Published : 04 Jun 2015 10:38 AM
Last Updated : 04 Jun 2015 10:38 AM

வீடில்லா புத்தகங்கள் 35: இமயக் காட்சிகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மாமல்லபுரம் கடற்கரையில் ஒரு ஜெர்மன் இளைஞனைச் சந்தித்தேன். மூன்று மாதங்களாக மாமல்லபுரத்தில் தங்கியிருப்பதாக அவன் சொன்னான்.

‘‘ஏதாவது ஆய்வு செய்கிறாயா..?’’ என்று கேட்டேன். ‘‘இல்லை. இந்தியா வைச் சுற்றிப் பார்க்க வந்த என்னை, இங்குள்ள சிற்பங்களின் அழகு இங்கேயே தங்கவைத்துவிட்டது. மூன்று மாதங்களாகச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இன்னமும் ஏக்கமாகவே உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருஷங்களாவது இங்கேயே வாழ்ந்தால்தான் இந்தக் கலை அழகை முழுமையாக உள் வாங்கிக்கொள்ள முடியும்’’ என்று சொன்னான்.

‘‘அப்படி என்னதான் பார்க்கிறாய்..?’’ எனக் கேட்டேன்.

‘‘சிற்பங்களை ரசிப்பதற்குக் கண்கள் மட்டும் போதாது. அதை உள் வாங்கிக்கொள்ள மனது வேண்டும். அதன் ரகசியக் கதவுகள் திறந்துகொள்ள வேண்டும். பார்த்தும், படித்தும், உணர்ந்தும் அதற்குள்ளாக நம்மைக் கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவள் அழகி எனத் தெரிந்துவிடுகிறது. அவளோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால்போதும் என்றா நினைக்கிறோம்? பேசிப் பழகி, அவளை நம்மோடு அணைத்துக் கொள்ளத் தானே ஆசைப்படுகிறோம்? அப்படிப் பட்டதுதான் சிற்பங்களும். சிற்பங்களில் உறைந்துள்ள புன்னகையை வார்த்தை களால் விவரிக்க இயலாது..’’ என்றான்.

‘‘ஐரோப்பிய சிற்பங்களை விடவும், இவை மேன்மையானது என்கிறாயா..?’’ என்றேன்.

‘‘இத்தாலிய சிற்பங்கள் உடலை முதன்மையாகக் கொண்டவை. ஆகவே நிர்வாணச் சிற்பங்களும், டேவிட் போன்ற உறுதியான ஆண் சிற்பங்களும் கலை அழகுகளாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்திய சிற்பங்களில் உணர்ச்சிகள் பிரதானமாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முகபாவங்களும், உடலின் நளினமும், அரூபத்தை வெளிப்படுத்தும் முறையும் அபாரமான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய சிற்பங்களின் மேன்மையை இந்தியர்கள் உணரவே இல்லை’’ என்றான் அவன்.

அவன் சொன்னது முற்றிலும் உண்மை! நமக்கு நுண்கலைகளை ரசிக்கத் தெரியவில்லை. ஓவியங்கள், சிற்பங்கள், கலை வேலைப்பாடுகள் குறித்து நமக்குக் கவனமும், ஈடுபாடும் துளியும் இல்லை.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கலைநயமிக்கச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை மிச்சமான திருநீற்றை, குங்குமத்தைக் கொட்டி வைக்கும் கிண்ணங்களைப் போலவே நாம் பயன்படுத்துகிறோம். அரிய மூலிகை ஓவியங்கள் மீது வெற்றிலை எச்சிலை துப்புவதும், சுண்ணாம்பு அடித்துக் காலி செய்வதும் எளிதாக நடந்தேறுகிறது. பலநேரம் இந்தச் சிற்பங்களின் மேன்மையை அறியாமல் கை கால்களை உடைத்து, தலையைச் சிதைந்து அலங்கோலமாக்கிவிடுகிறார்கள் சிலர்.

பல்லாயிரத்துக்கும் மேலான அரிய சிற்பங்கள் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. அதுகுறித்த எந்த விழிப் புணர்வும் நமக்கு இல்லை.

ஆண்டுக்குப் பல லட்சம் பேர் வந்துபோகும் மாமல்லபுரம், இன்றைக்கும் புகைப்படம் எடுத்துக்கொள் வதற்கான ஒரு திறந்தவெளி ஸ்டுடியோ போலத்தான் இருக்கிறது. ஏதேதோ ஊர்களில் இருந்து மாமல்லபுரம் வரும் பயணிகளில் ஒரு சதவீதம் பேர் கூட அரிய சிற்பங்களைப் பற்றியோ, அதன் வரலாற்றுச் சிறப்பியல்புகள் குறித்தோ அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதே இல்லை.

