Published : 11 Aug 2017 10:23 AM
Last Updated : 11 Aug 2017 10:23 AM

பார்த்திபன் கனவு 16: சித்திர மண்டபம்

 

“ஒன்றுமில்லை, அப்பா! இந்தச் சித்திரங்கள் யார் எழுதியவையென்று யோசித்தேன்” என்றான் விக்கிரமன். “நீ நினைத்தது சரிதான் குழந்தாய். என் கையினால், நானே எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்தப் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும், பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் நான் கண்டு வந்த கனவுகளைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். குழந்தாய்... நன்றாகப் பார். யாருடைய சைன்யங்கள் இவை, தெரிகிறதா?” “ஆஹா தெரிகிறது! முன்னால் புலிக்கொடி போகிறதல்லவா? சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா...” என்று மறுபடியும் தயங்கினான் விக்கிரமன்.

“என்ன கேட்க வேணுமோ, கேள் விக்கிரமா?”

“அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து யானையின் மேல், யானைப் பாகன் மட்டுந் தானே இருக்கிறான். அம்பாரியில் யாரும் இல்லையே, அப்பா!”

“நல்ல கேள்வி கேட்டாய்! வேண்டுமென்றேதான் அப்படி யானையின் மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். இந்தச் சோழ வம்சத்திலே எந்தத் தீரன் இம்மாதிரி பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு திக்விஜயம் செய்வதற்காகக் கிளம்பிப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த யானையின் மேல் எழுதவேணும், குழந்தாய்!

தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகம் உள்ள சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய வம்சம் மிக்க புகழ்வாய்ந்திருந்தது. விக்கிரமா! உன்னுடைய மூதாதைகளிலே கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள். சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும்படியாக அவர்கள் வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்ததில்லை. சோழ சாம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ தூரத்திலுள்ள அரசர்களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன் தூதர்களை அனுப்பி வந்தார்கள். இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது. காவேரிப்பட்டினத்தில் இருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர தேசங்களுக்கு எல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன.

குழந்தாய்! மறுபடியும் இந்தச் சோழநாடு அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டும் என்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை; நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு. அதோ, அந்தச் சித்திரத்தைப் பார்!” இவ்விதம் மகாராஜா ஆவேசம் கொண்டவர்போல் பேசிக் கொண்டு மேலும் மேலும் சித்திரங்களைக் காட்டிக் கொண்டே போனார். அடுத்த சித்திரத்தில், சோழ சைன்யம் ஒரு பெரிய நதியைக் கடக்கும் காட்சி காணப்பட்டது. பிறகு அப்படைகள் பெரியதோர் மலையில் ஏறிச் சென்றன. அப்பால் ஒரு பெரிய யுத்தக் காட்சி காணப்பட்டது. அதிலே சோழர் சைன்யம் வெற்றியடைந்த பிறகு மாற்றரசர்கள் காணிக்கைகளுடன் வந்து சரணாகதி செய்கிறார்கள்.

இம்மாதிரி பல நதிகளைக் தாண்டியும் பல மலைகளைக் கடந்தும் பல மன்னர்களை வென்றும் கடைசியில் சோழ சைன்னியம் இமய மலையை அடைகிறது. பர்வத ராஜாவான இமயத்தின் உச்சியில் சோழர்களின் புலிக்கொடி நாட்டப்படுகிறது. இதற்குப் பிறகு சோழ நாட்டின் தலைநகருக்குச் சைன்யம் திரும்பி வருவதும் நகர மாந்தர் அந்த வீரப்படையை எதிர் கொண்டழைப்பதுமான கோலாகலக் காட்சிகள். இன்னொரு பக்கத்தில் புலிக்கொடி பறக்கும் பெரிய பெரிய கப்பல்கள் துறைமுகங்களில் இருந்து கிளம்பும் காட்சியை அற்புதமாகச் சித்திரித்திருந்தது. அந்தக் கப்பல்கள் தூர தூர தேசங்களுக்குப் போய்ச் சேருகின்றன. அந்தந்தத் தேசங்களின் மன்னர்கள் பரிவாரங்களுடன் எதிர்கொண்டு வந்து சோழநாட்டின் தூதர்களை உபசரிக்கிறார்கள். கடல் சூழ்ந்த அந்நாடுகளில் சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது; புலிக்கொடி பறக்கும் தேசங்களிலெல்லாம் பெரிய பெரிய கோயில்களும் கோபுரங்களும் வானை அளாவி எழுகின்றன.

இத்தகைய அற்புதமான சித்திரங்களே அந்த மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தன. -மீண்டும் அடுத்த வெள்ளியன்று கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x