Last Updated : 30 Jun, 2015 10:51 AM

 

Published : 30 Jun 2015 10:51 AM
Last Updated : 30 Jun 2015 10:51 AM

மனுசங்க.. 9: காக்கை ரகசியம்

மனிதரை அண்டிப் பிழைக்கும் உயிர் ராசிகளான ஊர்வன, நடப்பன, பறப்பன வரிசையில் கண்ணாடித் தொட்டியில் வைத்து வளர்க்கப்படும் மீனை, எந்த வகையோடு சேர்ப்பது என்று கேட்டேன் நண்பரிடம்.

சிரித்துக்கொண்டே அவர் ‘‘நீந்துவன என்று சொல்லலாமா?’’ எனக் கேட்டார்.

சரி! காக்கையை எதோடு சேர்க்கிறது? அவை, நம்மை அண்டியா பிழைக்கிறது? யாராவது அதுகளைப் பிடித்து வளர்க்கிறார்களா?

திருக்கழுக்குன்றத்தில் இரண்டு கழுகுகள் வந்து மனிதனின் கையால் தரும் உண்டியை வாங்கித் தின்பதைப் பார்த்திருக்கிறோம்.

அவை மலைக்கு வந்து போவதோடு சரி. சில நாட்களில் வராமலே இருந்து விடும். அப்போது அவை பற்றிச் சொல்லும் பதில்:

‘இங்கே யாரோ ஒரு பாவிப் பயல் வந்திருக்காம்; அதனாலதான் கழுகு வரலை.’

அந்தக் கூட்டத்தில் ஒருவர் சொல்லுவார்: போன தடவை கூட நான் வந்திருந்தபோது வந்தது. (தான் பாவி இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்)

மனுசப் பயல் நினைத்தால் புலி, சிங்கங்களோடு கூடப் பழகிவிடுவான் என்பதை சர்க்கஸில் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் காக்கை சமாச்சாரமே வேற. எந்த வேற பறவைக்கும் அது கத்தும் குரலை வைத்துப் பெயர் வந்ததாகத் தெரியவில்லை.

‘கூ’ அல்லது ‘குக்கூ’ என்று குயிலுக்குப் பெயர் வைக்கவில்லை. ‘கிக்கீ’ என்று கிளிக்கு பெயர் வரவில்லை. ‘கா…க்…கா…’ என்று குரல் கொடுத்ததால் காக்கா ஆகிவிட்டது!

மனுசனோடு பழகிய முதல் உயிர்ராசி காக்கைதான் என்று சொல்ல முடியுமா?

மனுசனோடு அது பழகியது போலவும் இருக்கும்; பழகாதது போலவும் நடந்து கொள்ளும். கள்ளமுள்ள பறவை இது.

நமக்குள் என்ன நினைப்பு உருவாகிறது என்பதைக் கண்டுபிடித்துவிடும். அதனால்தான் ‘காக்கை நோக்கறியும்; கொக்கு ‘டப்’ அறியும்’ என்று சொல்லப்பட்டிருக்கு. காக்கைக்கு இன்னொரு மரியாதை உண்டு. சனி பகவானுக்கு அது வாகனமாக அமைந்திருப்பது!

சனியம் பிடிச்சவங்களுக்கு காக்கா மூலமாக ஏதாவது சிபாரிசு நடக்குமா என்று தெரியலை.

காக்காய்க்கு மற்றொரு மரியாதையும் உண்டும். நம்முடைய மூதாதையர்கள் காக்கா வடிவில் நம்மிடம் வந்து நாம் தரும் உண்டியைப் பெற்றுக் கொள்வார்கள் என, இலையில் காக்காய்க்குச் சோறு வைத்துவிட்டு அது உண்ணும் போது, கண்களில் நீர் வடிய மறைந்திருந்து பார்ப்பவர்களைக் கவனித்திருக்கிறேன். நாலைந்து காக்கைகள் வந்துவிட்டால், அவைகளில் எது நம்முடைய சொந்தம் என்று தீர்மானிக்க முடியாது.

