், திமிரிநாயனம் இவைகள் அடங்கிய நையாண்டி வாத்தியக் குழு முழங்க, இந்த ஆட்டம் தொடங்கும்.

மதியம் நல்ல வெயில் கொளுத்தும்.

அகலமான வட்ட மைதானம். சுற்றிலும் அந்த வட்டகை மக்கள், தூரத்தில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு வந்தவர்கள் - கட்டை வண்டி, கூடார வண்டி, வில்வண்டி, ரேக்களா வண்டி, குதிரை வண்டிகளில் இருந்து வந்திறங்கும் சீமான் வீட்டுப் பிள்ளைகள், ஆணும் பெண்ணும் குழந்தைகளும் வயசான பெரியவர்கள் உட்பட உலகமே கூடி வேடிக்கை பார்க்க வந்திறங்கியது போல இருக்கும்!

வட்ட மைதானத்தின் நட்டநடுவில் மேளக் குழுவினர், இங்கே மாடு ஓடி வராது. பாய்ச்சல் காளையை இரு பக்கமும் ரெண்டு இளவட்டங்க பிடித்துக் கொண்டு வருகிறார்கள். மாட்டைப் பார்த்ததுமே சபைக்குள் கலகலப்பு வந்துவிடும்.

கட்டியக்காரன் சத்தம் போட்டுச் சொல்லுகிறான்: “இது இன்ன ஊர், இன்னாருடைய மாடு, கொம்புக்கு நடுவில் பட்டுத் துணியில் ஒரு தங்கச் சவரன் நாணயம் கட்டப்பட்டிருக்கிறது. தைரியம் உள்ள ஒருவர் வந்து அவிழ்த்துக் கொண்டு போகலாம்” என்று சொல்லி கிடுகட்டியை அடிப்பான்.

கிடுகட்டியின் ஓசையைக் கேட்டதும் சபையில் கூச்சலும் கும்மாளமும் உசுல், ஊளைச் சத்தங்களும் ஆரவாரமும் பிய்த்து வாங்கும்.

இந்தப் பாய்ச்சல் மாடுகளை வளர்ப்பவர்கள் அதை வீட்டு மாடாக ஆக்கிவிடக் கூடாது; காட்டு மாடாகவே வளர்க்க வேண்டும். தொழுவுக்குள் கட்டிப் போடாமல் திறந்த வெளிகளில் மரங்களோடு மரம் செடி சூழ்ந்த சூழ்நிலையில்தான் வளர்க்க வேணும்.

பாய்ச்சல்களிலும் கள்ளப் பாய்ச்சல்மாடாக இருந்தால் இன்னும் விசேடம்.

குறிப்பிட்ட ஒரே மனிதர்தான் அதற்கு தீவனம் போடுதல், தண்ணீர் காட்டுவது, நடை பிடிப்பது, உடம்பு தடவுதல் - தட்டுறது தடவுறது - என்று இருக்கணும்.

மனித வாடைகளில் பல வகைகள் உண்டு. முதலில் விழுந்த அந்த மனிதனுடைய வாடை தவிர வேற்று வாடையை அது ஏற்றுக் கொள்ளாது.

- கதை பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x