Last Updated : 06 Aug, 2016 08:58 AM

 

Published : 06 Aug 2016 08:58 AM
Last Updated : 06 Aug 2016 08:58 AM

மேட்டுப்பாளையத்திலும் புத்தகத் திருவிழா கொண்டாட்டம்!

மாவட்ட தலைநகர்களிலும், மாநகரங்களிலும் மட்டுமே நடக்கிற புத்தகத் திருவிழாவை அதே உற்சாகத்தோடு ஒரு மாவட்டத்தின் கடைக்கோடி நகரில் நடத்துகிறது ‘ஆனந்த ஜோதி தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் அமைந்துள்ள இ.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த புத்தகக் காட்சியில் 52 அரங்குகள் அமைந்துள்ளன. ‘தி இந்து’ குழுமத்தின் புத்தக வெளியீடுகள் 14-ஏ எண்ணுள்ள அரங்கில் சிறப்புத் தள்ளுபடி விலையில் அளிக்கப்படுகின்றன.

புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர் முகம்மது பாதுஷா கூறுகையில், ‘தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடுகளை முழுமையாக இளம் தலைமுறையினரிடம் கொண்டுபோக வேண்டும் என்றே இந்த புத்தகக் காட்சிக்குத் திட்டமிட்டோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ‘தமிழ் நாடு அறிவியல் இயக்கம்’ செயல் பட்டுவரும் நிலையில் அதில் மிகவும் வலிமையாக செயல்பட்டுவரும் குழு மேட்டுப் பாளையத்தில் உள்ளதால் இங்கிருந்து புத்தகக் காட்சி ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு புத்தகக் காட்சி நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடந்தது. இந்த முறை அதையும் மிஞ்சி நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தும் முனைப்புடன் ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ மட்டுமல்லாது மேட்டுப்பாளையத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்காக உழைத்துவருகின்றன” என்றார்.

மேட்டுப்பாளையம் புத்தகக் காட்சியை முன்னாள் நீதிபதி சந்துரு, நேற்று தொடங்கிவைத்தார். ஆகஸ்டு 15-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. நாள்தோறும் கவியரங்கம், பட்டிமன்றம், இலக்கிய சொற்பொழிவு போன்ற நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன. கவிஞர் உமா மகேஸ்வரி, பர்வீன் சுல்தானா, நந்தலாலா, பேராசிரியர் அப்துல்காதர், முனைவர் ராமதாசு, கவிதாசன், ரவிக்குமார், இயக்குநர் பாக்யராஜ், ச.தமிழ்ச்செல்வன், மரபின் மைந்தன் முத்தையா, ஜெயந்த பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜ், கோவை சதாசிவம், ஆயிஷா நடராஜன், சுகிசிவம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இஸ்ரோவுக்கு டிக்கெட்!

கடந்த ஆண்டு இந்தப் புத்தகக் காட்சிக்காக, ‘வாசிப்புக்கான சேமிப்புத் திட்டம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் 12 ஆயிரம் பேருக்கு இலவசமாக உண்டியல்கள் வழங்கப்பட்டன. அதில் சேமித்த தொகையைக் கொண்டு மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச்சென்றனர். இதனால், இந்த ஆண்டு உண்டியல் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேமித்த தொகையில் 200 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கும் மாணவர்கள் கோளரங்கக் காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதேபோல அதிக சேமிப்புத் தொகையில் புத்தகம் வாங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) போன்ற பெரிய அறிவியல் மையங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x