Published : 04 Jan 2015 01:08 PM
Last Updated : 04 Jan 2015 01:08 PM

புதிய நாவல்: ஓ.வி. விஜயனின் கசாக்கின் இதிகாசம்

ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி…

ழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள்.

ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித்துக் கொண்டிருந்தான்.

“அக்கோவ்,” அவன் அழைத்தான், “நீ வந்துட்டியா!”

“எங் கிளியப் பாக்கத்தான நான் வந்துருக்கேன்.” ஆபிதா சொன் னாள். அதைச் சொல்லும்போது, அவளுக்கு என்னமோ உள்ளே குளிர் பட்டதுபோன்றிருந்தது.

“நீயென் தும்பியப் பாருடி,” அப்புக்கிளி காட்டினான். கண்ணாடிக் கண்களுள்ள பெரியதொரு பச்சைத் தும்பி. மங்கிய நினைவைப்போல கண்கள் ஒளிர்ந்தன. யாருடையவோ முன்ஜென்ம நினைவு அது. அவளது அம்மாவுடையதாக இருக்கலாம். அந்தக் கண்கள் அவளை நோக்கின. அவளது துக்கத்தை உட்கொண்டன.

“அட, க்ளியே,” ஆபிதா சொன்னாள், “நீ எத்க்கு அந்த தும்பியப் பிடிக்கறே? பாவம். அத விடு.”

அப்புக்கிளி அழத் தொடங்கினான்.

“ஸெரி, ஸெரி,” அவள் சொன்னாள், “நாவொன்னும் சொல்லல.”

கிளி தெளிந்தான்.

“நீயி தும்பினெ வ்டச் சொல்லுதயோ?” அவன் கேட்டான்.

“இல்ல.”

அவன் சிரித்தான்.

“இந்தா, அக்கோவ்,” அவன் ஒரு பொட்டலத்தைப் பிரித்து அவள் முன்னால் வைத்தான். செண்பகப் பூக்கள்.

“ஓ, எவ்ளோ புவ்வுடா க்ளியே!”

ஆபிதா இடைத்துணியை மடக்கி பூக்களை நிறைத்துக் கொண்டாள். காதுகளில் ஒவ்வொரு பூக்களைச் சூடிக்கொண்டாள். வீட்டுக்கு நடந்தாள்.

“சின்னும்மோ! புவ்வு.”

மைமுனாவும் தங்கயும் அப்போதும் அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். மைமுனா பூக்களை வாங்கி காதில் சூடினாள். தங்கயின் முடியில் சூடினாள். பிறகு ஆபிதாவைப் பார்த்தாள்.

“காதுல என்னாடி?”

“சும்மா வச்சது, சின்னும்மா.”

“ரொம்ப ஆடாதடி, ஆடாத. யாரு பாக்குறதுக்குடி புவ்வு, எல்ம்புக்கூடே?”

ஆபிதா கூடத்திற்குச் சென்று நின்றாள். சாய்த்து வைத்திருந்த துடைப்பத்தை எடுத்துப் பெருக்க முயன்றாள். மீண்டும் துடைப்பத்தை மூலையிலேயே சாய்த்து வைத்தாள். பானையில் கஞ்சி இருந்தது. குளிர்ந்து ஆடை படிந்திருந்தது. கொஞ்சம் குடித்தாள். ருசியில்லை.

அவள் மீண்டும் வெளியே செல்லும் போது எங்கேயென்று மைமுனா கேட்க வில்லை. ஆபிதா அரச மரங்களின் நிழலை நோக்கி நடந்தாள். அங்கே யாருமில்லை. கோடைக் காலத்தில் மட்டும் சில சமயம் அங்கே பாம்புகள் பிணைந்தாட வரும். அரச மரங்களின் நிழலில் அவள் மெதுவாக நடந்தாள். அரச மரங்களின் நிழலில் அவளொரு தும்பியானாள். அவள் யாரின் நினைவு? அவளுடையதே ஆன முற்பிறவியின், துக்கம் நிறைந்த மறுபிறவியின் நினைவு. மீண்டும் அவள் ஓடைப் பக்கம் வந்தாள். காதில் சூடிய பூக்களெடுத்து இதழ் கிள்ளி ஓடையில் தூவினாள்.

“அக்கோவ், நிய்யேந்தப் பூவ தண்ணீலுட்ற?”

அப்புக்கிளி சென்றிருக்கவில்லை.

“ஒண்ணுல்ல, க்ளியே,” அவள் சொன்னாள்.