ஆசார சீலர்களில் பலர் காக்கைக்குச் சோறு வைக்காமல் சாப்பிடவே மாட்டார்கள்.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி மலேசியாவில் இருந்தபோது, அங்கே இருந்த நம்மவர்களுக்கு காக்காய்கள் இல்லாமல் தீராது. அந்த மண்ணில் காகங்கள் கிடையாது. அதனால், இங்கேயிருந்து அவர்கள் போகும்போது ஒரு கூண்டில் பத்து, இருபது காகங்களைப் பிடித்துக் கொண்டு போவார்களாம். ஒரு வருசத்துக் குள் அவை காணாமல் போய்விடுமாம். அங்கிருந்து காயிதம் வருமாம் இப்படி: ‘அடுத்த கப்பலில் பத்து, இருபது காக்காய்களை அனுப்பவும். உடனே…’ என்று கணக்கப் பிள்ளைகளுக்கு எழுதுவார்களாம்.

எலிக்குக் கோயில் இருப்பதுபோல காக்காய்க்கும் எந்த ஊரிலாவது கோயில் இருக்குமா என்று தெரியலை. எந்தப் பட்சியும் தனது எதிரி மேலே இருந்து வருமா என்று கவனிக்கிறது இல்லை. காக்கை ஒன்றுதான் மேலே பார்க்கும். அதை நாம், கண் சாய்த்துப் பார்க்கிறது அல்லது ஒருச்சாய்த்துப் பார்க்கிறது என்கிறோம்.

அதனுடைய இந்தப் பார்வைக்கு ஒரு கதை உண்டு.

ராமாயண காலத்தில் ஒரு காட்சி:

லட்சுமணன் பழங்கள் சேகரிக்க வனத்தினுள் போய்விட்டான். பர்ணசாலைக்கு எதிரே உள்ள அல்லி மலர்க் குட்டையில் சீதாதேவி குளித்துக் கொண்டிருக்கிறாள். காகம் ஒன்று, குளித்துக் கொண்டிருக்கும் அவளை கண் இமைக்காமல் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராமன் அந்தக் காகத்தைக் கவனித்து விட்டான். சிரிப்பு வந்தது ராமனுக்கு. தரையில் முளைத்திருந்த ஒரு புல்லைப் பறித்து, காகத்தின் கண்ணைக் குறி வைத்து எறிந்தான். ஒரு கண்ணில் பாய்ந்து மறுகண் வழியாக அந்தப் புல்லின் காம்பு வெளியே போய்விழுந்தது.

‘கா…’ என்று கத்தாமல், ‘அய்யோ…’ என்று விழுந்து புரண்டு கதறியது.

என்ன அது என்பதுபோல் பார்த்தாள் சீதை ராமனை.

‘‘ஒன்றுமில்லை; நீ குளித்துவிட்டு வா சொல்றேன்.”

சீதை குளித்துவிட்டு வந்தாள். காகம் மயங்கிக் கிடந்தது. ராமன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஈரத்தை வழித்து ரெண்டு சொட்டு அதன் தலையில் விழும்படி செய்தாள் சீதை.

மூர்ச்சை தெளிந்து காகம் பேசியது:

‘‘ராமா, சீதா ரெண்டுபேரும் என்னை மன்னியுங்கள். நான் திருட்டுத்தனமாகப் பார்த்தது தப்புதான்” என்றது. சீதைக்குத் திகைப்பு. காகங்கள் குளிக்கும்போது நாமும்தான் பார்க்கிறோம் அதுகளை.

‘அய்யோ காக்கைக்கு ரெண்டு கண்ணும் போச்சே’ என்று பரிதவித்த சீதை ‘‘பார்வை கொடுத்து அனுப்புங்கள், போகட்டும்’’ என்று ராமனிடம் கேட்டுக் கொண்டாள்.

