Published : 28 May 2015 10:38 AM
Last Updated : 28 May 2015 10:38 AM

வீடில்லா புத்தகங்கள் 34: முராத் எனும் போராளி!

சில புத்தகங்களை வாசித்து முடித்தப் பிறகு வேறு எதையும் சில நாட்களுக்குப் படிக்க விருப்பமே இருக்காது. அத்தனை ஆழமான பாதிப்பை நமக்குள் ஏற்படுத்திவிடும். அது போன்ற ஒன்றுதான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ’ஹாஜி முராத்’.

ஓர் எழுத்தாளனின் முதல் நாவலைப் போலவே அவனது கடைசி நாவலும் முக்கியமானதே. ஆனால், பெரும்பான்மை எழுத்தாளர்களின் கடைசி நாவல் தோற்றுப்போயிருக்கின்றன. இதற்கு ஓர் உதாரணம்தான் ஹெமிங்வே எழுதிய ’தி கார்டன் ஆஃப் ஈடன்’. அவர் இறந்த பிறகே இந்த நாவல் வெளியானது. அதை வாசகர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

டால்ஸ்டாய் இறந்த பிறகு வெளியான நாவல் ’ஹாஜி முராத்’. இந்த நாவலே அவரது மிகச் சிறந்த படைப்பு என ஹெரால்டு ப்ளும் போன்ற இலக்கிய விமர்சகர்கள் கூறுகிறார்கள். தமிழில் இந்த நாவலை மெஹர் ப.யூ.அய்யூப் மொழியாக்கம் செய்திருக்கிறார். என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நாவலை எழுத டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட வருஷங்கள் எவ்வளவு தெரியுமா? எட்டு வருஷங்கள். 200 பக்க அளவுள்ள இந்த நாவலை துணியில் பூ வேலைப்பாடு செய்வது போல அத்தனை நுட்பமாக, வசீகரமாக எழுதியிருக்கிறார்.

டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதியைப் படியெடுத்து எழுதியவர் அவரது மனைவி சோபியா. டால்ஸ்டாய் ’தனது எழுத்து மக்களுக்கானது. அதில் குடும்பத்தினருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என ஓர் உயில் எழுதி வைத்திருந்தார். அதற்குக் காரணமாக இருந்தவர் செர்த்கோ.

இதனை ஏற்க மறுத்த சோபியா, டால்ஸ்டாயின் எழுத்துகளின் வருவாய் தனது குடும்பத்துக்கே வேண்டும் என சண்டையிட்டார். ஆகவே ’ஹாஜி முராத்’ நாவலை வெளியிடும் உரிமை தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என சோபியா ஆசைப்பட்டார்.

ஒருவேளை இந்த நாவல் ஜார் அரசின் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக கூடுமோ என பயந்த டால்ஸ்டாய், இதை தன் வாழ்நாளில் வெளியிடவே இல்லை. அவர் இறந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகே ’ஹாஜி முராத்’ வெளியிடப்பட்டது.

இளமையில் ராணுவப் பணி ஆற்றியபோது டால்ஸ்டாய் காக்கசஸ் பகுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது தான் கண்ட மனிதர்கள், கிடைத்த அனுபவங்களைக் கொண்டே இந்த நாவலின் களத்தை உருவாக்கியிருக்கிறார்.

’அவார்’ இனத் தலைவன் முராத். ரஷ்யர்களிடம் இருந்து விடுதலைப் பெறப் போராடும் ஒரு போராளி. மிகவும் துணிச்சலும் தைரியமும் கொண்டவன். மக்கள் அவனை வழிகாட்டியாக கொண்டாடுகிறார்கள்.

ரஷ்யா கிறிஸ்துவர்கள் நிரம்பிய பகுதி. செச்செனியாவோ இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பிரதேசம். ஆகவே, தங்களின் உரிமையை காத்துக்கொள்ள செச்செனியர்கள் போராடி வந்தார்கள். இதற்கு தலைமை ஏற்றவன் ஷமீல். இவனுடன் இணைந்து ரஷ்யப் படையை எதிர்க்கிறான் ஹாஜிமுராத். ஷமீலின் படை முராதின் சகோதரனை கொன்றதுடன், அவரோடு நட்புறவு கொண்டிருந்த கான்களையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இதனால் ஆத்திரம் அடைகிறான் முராத். ஒரு கட்டத்தில் ஷமீலின் செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனை நேரடியாகவே எதிர்க்கிறான்.

முராத்தை விட்டுவைக்கக் கூடாது என முடிவு செய்த ஷமீல், அவனைக் கொல்ல திட்டமிடுகிறான். இதனை செச்செனியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது இரண்டு இனக் குழுக்களின் பகையாக உருமாறுகிறது.

தன்னைக் கொல்ல துடிக்கும் ஷமீலிடம் இருந்து தப்பித்து, மக்மெத் என்ற மலைக் கிராமத்துக்கு ஹாஜி முராத் வந்து சேர்வதில்தான் இந்த நாவல் தொடங்குகிறது.

ஷமீலின் விசுவாசிகள் நிரம்பிய அந்தக் கிராமத்தில் சாதோ என்ற தனது விசுவாசியின் வீட்டில் அடைக்கலம் ஆகிறான். வீட்டில் பெண்கள் ஹாஜிமுராத்தை உபசரிக்கும் காட்சியும், அவர்கள் தங்களுக்குள் ஹாஜி முராத் குறித்து பேசிக்கொள்வதும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.

