Published : 31 May 2015 01:08 PM
Last Updated : 31 May 2015 01:08 PM

நுண் சித்தரிப்புகளின் கலை

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மொழி நாவல்களுக்கு க்ராஸ்வேர்ட் என்னும் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிற்து. 2014-ம் ஆண்டுக்கான இந்த விருதை சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பெற்றிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலின் ஆங்கில வடிவம் (மொழியாக்கம்: லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம்) விருது பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நாவல் குறித்த மீள்பார்வை.

சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவல் அதனுடைய நுண் சித்தரிப்பு களால் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு அபூர்வமான தனித்துவ இடத்தைத் தேடிக்கொண்ட படைப்பாகும். கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் தமிழ் பிராமணக் குடும்பங்களின் கதையைக் கோட்டயத்தில் வைத்துச் சொல்லும் இந்த நாவலின் கதை 1937, 1938, 1939 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடக்கிறது. சுந்தர ராமசாமியின் முந்தைய இரண்டு நாவல்களான, ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ ஆகிய நாவல்களிடமிருந்து இந்த நாவல் பெரிதும் வேறுபட்டது. மற்ற இரண்டு நாவல்களிலும் சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் நாம் வாசிக்கும் சமத்காரமான உரைநடை, மேற்கோள் காட்டத்தக்க சிந்தனைச் சிதறல்கள், மெலிதான கேலியுடன் கூடிய பார்வை ஆகிய குணங்களை நாம் இந்த நாவலில் உணர முடிவதில்லை; மாறாக ஒரு பொற்கொல்லனின் கவனத்தோடு கூர்மையாகச் செதுக்கப்பட்ட சித்திரங்களின் வழி காலம் தன் பிரசவ சுருக்கங்களை குழந்தைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையில் விட்டுச்செல்வதை நாம் அவதானிக்கிறோம்.

இந்த நாவலின் பல கதாபாத்திரங்களை நாம் ‘ஜே.ஜே: சில குறிப்புக’ளில் வரும் கதைசொல்லியான பாலுவின் கதையில் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம்; பாலு, பிஷாரடி, சம்பத் எனப் பலர். ஜே.ஜே. என்ற தன் ஆதர்ச எழுத்தாளனை ஜே.ஜே. சில குறிப்புகளில் தேடிச் செல்லும் பாலு சிறுவனாக இருக்கிற பிராயத்தின் கதையாக ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை தொடர்புபடுத்தி நாம் வாசிக்கலாம்.

வாழ்க்கையின் புதிர்தன்மை

சிறுவனாகிய பாலு வளர்கின்ற வீட்டையும், ஊரையும், அவனுடைய உறவினரையும் வைத்து நாவலின் கதை நகர்ந்தாலும் நாவலின் மைய இடத்தைப் பிடித்துக்கொள்பவர்கள் காதலில் விழும் இளம் விதவையான ஆனந்தம் என்ற பெண்ணும், வைத்தியரால் ஓரினப் பால்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காணாமல் போய் இறந்து போகும் லச்சு எனும் சிறுவனும் ஆவர். அரசியல், சமூகம் சார்ந்த புற உலக மாற்றங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் காரணமாகப் பெரும் கொந்தளிப்புகளையும், நவீன சிந்தனைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருந்த காலம் அது. ஆகையால் விதவா மறு விவாகம், பெண்களின் கல்வி போன்ற சமூக தளங்களில் பெரும் மாற்றம் நிகழ்வதையும் அதனால் ஆனந்தத்தின் காதல் சமூக அங்கீகாரம் பெறுவதையும் நாவல் நுட்பமாக விவரிப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் துடியான, புத்திசாலியான லச்சு என்ற சிறுவனின் வாழ்க்கை முளையிலேயெ கருகிப்போவதை எந்த வரலாற்றுப் புறவுலகின் காரணம் என்பது? சுந்தர ராமசாமி லச்சுவின் குழந்தை உலகினை மட்டுமல்லாமல் பல கதாபாத் திரங்களின் மன அவசங்களையும் புதிர்த்தன்மை வாய்ந்தவைகளாகவே நாவலில் தன் நுண் சித்தரிப்புகளின் மூலம் அமைத்திருக்கிறார். இந்தப் புதிர்த்தன்மைகளே ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலின் வாசிப்பனுபவத்தை எப்பொழுதும் எண்ணங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய உயிரோட்டமுடையதாக மாற்று கின்றன.

