Published : 25 Apr 2015 09:18 AM
Last Updated : 25 Apr 2015 09:18 AM

35 ஆண்டுகளைக் கடந்த அறிவுக் களஞ்சியம்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்க’ளில் சோவியத் ரஷ்யாவில் அச்சாகிவந்த புத்தகங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. 1990-கள்வரை ரஷ்யாவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம், மிர் பப்ளிகேஷன்ஸ் ஆகிய பெயர்களில் கம்யூனிச தத்துவச் சிந்தனை, இலக்கியம், அறிவியல், குழந்தைப் புத்தகங்கள் கப்பல்கப்பலாகத் தமிழகத்துக்கு வந்திறங்கிக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் அரசியல்-பொருளாதாரச் சிந்தனைகள் பரவலாவதற்கு இந்தப் புத்தகங்கள் முக்கியத் திறவுகோல். இன்றைக்கும் தேடப்படும் பொக்கிஷங்களாகவே இப்புத்தகங்கள் இருக்கின்றன.

கார்ல் மார்க்ஸ் நூலகம்

இப்புத்தகங்களைக் கொண்ட அரிய நூலகத்தைக் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவந்தவர் எஸ்.எஸ். கண்ணன். இவர், கல்வியாளர் ச.சீ. இராஜகோபாலனின் அண்ணன். விடுதலைப் போராட்ட காலத்தில் கல்லூரியில் படித்தபோதே கம்யூனிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்நாடு மின்வாரியத்தில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணிபுரிந்து, 70-களின் இறுதியில் ஓய்வுபெற்ற அவருக்கு தற்போது வயது 92.

அவருடன், தமிழகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரையின் முயற்சியால் 70-களின் இறுதியில் தொடங்கப்பட்டது ‘கார்ல் மார்க்ஸ் நூலகம்'. சென்னை சி.ஐ.டி. நகர் வடக்கு சாலையில் இருந்த எஸ்.எஸ். கண்ணனுடைய வீட்டின் மாடியில், 1980 ஏப்ரல் மாதத்திலிருந்து அது இயங்க ஆரம்பித்தது.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து எழுத்தாளர்களும் இடதுசாரிச் சிந்தனை கொண்ட பல்வேறு இயக்கத்தினரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திவந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஈழத்தில் எதிரெதிர் அணியில் போராடிக் கொண்டிருந்த ஈழ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒரே நேரத்தில் இந்த அறிவுப் பள்ளியில் பாடம் கற்றுச் சென்றுள்ளனர். இவர்களுடன் சென்னை பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த கணக்கற்ற முனைவர், எம்.பில். ஆராய்ச்சிப் பட்டதாரிகள் பயன்பெற்றுள்ளனர்.

வசதியற்ற மாணவர்கள் நூலகத்திலேயே தங்கியும் படித்துள்ளனர். அதற்கெல்லாம் மேலாக, பார்வையற்றவர்களில் எண்ணற்றோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நூலகத்தால் பயன்பெற்றுவருகிறார்கள். எஸ்.எஸ். கண்ணனின் இரு கண்கள் என்று இந்த நூலகத்தையும் பார்வையற்றோருக்கான சேவையையும் குறிப்பிடலாம்.

புதிய களம்

தன் சொந்த செலவில் 7,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், 50-க்கும் மேற்பட்ட இதழ்களைச் சந்தாதாரராகக் கொண்ட இந்த நூலகத்தை அவர் நடத்திவந்தார். முதுமை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக நூலகத்தை அவரால் தனியாகப் பராமரிக்க முடியாத நிலை. இந்த நூலகம் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க வேண்டுமென விரும்பினார். பொதுவுடைமைப் பொக்கிஷமான இந்த நூலகத்தை வெளியில் கொடுத்தாலும், ஒரு சாராருக்கு மட்டுமானதாக அது சுருங்கிவிடக் கூடாது; தன் காலத்தில் இருந்தது போலவே, அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக அரசியல் இயக்கங்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்று அவர் நினைத்தார்.