இதற்குள் ஹாஜி முராத் தங்கியுள்ள விஷயம் வெளியே கசிந்துவிடுகிறது. தான் அங்கே வந்த நோக்கம், ரஷ்யர்களை சந்திக்க ஒரு ஆள் உதவி செய்ய வேண்டும் என கேட்கிறான் ஹாஜி முராத்.

இதற்காக சாதோவின் சகோதரன் பாதா ரகசியமாக கிளம்பிப் போகிறான். இதற்குள் ஹாஜிமுராத்தை தாக்க ஆட்கள் வீட்டினை முற்றுகையிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஹாஜிமுராத் வெளியேறிப் போகிறான். ஷமீலின் ஆட்கள் துப்பாக்கிகளுடன் துரத்துகிறார்கள். வேறு வழியில்லாமல் முராத் ரஷ்யர்களிடம் தஞ்சமடைகிறான்.

ரஷ்ய இளவரசன் வோரந்த்சோவ் முராத்தை நட்போடு நடத்துகிறான். முராத்தை போன்ற ஒரு வீரமிக்க போராளி தங்களோடு இருந்தால் ஷமீலை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைக்கிறான். ஆனால், இதை ஏற்க மறுத்த அஹமத்கான் என்னும் படைத் தலைவன் ஹாஜி முராத் ஒரு ஒற்றன், அவன் ஒரு துரோகி எனக் கூறுகிறான். இதற்குக் காரணம் அவன் முராத்திடம் சண்டையிட்டு தோற்றவன். இதைக் கேட்ட ஹாஜிமுராத் ஷமீலை மட்டுமில்லை; அஹமத்கானையும் கொல்வேன் என கோபம் கொள்கிறான்.

வீட்டுக் கைதி போல நடத்தப்படும் முராத் ஷமீலைப் பழிவாங்க துடிக்கிறான், ஆனால் ரஷ்ய இளவரசன் அவனை போர்முனைக்கு அனுப்பவில்லை. ஷமீலுடன் மோதுவதற்காக தப்பி போகிறான் ஹாஜிமுராத். ரஷ்யப் படை அவனை துரத்துகிறது. ஒரு பக்கம் ஷமீல்; மறுபக்கம் ரஷ்யப் படை. இரண்டும் அவனை துரோகி என்கிறார்கள்.

முராதின் மனைவியையும் பிள்ளைகளையும் ஷமீலின் ஆட்கள் கொன்றுவிடுகிறார்கள், இரண்டு எதிரிகளுக்கு நடுவே சிக்கி போராடும் ஹாஜி முராத், முடிவில் ரஷ்யப் படையினரால் கொல்லப்படுகிறான். அவனுடைய தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. ரஷ்ய தளபதிகள் இந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

நாவல் இங்கே முடியவில்லை. யுத்தமுனையில் கேட்கும் வெடிச் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் எங்கோ வானம்பாடிகள் பாடத் தொடங்கியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார் டால்ஸ்டாய். அது நம்பிக்கையின் அடையாளம்.

நாவலின் தொடக்கத்தில் உழுது போட்ட நிலத்தைக் கடந்து சென்ற வண்டி ஒன்றின் சக்கரத்தில் சிக்கி பிய்ந்து எறியப்பட்ட தார்த்தாரிய செடி ஒன்றினை குறிப்பிடும் டால்ஸ்டாய், ’அந்தச் செடி ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கையைப் போல் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், நிமிர்ந்து நின்றிருந்தது. தன்னை அழிக்க முயற்சித்தாலும் தான் அடிபணிய மாட்டேன் என்பது போல நின்றிருந்தது.

மனிதன் இதுவரை எத்தனையோ கோடானுகோடி தாவரங்களை நாசம் செய்திருக்கிறான். ஆனால், இந்த ஒன்று மட்டும் சரணடையவில்லை’ என்று வியக்கும் டால்ஸ்டாய் என்றோ காகசஸ் பகுதியில் நடந்த சண்டையையும் ஹாஜிமுராத்தையும் நினைவு கொள்கிறார். அந்தச் செடியின் நினைவுடனே நாவல் முடிவடைகிறது.

அதிகாரத்தின் கொடுங்கரங்களால் வீழ்த்தப்பட்டபோதும், போராளிகள் அடிபணிந்து போவது இல்லை. மரணம் அவர்களை வெற்றிக் கொள்ளமுடியாது. வீழ்த்தி சிரிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

டால்ஸ்டாயின் மேதமை அவரது கடைசி நாவலிலும் பூரணமாகவே வெளிப்பட்டுள்ளது. இந்த நாவலை வாசிக்கும்போது ’உமர் முக்தார்’ திரைப்படம் ஏனோ நினைவில் வந்தபடியே இருந்தது. பிரம்மாண்டமான யுத்த திரைப்படங்கள் உருவாக்க முடியாத நெருக்கத்தை வாசகனுக்கு முழுமையாக உருவாக்கி தருகிறது என்பதே இந்த நாவலின் வெற்றி.

இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

முந்தைய அத்தியாயம்: >வீடில்லா புத்தகங்கள் 33: காற்றுக்கு கண் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x