Last Updated : 02 May, 2015 10:42 AM

 

Published : 02 May 2015 10:42 AM
Last Updated : 02 May 2015 10:42 AM

பேறுகால வழிகாட்டி, தந்தையர்க்கும் சேர்த்து…

சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்களில் ஒருவர் டாக்டர் கீதா அர்ஜுன். மருத்துவத் துறையில் அறத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் கீதா அர்ஜுனின் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் விளைவாகவும் தொடர்ச்சியாகவும் வெளியான ஆங்கிலப் புத்தகம்தான் ‘பாஸ்போர்ட் டு எ ஹெல்தி பிரெக்னென்சி’. அதன் மொழியாக்கமே இந்நூல்.

பேறுகாலம் என்னும் போராட்டம்

பேறுகாலம் என்பது மன உளைச்சல், உடல் உபாதைகள், எண்ணற்ற சந்தேகங்கள் போன்றவை மட்டுமல்ல; சந்தோஷங்களும் அரிய தருணங்களும் நிரம்பியதுகூட. இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணை அவருடைய தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…’ என்கிறரீதியில் இருக்கும் ஆண்கள் ஏராளம்.

பேறுகாலம் என்பது ஏதோ கர்ப்பிணிப் பெண்களும் அவர்கள் வீட்டாருக்கும் மட்டுமேயான பொறுப்பு எனும் பழமைவாத மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் கீதா அர்ஜுன். பேறுகாலத்துக்கு முழுக்க முழுக்கக் கணவர்தான் பொறுப்பு என்கிறார். குழந்தை பிறந்ததற்குப் பிறகல்ல, குழந்தை உருவாகும் தருணத்திலேதான் தந்தை என்ற ஸ்தானம் ஒருவருக்குக் கிடைக்கிறது. எனவே, அவருடைய பொறுப்பும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.

கருத்தரித்த ஒருசில வாரங்களுக்குள் பெண்களின் உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் விசித்திரமானவை. கர்ப்பிணியை மட்டுமல்ல அவரது கணவரையும் பல சமயங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடக் கூடியவை. அந்தத் தருணங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால் பேறுகாலம் முழுவதுமே மனைவி - கணவன் இருவருக்கும் பெரும் போராட்டமாகப் போய்விடும். மருத்துவர் எப்போதும் நம் கூடவே இருக்க முடியாதல்லவா? ஆகவே, அது போன்ற தருணங்களில் மருத்துவரின் ஒரு நல்ல பிரதிநிதியாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.

சில பெண்களுக்குப் பேறுகாலத் தொடக்கத்தில் வாந்தி என்பது அவ்வளவாகப் பிரச்சினை ஏற்படுத்தாது. ஆனால், சில பெண்களுக்குக் கதையே வேறு, வாட்டி வதைத்துவிடும். ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேலெல்லாம் வாந்தியெடுக்கும் பெண்களும் உண்டு. சாப்பிடவும் மாட்டார்கள். அப்போதெல்லாம் என்ன செய்வது? மருத்துவர் இந் நூலில் பல வழிகளைக் காட்டுகிறார்.

முதல் உதை தரும் பரவசம்

பேறுகாலம் ஏற்படுத்தும் எல்லாப் பிரச்சினைகளையும் மறக்கடிக்கக் கூடியது வயிற்றுக்குள் அந்த சிசு கொடுக்கும் முதல் உதை. சிசுவின் உதைகள் பரவச அனுபவம் மட்டுமல்ல, அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அடையாளமும்கூட. சிசுவிடம் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 20 முறையாவது அசைவுகள் இருக்க வேண்டும். அப்படி அசைவுகள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒரு புறமாகப் படுத்துக்கொண்டால் குழந்தை அசைய ஆரம்பிக்கலாம் என்றும் அப்படியும் அசையவில்லையென்றால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் என்றும் கீதா அர்ஜுன் சொல்கிறார். நல்ல இசை, குழந்தையின் அசைவைத் தூண்டும் என்றும் ஒரு இடத்தில் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

கரு வளர்ச்சியின் நிலை, அப்போது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை வார அடிப்படையில் இந்தப் புத்தகம் பதிவுசெய்கிறது. மருத்துவர் நம் அருகில் எப்போதும் இருக்கிறார் என்ற உணர்வை அதிகமாகக் கொடுப்பது இந்தப் பகுதி.

பேறுகாலம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பது, பேறுகாலத்தில் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கம் முதலானவற்றைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பது போன்றவையும் இந்தப் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஒரு பொறுப்பான தந்தைமை உணர்வை ஆண்களுக்கு ஏற்படுத்துவது இந்த நூலின் சாதனை எனலாம்.



ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு ஒரு வழிகாட்டி
டாக்டர் கீதா அர்ஜுன்
தமிழில்: ஹேமா நரசிம்மன்
விலை: ரூ. 350 வெளியீடு: திருமகள் நிலையம்,
புதிய எண்: 13, சுகான்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்,
சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை-17
தொலைபேசி: 044-24342899

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x