அவன் பக்கத்தில் வந்து நின்றான்.

“நீ அழக்காருக்கே தெர்யுமா,” அவன் ஆறுதல் சொன்னான். “நாவொன்னக் கத்திக்கிறன், என்னா. நீயென்னக் கத்திக்கமாத்தியா, அக்கோவ்?”

“பின்ன, நான் வேற யாரையாவது கட்டுவனா?”

“நா ஒனக்குப் பூப் பதித்துத் ததேன், என்னா.”

அப்புக்கிளி மீண்டும் தாழம்புதர்களுக்குச் சென்றான். ஆபிதா மீண்டும் அங்கே தனித்தானாள். * * *

விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி குழந்தைகளிடம் சொல்லியிருந்தான். செவ்வாய்க்கிழமை பள்ளி விடும்போது, எங்கே போக வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான்.

“பாலக்காட்டிய்க்கி, ஸார்,” யாரோ சொன்னார்கள்.

“பாலக்காட்டுல என்ன இருக்கு?” ரவி கேட்டான்.

“கோட்ட.”

“கோர்ட்டு.”

“ஆஸ்பத்திரி.”

“அஞ்சுவௌக்கு.”

பலரும் அப்படிச் சொல்லிச் சென்றார்கள்.

“சரி,” ரவி சொன்னான், “வேறங்க போகறதுக்கு இஷ்டம்னு சொல்லுங்க.”

குஞ்ஞாமினா சிரித்தாள்.

“செதலி மலைக்கிப் போலாம், ஸார்,” அவள் சொன்னாள்.

“செதலிக்கா?” ரவி கேட்டான்.

“செய்க் எஜமாவோட அடக்கஸ்தலத்தப் பாக்குறதுக்கு,” அவள் சொன்னாள்.

“சரி,” ரவி சொன்னான், “நாளைக்கிக் காலயில எல்லாரும் சீக்கிரம் வரணும்.”

மறு நாள், பனியில் நனைந்த புல்லில் மிதித்து அவர்கள் மலையேறினார்கள். பாடலில் விருப்பமுள்ள மங்குஸ்தான் பாடினான்:

“பிஸ்மிய்ம் ஹம்தும் ஸலாத்தும் ஸலாமாலும்

பிண்டெ பிறகெ துடங்நுன்னேன் யா அல்லாஹ் -

தச்ரிபு தானோர் ஸஹாபுல்பதர்மால

தீர்த்துமொழியுவான் ஏகணம் நீ அல்லா -

பச்ரிலும் ஜின்னிலும் ஆகெ முர்ஸலாயி

பான நெபீன்ட தணியும் அருளள்ளா.”

குஞ்ஞாமினாவின் முகம் மங்கி துயரார்ந்தது.

“ஸார்,” அவள் சொன்னாள், “மொல்லாக்காவோட பாட்டு ஸார்.”

மங்குஸ்தான் பாடினான். அந்தத் துதிப் பாடலின் திரிபுகள் மர அடர்வுகள் கடந்து கசாக்கை அடைந்தன. கசாக்கின் பனங்காடுகளில் பத்ரீங்கள் போரிட்டார்கள்.

குழந்தைகள் கூட்டமாகச் சேர்ந்து முன்னால் நடந்தார்கள். குஞ்ஞாமினாவும் ரவியும் பின்னால் நடந்து வந்தார்கள். கூட்டம் தவறிச் சில சமயம் அப்புக்கிளி மட்டும் பின்தங்கினான். ரவியையும் குஞ்ஞாமினாவையும் பின்னால் விட்டு குழந்தைகள் வெகு தூரம் சென்றிருந்தார்கள்.

“மொல்லாக்காவோட பாட்ட நெனக்கிறப்போ,”

குஞ்ஞாமினா சொன்னாள், “அழுக வருது.”

அவள் ரவியுடன் சேர்ந்து நடந்தாள். முகமுயர்த்தி ரவியின் முகத்தைப் பார்த்தாள்.

“பாவம்!” அவள் மீண்டும் சொன்னாள்.

வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளை மாமரங்களின் அடர்ந்த நிழல்.

