Last Updated : 21 Jul, 2017 10:22 AM

 

Published : 21 Jul 2017 10:22 AM
Last Updated : 21 Jul 2017 10:22 AM

பார்த்திபன் கனவு- 13

அருள்மொழித் தேவி “வா! அரண்மனைக்குப் போகலாம்! அழுவதற்கும் சமாதானப்படுத் துவதற்கும் இப்போது நேரமில்லை” என்றார் மகாராஜா.

இருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.

பார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது. பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின் இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, “அப்பா! சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே?” என்று கேட்டான். “இதோ நான் வருகிறேன்; விக்கிரமா! நீ முன்னால் போ!” என்றார் மகாராஜா.

விக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திருந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-”தேவி! அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் ‘காலம் வரும் போது சொல்லுகிறேன்!' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்!”

இவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள் இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக, ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.

பார்த்திபன் சொன்னார்: “தேவி! இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகளின் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும், குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அருள்மொழி! இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை.

கப்பங்கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்திர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி! அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்.”

இதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில், “அப்படியே செய்கிறேன்; மகாராஜா!” என்றாள். பார்த்திபன் அப்போது “இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்!” என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x