Last Updated : 05 May, 2017 10:58 AM

 

Published : 05 May 2017 10:58 AM
Last Updated : 05 May 2017 10:58 AM

பார்த்திபன் கனவு 3: ராஜ குடும்பம் - தொடர்ச்சி

படகு கரை சேர்ந்ததும், மெய்க்காவலர்கள் இருவரும் முதலில் இறங்கி, ‘‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா, பராக்!” என்று கூவினார்கள். கரையில் நின்ற வீரர்கள் அவ்வளவு பேரும் கும்பிட்ட கைகளுடன் ‘‘மகாராஜா வெல்க” என்று எதிரொலி செய்தார்கள்.

படகைவிட்டு இறங்கியதும் மகாராஜா பொன்னனுடைய குடிசைப் பக்கம் நோக்கினார். குடிசை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் பேரில் அவருடைய பார்வை விழுந்தது. உடனே கையினால் சமிக்ஞை செய்து அழைத்தார். வள்ளி விரைவாக ஓடிவந்து தண்டனிட்டாள். மகாராஜா எழுந்திருக்கச் சொன்ன வுடன் எழுந்து பொன்னனுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கத்துடன் நின்றாள்.

‘‘வள்ளி! உன்னைப் பொன்னன் நன்றாகப் பார்த்துக் கொள்கிறானா?” என்று மகாராஜா கேட்டார். வள்ளி தலையைக் குனிந்துகொண்டு புன்னகை செய்தாள். பதில் சொல்ல அவளுக்கு நா எழவில்லை. அப்போது மகாராணி ‘‘அவளை அப்படி நீங்கள் கேட்டிருக்கக்கூடாது; பொன்னனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்கிறாயா?” என்று கேட்டால் பதில் சொல்லுவாள்” என்றாள்.

மகாராஜா சிரித்துவிட்டு ‘‘வள்ளி! மகாராணி சொன்னது காதில் விழுந்ததா? பொன்னனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அந்தண்டை இந்தண்டை போக விடாதே. உன்னை வெள்ளத்திலிருந்து கரை சேர்த்தது போல் இன்னும் யாரையாவது கொண்டு வந்து கரை சேர்த்து வைக்கப் போகிறான்!” என்றார்.

வள்ளிக்கு வெட்கம் ஒரு பக்கமும், சந் தோஷம் ஒரு பக்கமும் பிடுங்கித்தின்றன. தேகம் நூறு கோணலாக வளைந்தது.

ஆனால், பொன்னனோ இந்த ஹாஸ்யப் பேச்சைக் கவனித்ததாகவே தெரிய வில்லை. அவன் இரு கரங்களையும் கூப்பி, ‘‘மகாராஜா! ஒரு வரம் கொடுக்க வேணும்! யுத்தத்துக்கு மகாராஜா போகும் போது அடிமையையும் அழைத்துப் போக வேணும்” என்றான்.

மகாராஜா சற்று நிதானித்தார். பிறகு சொன்னார்: ‘‘பொன்னா! உன்னுடைய மனது எனக்குத் தெரியும். ஆனாலும் நீ கேட்ட வரத்தை கொடுக்க முடியாது. நீ இங்கே தான் இருக்க வேண்டும். போர்க்களத்திலிருந்து நான் திரும்பி வராவிட்டால், இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்பு விக்கிறேன் தெரிகிறதா?” என்றார். இதைக் கேட்டதும் பொன்னன் வள்ளி இருவ ருடைய கண்களிலும் நீர் ததும்பிற்று. மகாராணி அருள் மொழித் தேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். அவளுடைய உள்ளத்தில் என்னென்ன சிந்த னைகள் கொந்தளித்து எழுந் தனவோ, யார் கண்டது!

மகாராஜாவும் பரிவாரங் களும் வெகுதூரம் போன பிறகுதான் வள்ளி பழைய வள்ளியானாள். அப்போது பொன்னனைப் பார்த்து, ‘‘பார்த் தாயா! மகாராஜா என்ன சொன் னார்கள்! என்னைக் கேட்காமல் அந்தண்டை இந்தண்டை போகக்கூடாது தெரியுமா?” என்றாள்.

‘‘அப்படியானால் இப்போதே கேட்டு விடுகிறேன். வள்ளி, இன்று மத்தியானம் நான் உறையூர் போக வேண்டும்” என்றான் பொன்னன்.

‘‘உறையூரிலே என்ன?” என்று வள்ளி கேட்டாள்.

‘‘இன்றைக்குப் பெரிய விசேஷமெல்லாம் நடக்கப் போகிறது. காஞ்சியிலிருந்து கப்பம் கேட்பதற்காகத் தூதர்கள் வரப்போகி றார்களாம். மகாராஜா ‘முடியாது' என்று சொல்லப் போகிறாராம். நான் கட்டாயம் போக வேணும்” என்றான் பொன்னன்.

அப்போது வள்ளி இரு கரங்களையும் குவித்துக் கொண்டு குரலைப் பொன்னன் குரல்போல் மாற்றிக் கொண்டு, ‘‘மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேணும்; மகாராஜா யுத்தத்துக்குப் போனால் அடிமையையும் அழைத்துப் போக வேணும்” என்றாள்.

‘‘சே, போ! இப்படி நீ பரிகாசம் செய்வ தாயிருந்தால் நான் போகவில்லை” என்றான் பொன்னன்.

இந்த உறுதியுடனேயே பொன்னன் சாவகாசமாகக் காவேரியாற்றில் இறங்கி நீந்திக் கும்மாளம் போட்டுக் கொண் டிருந்தான். ஆனால், கொஞ்ச நேரத் துக்கெல்லாம் ‘‘டக்டக், டக்டக்” என்ற குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டதும் அவனுக்குச் சொல்ல முடியாத பரபரப்பு உண்டாயிற்று.

கரையேறி ஓடி வந்து பார்த்தான். வள்ளியும் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முதலில் ஒரு குதிரையும், பின்னால் நாலு குதிரைகளும் கிழக்குத் திசையிலிருந்து அதிவேகமாய் வந்தன. முதல் குதிரையின் மேல் இருந்தவன் கையில் சிங்க உருவம் வரைந்து கொடி பிடித்துக் கொண்டிருந்தான். குதிரைகள் உறையூரை நோக்கிப் பறந்தன.

‘‘சிங்கக் கொடி போட்டுக் கொண்டு போகிறார்களே, இவர்கள் யார்?” என்று வள்ளி கேட்டாள்.

மெய்ம்மறந்து நின்ற பொன்னன், திடுக்கிட்டவனாய் ‘‘வள்ளி! இவர்கள்தான் பல்லவ தூதர்கள், நான் எப்படியும் இன்று உறையூர் போகவேணும், நீயும் வேணுமானால் வா! உன் பாட்டனையும் பார்த்ததுபோல இருக்கும்” என்றான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்... | ஓவியங்கள் : பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x