செதலியின் உச்சியை அடைந்தார்கள். அவர்கள் செதலியின் ஸ்தூபிகளுக்கு முன்னால் நின்றார்கள். செய்கு எஜமானின் சமாதிக்காக காற்றும் மழையும் பத்தாயிரம் வருடம் ராவி ராவி இந்த ஸ்தூபிகளைச் செய்தன. அவை பத்தாயிரம் வருடம் அவற்றைப் பாதுகாத்தன. உலோக அம்சத்தின் இழைகளோடிய அந்தப் பாறைகளுக்குள்ளே குகைத் தளத்தில்தான் தங்ஙள்கள் செய்யத்மியான் ஷெய்க்கைக் குடிவைத்தார்கள். ரவியும் பிள்ளைகளும் ஷெய்கின் அடக்க ஸ்தலத்தில் செம்பு நாணயங்கள் எறிந்தார்கள்.

நேரம் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. சிற்றுண்டிக்குப் பிறகு மலையூற்றில் குளியல்.

“பாறையில வழுக்கி விழுந்துடாம ஜாக்கிரதையா இருக்கணும்.” ரவி சொன்னான்.

“ஓ, ஸார்.”

“ஸார் ஸார்,” ஆதம் சொன்னான், “ஒர் பூதமிர்க்கு, ஸார், அந்தத் தண்ணில.”

“ஆமா ஸார்,” ராமன்குட்டி சொன்னான், “தண்ணிப் பூதம் ஸார்.”

“நீர்ப் பறவ உருவமாக்கும், ஸார்,” கதீஜா சொன்னாள்.

“பொய், ஸார்.” கொலுஸு சொன்னாள். “அந்தப் பொண்ணுக்கு பூதத்தோட பிசியம் ஒண்ணுந் தெரியாது, ஸார். அதொரு பாம்புப் பூதமாக்கும் ஸார்.”

“அதுக்கு செறகும் கிரிகிடவும் இரிக்கு, ஸார்.”

“சரி,” ரவி சொன்னான், “யாரும் பூதத்துக்கிட்ட சண்டைக்கிப் போகாதிங்க, கேட்டிங்களா.”

“ஓ, ஸார்.”

பூத்துச் சிவந்த வாகையினடியில் ரவி அமர்ந்தான். சற்று நேரத்திற்குப் பிறகு குஞ்ஞாமினா திரும்பி வந்தாள்.

“என்னா,” ரவி கேட்டான், “தண்ணில குளிக்கப் போகலியா?”

“இல்ல,” அவள் சொன்னாள், “அங்க பூதமிர்க்கும்.”

அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

“என்னா ஒனக்கு?” அவன் கேட்டான்.

“நான் இங்க ஒக்காரட்டுமா?” அவள் கேட்டாள் “ஒங்க பக்கத்துல?”

சட்டென்று ரவிக்கு மனம் உருகியது.

“ஒனக்கு என்னா வருத்தம் ஆமினாக்குட்டி?” அவன் கேட்டான்.

“வருத்தம்,” அவள் சொன்னாள்.

ரவி மெதுவாக அவளைத் தன்னோடு சேர்த்தான். அவள் அவன் மடியிலமர்ந்தாள். மடியில் அவள் கனஸ்பரிசம் நிறைவதுபோலத் தோன்றியது.

“போ குஞ்ஞாமினா,” அவன் சொன்னான், “போய்க் குளி.”

அவள் எழுந்து நின்றாள். அவள் கொஞ்சம் தூரம் நடந்து சென்று பிறகு திரும்பி வந்தாள்.

“எனக்கு முடியல,” அவள் சொன்னாள்.

கண்கள் அசாதாரணமாக ஒளிர்ந்தன.

“என்னா செய்யிது?”

அவளொன்றும் பேசவில்லை. இப்போது கண்கள் நிறைந்தொழுகின.

“அய்யோ, பாரு,” ரவி சமாதானப்படுத்த முயன்றான். “அழுவுறியா?”

குஞ்ஞாமினா தன் அடிவயிற்றில் கையழுத்தினாள். அவள் சற்றே முன் சாய்ந்தாள். ரவி அவளைத் தாங்கினான். திடீரென்று வெள்ளித் தண்டையின் மீது, புறங்காலில், குங்குமப் பொட்டுபோல. ரவி முழித்துப் பார்த்தான். மீண்டுமொரு ரத்தத் துளி கீழே விழுந்தது. குஞ்ஞாமினாவைத் தரையில் அமர்த்தியபோது அவள் அழுதாள். ரவியின் உள்ளங்கை நனைந்திருந்தது. அவன் கையை விரித்து இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். வறண்ட கைரேகைகளுக்கு மேல் ரத்தத்தின் புது மழைத் துளிகள் ஊறிக் கிடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x