Last Updated : 07 Jul, 2017 10:48 AM

 

Published : 07 Jul 2017 10:48 AM
Last Updated : 07 Jul 2017 10:48 AM

பார்த்திபன் கனவு 11: சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள்!

வள்ளி, “இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா? இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன்.

‘நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு’ என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.”

“இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன்? நீதான் என்னைக் காப்பாற்றவேணும்?” என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

கிழவன், “பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்!” என்றான்.

அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- “வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம் வருகுது! சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல்! வீரவேல்!” - இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.

இந்தப் போர் முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரசு யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னான்:- “வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்” என்றான்.

தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.

இதைப் பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது. அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.

அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.

பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.

“ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்” என்று சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர்தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடை வீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.

மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கேதான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும்போதே பொன்னனுக்கு இரத்தம் கொதித்தது.

“சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?” என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது, தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா?- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x