இந்த நிலையில், பொதுவுடைமைக் கொள்கை சார்ந்து செயல்பட்டுவரும் சென்னையைச் சேர்ந்த சதிஸ்குமார் ஒருங்கிணைப்பில் ஷிரீலா, முத்துவேல், வினோத், விழிவேந்தன், ரமணி, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய இளைஞர்கள் குழு, அவருடைய புத்தகங்களைப் பெற்றுக்கொண்டது. எஸ்.எஸ். கண்ணனின் வீட்டுக்கு அருகிலேயே கண்ணம்மாபேட்டையில் கடந்த 4 மாதங்களாக இந்த நூலகம் செயல்பட்டுவருகிறது. கடந்த டிசம்பர் 7-ம் தேதி எஸ்.எஸ். கண்ணன், எஸ்.வி. ராஜதுரை முன்னிலையில் ‘மார்க்ஸ் நூலகம்' என்ற பெயரில் அது திறக்கப்பட்டது. இந்த நூலகத்தில் எஸ்.எஸ். கண்ணனின் 3,000 புத்தகங்களுடன், புதிதாக 2,000 புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

உழைக்கும் மக்களுக்காக…

பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ‘உழைக்கும் மக்கள் இயக்க’த்தின் (ஒர்க்கிங் கிளாஸ் மூவ்மென்ட்) நூலகத்தைப் போல முன்மாதிரி நூலகமாக இதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இளைஞர்கள் செயல்பட்டுவருகிறார்கள். செயல்பாட்டு மையமாகவும் நூலகத்தை மாற்றும் முயற்சியில் இருக்கிறார்கள்.

எஸ்.எஸ். கண்ணன் காலத்தில் இருந்தது போலவே, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் இந்த நூலகம் முழுக்க முழுக்கத் தன்னார்வச் செயல் பாடாகவே நடந்துவருகிறது. “கம்யூனிஸ்ட் பிரிசம் என்ற பெயரில் மின் புத்தகங்கள் அடங்கிய ஒரு வலைதளத்தை உருவாக்கிவருகிறோம். அச்சில் இல்லாத, முக்கியமான பல நூல்களுடன் இந்த நூலகம் திகழ்ந் தாலும், பெரியார் களஞ்சியம், அம்பேத்கர் களஞ்சியம் போன்றவையும் நூலகத்தைப் பராமரிப் பதற்கான உதவியும் தேவைப்படுகின்றன” என்கிறார் சதிஸ்குமார்.

கனவுகளும் துடிப்பும் கொண்ட இளைஞர்களின் கையில்தான் எஸ்.எஸ். கண்ணன் பாதுகாத்த பொது வுடைமைக் களஞ்சியம் தஞ்சமடைந்திருக்கிறது என்பது நிம்மதி தருகிறது. நூலகங்களின் எதிர்காலத்தையும் சமூகத்தின் எதிர்காலத்தையும் பிரித்துப் பேச முடியாது. அந்த வகையில் இந்த நூலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அந்த இளைஞர்களின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும்கூட.

கார்ல் மார்க்ஸ் நூலகம் பற்றி எழுத்தாளர் வ. கீதா

‘‘எஸ்.எஸ். கண்ணனின் நூலகம், சென்னையில் அமைதியாக நடைபெற்ற மாபெரும் அரசியல் செயல்பாடு. இணையம் போன்ற எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் உலகத் தரம் வாய்ந்த இடதுசாரிப் புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தை இங்கே அவர் நடத்தியதை நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.’’

நூலக முகவரி:
மார்க்ஸ் நூலகம், தமிழ்க் குடில்
6 / 28, புதுத் தெரு, கண்ணம்மாபேட்டை,
(தி.நகர் பேருந்து நிலையத்துக்கு முன்),
தி.நகர், சென்னை. செல்: 9940963131

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x