‘‘ஒரு கண் மட்டும் கொடுக்கலாம்’’ என்றான் ராமன். என்ன நீங்க என்பதுபோல் புன்னகைத்தாள் சீதை.

சரி; இந்தப் புன்னகைக்காக ரெண்டு கண் பார்வையும் தரலாம். ஆனால், தண்டனையின் வடு என்று ஒன்று இருக்கணும் என்று நினைத்து, ‘‘ரெண்டு கண்ணும் உயிர்ப்பாக இருந்தாலும் அதில் ஒரு கண் மட்டும் பாதிதான் தெரியும். ஆக, ஒண்ணரைக் கண். போ…’’ என்று உத்தரவு கொடுத்து வைத்தான் ராமன். அப்படி வந்தது, காகம் கிடையாது; காகம் வடிவத்தில் வந்த காக்கா அசுரன் என்றும் சொல்லுவார்கள்.

சின்ன வயசிலிருந்தே எனக்கு காக்கையோடு சிநேகம் உண்டு. சிநேகம் என்பது ரெண்டு பக்கமும் இருக்கணும் என்பார்கள். அதில் இன்னொரு சங்கடம், அதைப் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. காரணம், எந்தக் காக்காயைப் பார்த்தாலும் ஒன்று போலவே இருக்கும். எதைச் சொல்லி பெயர் வைக்கிறது.

ஆண் காகம் எது? பெண் காகம் எதுவென்று கண்டுபிடிப்பதும் சிரமம். மற்ற பறவை இனங்களில் ஆண், பெண் கண்டுபிடித்துவிடலாம். மனிதரைத் தவிர மற்ற உயிர் ராசிகளில் ஆண் இனமே பார்க்க அழகாக கம்பீரமாக இருக்கும். பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம்.

காகம் பல விஷயங்களில் நம்முடைய கண்ணைக் கட்டிவிடுகிறது. சேவல் மிதிப்பதைப் பார்க்கலாம். ஆடுகள், மாடுகள் போன்ற நாலுகால் பிராணிகளிலும் பார்க்கலாம். சிட்டுக்குருவியின் தீராத விளையாட்டைப் பார்க்கலாம். காகங்களில் பார்க்கவே முடிவதில்லை. தற்செயலாக ஒரே ஒருமுறை நான் பார்க்கக் கிடைத்தது.

‘பாரதி அன்பர்கள்’ கூட்டத்தில் ஒரு சமயம் பேராசிரியர் பஞ்சு பேசும்போது, போகிறபோக்கில் ஒரு மேற்கோள் போல ஒரு விஷயத்தைக் கூறிச் சென்றார்.

‘‘மனித இனத்தில் மட்டுமே முகத்துக்கு முகம் பார்த்து கூடல் செய்வது என்பது நடக்கிறது’’ என்றார். கேட்டவர்கள் அதைக் கவனிக்காதது போல கேட்டுக் கொண்டார்கள். கேள்வி நேரத்தின்போது கூட விளக்கமாக அதைப் பற்றி கேட்க முடியாமல் போனதுக்கு காரணம் அங்கே பெண்கள் எல்லாம் இருந்ததுதான்.

அலோபதி மருத்துவக் கல்வியின் அடையாள இலச்சினையே இரண்டு பாம்புகள் ஒன்றின் முகத்தை ஒன்று பார்த்துக்கொண்டு இணை சேர்வதுதான். பஞ்சுவின் வீட்டில் நான்கு மருத்துவப் பட்டதாரிகள் இருக்கிறார்கள். எப்படி இதை பஞ்சு பார்க்கத் தவறினார் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். பாம்புகள் மட்டுமில்லை, காகங்கள் கூடுவதும் இப்படித்தான் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

- இன்னும் வருவாங்க…

முந்தைய அத்தியாயம்- >மனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x