தமிழில் நுண்கலைகளைப் பற்றிய புத்தகங்கள் வெகு குறைவு. அரிதாகச் சில நல்ல புத்தகங்கள் வெளியாகும்போதும் அதை வாசகர்கள் கண்டுகொள்வதே இல்லை. மாமல்லபுரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

பேராசிரியர் சா.பாலுசாமி எழுதியுள்ள ‘அர்ச்சுனன் தபசு: மாமல்ல புரத்தின் இமயச் சிற்பம்’ என்கிற புத்தகம், மாமல்லபுரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள புத்தகங்களை விடச் சிறப்பாகவும், சிறந்த ஆய்வு நூலாகவும் உள்ளது. இந்தப் புத்தகத்தை ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மகாபலிபுரச் சிற்பங்கள் எப்போது, யாரால், எப்படிச் செதுக்கப்பட்டன? இங்குள்ள சிற்பத் தொகுதியில் தவம் இயற்றுவது அர்ச்சுனனா, இல்லை பகீரதனா? இங்குச் சித்தரிக்கப்படுவது இமயமா? அர்ச்சுனன் தவம் செய்தது எந்தக் காலத்தில்? இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள், தாவரங்கள் எவை என விரிவாக ஆராய்ந்து விளக்குகிறார் பாலுசாமி.

மகாபலிபுரம் செல்கிற ஒவ்வொரு வரும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய அற்புதமான புத்தகம் இது. இந்தப் புத்தகம் மூன்று விதங்களில் மிக முக்கியமானது. ஒன்று, மாமல்லையின் கலை வரலாற்றை எளிமையாக நமக்கு எடுத்துக் கூறுகிறது. இரண்டாவது, ‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதியினை அங்குல அங்குலமாக எடுத்துக் காட்டி, விளக்கி அதன் அருமை பெருமைகளை அறிமுகம் செய்கிறது. மூன்றாவது, இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள இமயம் சார்ந்த விலங்குகள், தாவரங்கள், வேடர்கள், கங்கையின் இயல்பு பற்றி விரிவான சான்றுகளுடன் ஆய்வுபூர்வமாக விளக்கிக் கூறுகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள ‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிற்பத் தொகுதி யில் உடல் ஒடுங்கிப்போய் எலும்பும் நரம்பும் தெரிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று, இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்கிறான் அர்ச்சுனன். கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து சிவன் நிற்கிறான். சுற்றிலும் பூத கணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே ஓடிவரும் கங்கை ஆறு. இதன் பாதை ஓரத்தில் காணப்படும் நாகர்கள்.

காத்திருக்கும் சூரியன், சந்திரன், தேவர்கள், கின்னரர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள். அதன் ஒரு பக்கம் ஒரு திருமால் கோயில். அதன் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள், யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது என நுட்பமாகக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிற்பத் தொகுதி குறித்து விவரிக்கும் பாலுசாமி இதில் சித்தரிக் கபட்டுள்ள குரங்கு இமயத்தில் காணப் படும் ‘லங்கூர்’ எனப்படும் குரங்குதான் எனச் சான்றுகளுடன் விளக்குகிறார். இதுபோலவே இமயத்தில் உள்ள பன்றி மான், நீல ஆடு, இமாலய எலிமுயல், தேன்பருந்து போன்றவை எப்படி இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதையும் ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுகிறார்.

இதுபோலவே பொய் தவம் செய்யும் பூனை உருவத்துக்கும் மகாபாரதக் கதையில் வரும் பொய்தவப் பூனைக்குமான தொடர்பை எடுத்துக் காட்டுகிறார். கிராதர்கள் எனப்படும் இமய வேடர்கள் குறித்தும், நாகர்கள், மற்றும் கங்கையின் தோற்றம் பற்றியும், இமயம் குறித்த சங்கப் பாடல்கள், மகா பாரத வனபர்வம், காளிதாசனின் வருணனை களுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்.

‘அர்சுனன் தபசு’ சிற்பத் தொகுதியின் இசைவுப் பொருத்தம், சமநிலை, செய்முறை, பன்முகக் கோணங்கள், காலவெளி, இயல் பும் நுட்பமும் குறித்து விரிவான விளக்கங்களைத் தருவது இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழ்ப் புலவர்கள் இமயம் வரை சென்றிருப்பதற்குச் சங்கப் பாடல்களில் நிறையச் சான்றுகள் உள்ளன, சங்கக் கவிதையில் பதிவாக்கியுள்ள இமயம் குறித்த செய்திகள் எப்படி இந்தச் சிற்பத் தொகுதியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன எனச் சான்றுகளுடன் விளக்கியது அரிய கலைச் சாதனை என்றே சொல்வேன்.

கற்கனவாக விளங்கும் மகாபலிபுர சிற்பங்களைப் புரிந்துகொள்வதற்கும், கொண்டாடுவதற்கும் இந்நூல் பெரிதும் உதவி செய்கிறது. அந்த வகையில் மாமல்லபுர சிற்பங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதிய பேராசியர் பாலுசாமி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்!

- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x