Last Updated : 16 Jun, 2017 10:39 AM

 

Published : 16 Jun 2017 10:39 AM
Last Updated : 16 Jun 2017 10:39 AM

பார்த்திபன் கனவு 8: மாரப்ப பூபதி

வாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யவ்வன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசாபாசங்களிலும் மதமாச்சரி யங்களிலும் அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது.

“சேனாதிபதி வரவேணும்” என்று சொல்லிக் கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான்.

“இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே! நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை!” என்று கோபமான குரலில் சொல்லிக்கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த பீடத்தில் அமர்ந்தான்.

“யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பதுபோல் தெரிகிறது!”

“யுவராஜாவா? யார் யுவராஜா? நானா? நேற்றுப் பிறந்த பயல் அல்லவா யுவராஜா? இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க! ஜய விஜயீபவ!” என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு மாரப்ப பூபதி ‘இடி இடி'யென்று சிரித்தான்.

சற்றுப் பொறுத்து, “அது போகட்டும், ஆச்சாரி! உன் சோழி என்ன தெரிவிக்கிறது? அதைச் சொல்லு!” என்றான்.

வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன், சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். சோழிகளை வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது வழக்கம்.

“யுவராஜா! எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு?” என்று ஆரம்பித்தான் கிழவன்.

“அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா? வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா?”

“பார்த்தேன் யுவராஜா! உங்களுக்கு என்ன வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்.”

“முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு என்ன ஆகும்? இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம்? சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி ஆற்றில் எறிந்துவிடுகிறேன்!” என்றான் மாரப்பன்.

“அப்படியே செய்துவிடுங்கள், யுவ ராஜா! எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள்! என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்துவிட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான் மிஞ்சியிருக்கிறது.”

“வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி?” என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது.

“ஏதோ இருக்கிறாள்” என்றான் கிழவன்.

“ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய் வாள்?”

“அதற்கென்ன, யுவராஜா! வள்ளியைக் காப்பாற்றக் கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்!” என்று அழுத்திச் சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.

“ஆமாம், நீ இருக்கும்போது அவளுக்கு என்ன வந்தது? இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையின் முடிவு என்ன ஆகும்? உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு!”

“கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா! உங்களுடைய தொந்தர வினால்தான் மறுபடியும் அதைத் திறந் தேன்!”

“திறந்ததில் என்ன தெரிந்தது?”

“கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு அழிந்து போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவர்கூட திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது.”

“அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர்மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக்கொள்ளப் போகிறார்!”

“யுவராஜா! நீங்களே இப் படிச் சொல்லலாமா? நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் பகைவனுக்கு முன்னால்....”

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x