அகமும் புறமும் முயங்கும் படைப்பு

உதாரணமாக, சிறுவன் பாலு அப்பாவின் கண்டிப்பினாலும், அக்கா ரமணியின் கெட்டிக்கார ‘ஜெகஜ்ஜாலி’த்தனங்களாலும் சதா பயத்திலும் தாழ்வு மனப்பான்மையிலும் மன அவசங்களிலும் உழல்வது சரி. ஆனால் அவன் தந்தை எஸ்.ஆர்.எஸ். ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் நிம்மதியற்றவராக இருக்கிறார்? தன் வறுமையினால் “காட்சிகளை கூர்ந்து கவனிக்கும் பிரயாசையில் தன் விசனத்தைச் சிறிது கரைத்துக்கொள்ள முடியுமா என்ற சோதனையில் ஆழ்ந்திருப்பார் சேது அய்யர். துக்கத்தைத் தீர்க்க சுலபமான பரிகாரம் என்று ஏதும் இல்லை. அதை அனுபவத்துத் தீர்ப்பதைத் தவிர” (பக்கம் 243) என்றிருக்கும் சேது அய்யருக்கு எப்படி உற்சாகம் பீறிடும் லச்சு போல ஒரு மகன்? ஒரு வேளை எஸ்.ஆர்.எஸ். சம்பத்திடம் சொல்வது போல “ மந்த மனம் தரும் நிம்மதியைவிடக் கூர்மையான மனம் தரும் நிம்மதியினமை உலக வளர்ச்சிக்கே அடிப்படை” (பக்கம் 618) என்பது அத்தனை மனிதர்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று

சுந்தர ராமசாமியின் கதாபாத்திரங்கள் சொல் கிறார்களோ? “வாழ்க்கையைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது இரண்டு விஷயங்கள்தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றன. ஒன்று இயற்கை. மற்றொன்று வாழ்க்கையைப் பற்றி சுயமாகச் சிந்திக்கும் ஆத்மாக்கள்” என்று எஸ்.ஆர்.எஸ். சொல்வது நாவலின் கதை சொல்லல் முழுக்க விரவியிருக்கின்றன.

அத்தியாயம் இரண்டில் சிறுவன் பாலுவின் பார்வையில் வரும் வாழைத் தோட்ட வருணணை அழகானது. “வாழைத் தோட்டத்தைச் சுற்றி நிறைய கரிச்சான்கள். அணில்கள் காலை பத்து மணிக்கு மேல்தான் வரத் தொடங்கும். அப்பா ஆபீஸுக்கு போன பின் காகங்கள் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போகும். வௌவால்கள் வெளிச்சம் மங்கும்போது வரும். சருகுகளில் ஊடாடும் ஓணாண்கள். சருகுச் சத்தம் முதலில் பயமாக இருந்தது. போகப்போக பழக்கமாகிவிட்டது. சத்தத்தை வைத்து ஓணாணா அல்லது அணிலா என்று சொல்லிவிடலாம்” இதுபோல நாவல் முழுக்கக் கதாபாத்திரங்களின் பார்வையிலேயே இயற்கை வருணணைகள் அமைந்திருக்கின்றன.

1930களின் கோட்டயத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தையும் நாவல் தருகிறது. கோட்டயத்தின் வீதிகள், திருநக்கரை கோவில், போட் ஜெட்டி, வண்ணார் குடியிருப்புகள் என புற சித்தரிப்புகள் எவ்வளவு நேர்த்தியாக உள்ளனவோ அவற்றைப் போலவே கதாபாத்திரங்களின் செய்கைகள், மனக் குமறல்கள், விம்மல்கள், வேதனைகள் அனைத்தும் துல்லியமாக விவரிக்கப்படுகின்றன. அகமும் புறமும் இவ்வளவு நேர்த்தியாக விவரிக்கப்பட்ட வேறு நாவல் ஒன்றினை ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலுக்கு நிகராகச் சொல்ல இயலாது; அகத்திலோ புறத்திலோ முழுமையாகத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்ட நாவல்களே அதிகம்.

நாவலின் கலை சாதனை

லச்சு காணாமல் போகின்ற அத்தியாயமும், அவன் இறந்துபோகிற அத்தியாயமும் தவிர உணர்ச்சி பீறிடும் நாடகீயங்கள் நாவலில் இல்லை. அது போலவே ஓரிரு அத்தியாயங்களைத் தவிர சிந்தனைக் குறுக்கீடுகளால் மனிதச் செயல்கள் விளக்கப்படுவதில்லை. எஸ்.ஆர்.எஸ்.ஸின் குடும்பம் கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இடம்பெயரும்போது ஒரு பெரும் குடும்ப சகாப்தம் முடிவடைந்துவிடுகிறது. கதை கதையாகவே பூரணமாகவும் புதிராகவும் அழகாகவும் இருக்கிறது.

‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை ஏகதேசமாக ஐந்து குடும்பங்களின் மனித உறவு களை காலமாற்றங்களின் முன்பு வைத்து சொன்ன நாவல் என்று சாராம்சப்படுத்துவது நாவலின் கலை சாதனைக்கு நியாயம் சேர்க்காது. பக்கம் பக்கமாகப் படித்துத் துய்க்க வேண்டிய நாவல் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’.

கட்டுரையாளர்: இயக்குநர், தேசிய நாட்டுபுறவியல் உதவி மையம்,

தொடர்புக்கு: mdmuthukumaraswamy@gmail.com

மே 30: சுந்தர ராமசாமி பிறந்தநாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x